YouVersion Logo
Search Icon

2 சாமுயேல் 10

10
தாவீது அமோனியர்களை முறியடித்தல்
1சிறிது காலத்திற்கு பின்பு அம்மோனியரின் அரசன் இறந்தான்; அவன் மகன் ஆனூன் அவனுடைய இடத்தில் அரசனானான். 2அப்பொழுது தாவீது: “ஆனூனின் தகப்பன் நாகாஸ் எனக்குத் தயவுகாட்டியதுபோல் நானும் அவனுக்குத் தயவுகாட்டுவேன் என நினைத்தான்.” எனவே ஆனூனின் தகப்பன் இறந்ததற்காக அவனுக்கு தன் அனுதாபத்தைத் தெரிவிக்கும்படி தாவீது ஒருசில பிரதிநிதிகளை அனுப்பினான்.
தாவீதின் மனிதர்கள் அம்மோனியரின் நாட்டை அடைந்தார்கள். 3அப்பொழுது அம்மோனியரின் அதிகாரிகள் தங்கள் தலைவனான ஆனூனிடம், “தாவீது உமது தகப்பனைக் கனம்பண்ணியதால் தன் அனுதாபத்தைத் தெரிவிக்கும்படி, தன் மனிதர்களை உம்மிடம் அனுப்பியிருக்கிறான் என நீர் நினைக்கிறீரோ? தாவீது இந்தப் பட்டணத்தைப்பற்றி அறியவும், வேவுபார்த்து அதைக் கவிழ்க்கவும் அல்லவோ அவர்களை அனுப்பியுள்ளான்” என்றார்கள். 4எனவே ஆனூன் தாவீதின் மனிதரைப் பிடித்து அவர்கள் தாடியின் பாதியைச் சிரைத்து, அவர்களுடைய உடைகளின் பின்பக்கத்தில் இடுப்புக்குக் கீழேயுள்ள பகுதியை கத்தரித்துவிட்டு, அவர்களை வெளியே துரத்திவிட்டான்.
5இது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, அந்த மனிதர்கள் மிகவும் அவமானமடைந்தபடியால், அவர்களைச் சந்திக்கும்படி தூதுவரை அனுப்பினான். “உங்கள் தாடி வளரும்வரை நீங்கள் எரிகோவில் தங்கியிருந்து அதன்பின் வாருங்கள்” என்று அரசன் அவர்களிடம் சொல்லச் சொன்னான்.
6அம்மோனியர் தாங்கள் தாவீதுக்கு அருவருப்பானதை உணர்ந்தபோது, பெத்ரேகோபிலிருந்தும், சோபாவிலிருந்தும் இருபதாயிரம் சீரிய காலாட்படைகளைக் கூலிக்கு அமர்த்தினார்கள். அத்துடன் மாக்கா அரசனோடு ஆயிரம்பேரையும், தோப்பில் பன்னிரெண்டாயிரம்பேரையும் கூலிக்கு அமர்த்தினார்கள்.
7இதைக் கேள்விப்பட்ட தாவீது, யோவாபையும் போர்த் திறமையுள்ள முழு இராணுவத்தையும் அனுப்பினான். 8அம்மோனியர் வெளியே வந்து பட்டண வாசலில் அணிவகுத்து நின்றார்கள். ஆனாலும் சோபாவிலிருந்தும் ரேகோபிலிருந்தும் வந்த சீரியரும், தோபையும் மாக்காவையும் சேர்ந்த மனிதரும் தாங்களாகவே நாட்டின் திறந்தவெளியில் நின்றார்கள்.
9அப்பொழுது யோவாப் தனக்கு முன்னும் பின்னும் எதிரிகளின் படை அணிவகுத்து நிற்பதைக் கண்டதும், இஸ்ரயேலின் இராணுவவீரரில் திறமைமிக்க சிலரைத் தெரிந்தெடுத்து, அவர்களை சீரியருக்கு எதிராக அணிவகுத்து நிற்கச் செய்தான். 10மற்ற இராணுவவீரரை தன் சகோதரன் அபிசாயின் தலைமையின்கீழ் அம்மோனியருக்கு எதிராக அணிவகுத்து நிற்கச் செய்தான். 11பின்பு யோவாப் தன் சகோதரனிடம், “சீரியர் என்னிலும் பலமுள்ளவர்களாயிருந்தால் நீ என்னை விடுவிக்க வரவேண்டும்; அம்மோனியர் உன்னிலும் மிக பலமுள்ளவர்களாயிருந்தால் நான் உன்னை விடுவிக்க வருவேன். 12ஆனாலும் தைரியமாய் இரு; நமது மக்களுக்காகவும், இறைவனின் பட்டணங்களுக்காகவும், தைரியமாக போரிடுவோம். யெகோவா தன் பார்வைக்கு நலமானபடிச் செய்வார்” என்றான்.
13எனவே யோவாபும், அவனோடிருந்த இராணுவவீரரும் சீரியருடன் போரிட முன்னேறியபோது, சீரியர் அவனுக்கு முன்பாக தப்பி ஓடினார்கள். 14சீரியர் தப்பியோடுவதை அம்மோனியர் கண்டபோது, அவர்களும் அபிசாயிக்கு முன்பாக தப்பியோடி பட்டணத்திற்குள் நுழைந்தார்கள். எனவே யோவாப் அம்மோனியருடன் போரிட்டபின் எருசலேமுக்கு திரும்பிவந்தான்.
15அப்பொழுது தாங்கள் இஸ்ரயேலரால் முறியடிக்கப்பட்டதைக் கண்ட சீரியர் மறுபடியும் ஒன்றுகூடினார்கள். 16ஆதாதேசர், யூப்பிரடீஸ் நதிக்கு அப்பாலிருந்து சீரியரை வரச்செய்தான்; அவர்கள் ஏலாமுக்கு வந்தார்கள். ஆதாதேசரின் படைத்தளபதி சோபாக் அவர்களை நடத்திச் சென்றான்.
17இது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் இஸ்ரயேலரையெல்லாம் ஒன்றுசேர்த்து யோர்தான் நதியைக் கடந்து ஏலாமுக்குப் போனான்; அப்பொழுது சீரியர் தாவீதை எதிர்கொண்டு அணிவகுத்து நின்று போரிட்டார்கள். 18ஆனால் சீரியர் இஸ்ரயேலருக்கு முன்பாகத் தப்பி ஓடினார்கள். தாவீது அவர்களின் எழுநூறு தேர்ப்படை வீரர்களையும் நாற்பதாயிரம் குதிரைப்படை வீரர்களையும்#10:18 சில எபிரெய வேதத்தின் கிரேக்க பிரதிகளில் காலாட்படை வீரர்கள் என்றுள்ளது. கொன்று, படைத்தளபதி சோபாகையும் அடித்தான். அவன் அங்கே இறந்தான். 19ஆதாதேசருக்கு வரி செலுத்திய அரசர்கள் அனைவரும் தாங்கள் இஸ்ரயேலரால் தோற்கடிக்கப்பட்டதைக் கண்டபோது, அவர்கள் இஸ்ரயேலருடன் சமாதானம் செய்து அவர்களின் ஆட்சிக்குக் கீழ்ப்பட்டார்கள்.
எனவே அம்மோனியருக்கு மேலும் உதவிசெய்ய சீரியர் பயந்தார்கள்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for 2 சாமுயேல் 10