YouVersion Logo
Search Icon

2 கொரிந்தியர் 10

10
பவுலின் ஊழியம்
1நான் உங்களுடன் நேருக்குநேர் பேசும்போது, “பயந்த சுபாவமுடையவன்” என்றும், உங்களைவிட்டுத் தூரமாய் இருக்கும்போது, உங்களுடன், “துணிவுடன்” பேசுகிறேன் என்றும் என்னைக் குறித்துச் சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட பவுலாகிய நான் கிறிஸ்துவினுடைய தயவினாலும், சாந்தத்தினாலும் உங்களை வேண்டிக்கொள்கிறதாவது: 2நான் உங்களிடம் வரும்போது, நான் கடுமையாய் நடந்து கொள்ளும்படி என்னைக் கட்டாயப்படுத்த வேண்டாம். ஏனெனில், நாங்கள் உலகப் பிரகாரமாக நடந்துகொள்கிறோம் என்று எண்ணுகிறவர்களோடு, நான் நிச்சயமாக கடுமையாகவே நடந்துகொள்வேன். 3நாங்கள் இந்த உலகத்தில் வாழ்ந்தாலும், நாங்கள் உலகத்தாரைப் போல் போராடுகிறவர்கள் அல்ல. 4எங்களுடைய போராட்டத்தில் நாங்கள் உபயோகிக்கும் ஆயுதங்கள், உலகத்து மனிதர் உபயோகிக்கும் ஆயுதங்கள் அல்ல. மாறாக அரண்களை அழிக்கக்கூடிய இறைவனுடைய வல்லமை பொருந்திய ஆயுதங்களையே நாங்கள் உபயோகிக்கிறோம். 5அவற்றினால் நாம் விவாதங்களையும், இறைவனைப்பற்றிய அறிவை அடைவதற்குத் தடையாக நிற்கும் எல்லா மேட்டிமைகளையும் அழித்துப் போடுகிறோம். நாங்கள் ஒவ்வொரு மனிதனுடைய சிந்தனையையும் கைதியாக்கி கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் செய்கிறோம். 6நீங்கள் எல்லோரும் முழுமையாக உங்களைக் கிறிஸ்துவுக்கு ஒப்படைத்துவிட்ட பின்பு, கீழ்ப்படியாத ஒவ்வொரு செயலுக்கும் தண்டனை கொடுக்க நாங்கள் ஆயத்தமாயிருக்கிறோம்.
7நீங்கள் வெளித்தோற்றத்தை மட்டுமே பார்க்கிறீர்கள். ஒருவன் தான் கிறிஸ்துவுக்குரியவன் என்று நம்பினால், தன்னைப் போலவே நாங்களும் கிறிஸ்துவுக்கு உரியவர்கள் என்று, அவன் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். 8கர்த்தர் எங்களுக்குக் கொடுத்திருக்கிற அதிகாரத்தைக் குறித்து, நான் அளவுக்கதிகமாய் பெருமைப்பாராட்டினாலும், அந்தப் பெருமையைக் குறித்து நான் வெட்கமடைய மாட்டேன். ஏனெனில் உங்களை அழித்துப் போடுவதற்காக அல்ல, உங்களைக் கட்டியெழுப்பவே அவர் அந்த அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார். 9நான் என் கடிதங்களினால் உங்களைப் பயமுறுத்த முயற்சிக்கிறேன் என்று உங்களுக்குத் தோன்றுவதை நான் விரும்பவில்லை. 10ஏனெனில், “அவனுடைய கடிதங்கள் கடுமையும், கண்டிப்பும் நிறைந்தவை. ஆனால் அவன் நேரில் எங்களுடன் பேசும்போதோ, அவன் தோற்றத்தில் கவர்ச்சியில்லாது இருப்பதோடு, அவனுடைய பேச்சும் எடுபடாது” என்று என்னைக் குறித்துச் சிலர் சொல்கிறார்கள். 11நாங்கள் உங்களைவிட்டுத் தூரமாய் இருக்கும்போது கடிதத்தின் மூலமாய் சொல்வதைத்தான், நாங்கள் உங்களுடன் இருக்கும்போதும் செயல்படுத்துவோம் என்பதை அப்படிப்பட்டவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.
12உங்கள் மத்தியில் தங்களை உயர்வாய்க் காட்டிக்கொள்கிறவர்களுடன், எங்களை இணைத்துப் பார்க்கவோ அல்லது ஒப்பிட்டுப் பார்க்கவோ நாங்கள் துணிவதில்லை. அவர்கள் தங்கள் சொந்த அளவீடுகளினாலேயே, தங்களை மதிப்பீடு செய்துகொள்ளும்போதும், தங்களை ஒருவரோடு ஒருவர் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளும்போதும், அவர்கள் கொஞ்சமும் ஞானமில்லாதவர்களாய் இருக்கிறார்களே. 13ஆனால் நாங்களோ, எங்களைப் பொறுத்தவரையில் எல்லைமீறிப் பெருமைபாராட்டுவதில்லை. இறைவன் எங்களுக்கு நியமித்த எல்லையைக் குறித்தே நாங்கள் பெருமை கொள்ளுவோம். அந்த எல்லை உங்களையும் உள்ளடக்குகிறது. 14நாங்கள் தவறாகப் பெருமைப்படவில்லை. நாங்கள் உங்களிடம் வராதிருந்தால், இது உண்மையாய்தான் இருக்கும். ஆனால் நாங்களோ, நீங்கள் இருக்கும் இடம்வரைக்கும், கிறிஸ்துவின் நற்செய்தியுடன் வந்தோமே. 15நாங்கள் மற்றவர்கள் செய்யும் வேலையை, எங்களுக்குரியதாக்கிப் பெருமை கொள்வதில்லை. அது அளவுக்கு மீறிய செயலே. ஆனால், உங்களுடைய விசுவாசம் தொடர்ந்து பெருகவேண்டும் என்பதும், உங்கள் மத்தியில் எங்கள் ஊழியம் வெகுவாக விரிவடைய வேண்டும் என்பதுமே எங்கள் எதிர்பார்ப்பு. 16அதற்குப் பின்பு, உங்களுக்கு அப்பால் இருக்கிற பகுதிகளிலும் நாங்கள் நற்செய்தியைப் பிரசங்கிப்போம். அப்பொழுது, வேறொரு மனிதன் ஏற்கெனவே செய்த ஊழியத்தைக் குறித்து, நாங்கள் பெருமைபாராட்ட இடம் ஏற்படாது. 17வேதவசனம் சொல்கிறபடி, “பெருமைபாராட்ட விரும்புகிறவன், கர்த்தரிலேயே பெருமை பாராட்டட்டும்.”#10:17 எரே. 9:24 18ஏனெனில் தன்னைத்தானே பாராட்டிக் கொள்கிறவன் அல்ல, கர்த்தருடைய பாராட்டைப் பெறுகிறவனே ஏற்றுக்கொள்ளப்படுகிறவன்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for 2 கொரிந்தியர் 10