YouVersion Logo
Search Icon

1 சாமுயேல் 31

31
சவுலின் தற்கொலை
1பெலிஸ்தியர் இஸ்ரயேலுக்கு எதிராகப் போரிட்டனர்; இஸ்ரயேல் மக்கள் அவர்களுக்கு முன்பாக தப்பியோடினர், அநேகர் கில்போவா மலையில் வெட்டப்பட்டு விழுந்தனர். 2பெலிஸ்தியர் சவுலையும், அவனுடைய மகன்களையும் பின்தொடர்ந்து துரத்திச்சென்று, சவுலின் மகன்களான யோனத்தானையும், அபினதாபையும், மல்கிசூவாவையும் கொன்றார்கள். 3சவுலைச் சுற்றிலும் யுத்தம் தீவிரமடைந்தது. வில்வீரர்கள் நெருங்கிவந்து அவனைப் படுகாயப்படுத்தினார்கள்.
4அப்பொழுது சவுல் தனது யுத்த ஆயுதங்களைச் சுமப்பவனிடம், “அந்த விருத்தசேதனம் இல்லாதவர்கள் வந்து என்னை அவமானப்படுத்தாதபடிக்கு உனது வாளினால் என்னை உருவக்குத்து” என்றான்.
ஆனால் அவனுடைய யுத்த ஆயுதங்களைச் சுமப்பவன் பயத்தினால் அப்படிச் செய்யவில்லை. எனவே சவுல் தன் சொந்த வாளை எடுத்து அதன்மேல் விழுந்தான். 5சவுல் இறந்ததைக் கண்ட யுத்த ஆயுதம் சுமப்பவன் தானும் தனது வாள்மேல் விழுந்து சவுலோடு இறந்தான். 6இவ்விதமாய்ச் சவுலும் அவனுடைய மூன்று மகன்களும், அவனுடைய யுத்த ஆயுதம் சுமப்பவனும், அவன் மனிதரனைவரும் அன்றையதினம் இறந்தார்கள்.
7இஸ்ரயேல் படைகள் தப்பியோடியதையும், சவுலும் அவன் மூன்று மகன்களும் இறந்ததையும் பள்ளத்தாக்கின் நெடுகிலும், யோர்தானுக்கு அப்பாலும் இருந்த இஸ்ரயேல் மக்கள் கேள்விப்பட்டார்கள். அப்போது அவர்களும் தாங்கள் இருந்த பட்டணங்களைவிட்டு, ஓடிப்போனார்கள். அதன்பின் பெலிஸ்தியர் வந்து அவ்விடங்களில் குடியேறினார்கள்.
8மறுநாள், கொல்லப்பட்ட இஸ்ரயேலரின் உடைமைகளை பெலிஸ்தியர் கொள்ளையிட வந்தபோது, சவுலும், அவனுடைய மூன்று மகன்களும் கில்போவா மலையிலே விழுந்து இறந்துகிடக்கக் கண்டார்கள். 9அவர்கள் சவுலின் தலையை வெட்டி அவனுடைய யுத்த கவசத்தைக் கழற்றி கொள்ளையடித்தார்கள். பின் அவர்கள் தங்கள் விக்கிரகங்கள் இருந்த தங்கள் கோவில்களிலுள்ள மக்களுக்குத் தங்கள் வெற்றியின் செய்தியைப் பரப்பும் பொருட்டு, பெலிஸ்திய நாடெங்கும் தூதுவர்களை அனுப்பினார்கள். 10சவுலின் யுத்த கவசத்தை அஸ்தரோத்தின் கோவிலில் வைத்தார்கள். அவன் உடலை பெத்ஷான் நகரத்தின் மதிலிலே கட்டித் தொங்கவிட்டார்கள்.
11பெலிஸ்தியர் சவுலுக்குச் செய்தவற்றைக் கீலேயாத் யாபேஸ் மக்கள் கேள்விப்பட்டார்கள். 12அப்பொழுது அவர்களில் பலசாலிகளான மனிதர் அனைவரும் இரவு முழுவதும் பயணஞ்செய்து பெத்ஷானுக்குப் போனார்கள். அங்கே மதிலிலிருந்த சவுலின் உடலையும், அவனுடைய மகன்களின் உடல்களையும் எடுத்து யாபேசுக்குக் கொண்டுவந்து, அவற்றை அங்கே தகனம் பண்ணினார்கள். 13அதன்பின் அவர்களுடைய எலும்புகளைப் பொறுக்கி எடுத்து யாபேசிலுள்ள ஒரு தமரிஸ்கு மரத்தின்கீழ் அடக்கம் செய்து, பின் ஏழு நாட்கள் உபவாசம் இருந்தார்கள்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in