YouVersion Logo
Search Icon

2 சாமுயேல் 7

7
தாவீதுக்கு இறைவனின் வாக்குறுதி
1தாவீது அரசன் தனது அரண்மனையில் குடியமர்ந்தான். யெகோவா அவனைச் சுற்றிலுமிருந்த பகைவர்கள் எல்லோரிடமிருந்தும் அவனுக்கு ஆறுதல் கொடுத்தார். 2அதன்பின் அரசன், இறைவாக்கினனான நாத்தானிடம், “இதோ நான் கேதுருமர அரண்மனையில் குடியிருக்கையில், இறைவனின் பெட்டியோ இன்னும் கூடாரத்திலேயே இருக்கிறது” என்றான்.
3அதற்கு நாத்தான் அரசனிடம், “உன்னுடைய மனதில் இருப்பவை எதுவோ, அதைச் செய்; யெகோவா உன்னுடன் இருக்கிறார்” என்றான்.
4அன்று இரவே நாத்தானுக்கு, யெகோவாவின் வார்த்தை வந்தது:
5“நீ போய் என் அடியவன் தாவீதிடம் சொல்லவேண்டியதாவது: ‘யெகோவா சொல்வது இதுவே: நான் வசிப்பதற்கான வீட்டைக் கட்டுகிறவன் நீ தானோ? 6இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து அழைத்துவந்த நாளிலிருந்து, இன்றுவரை நான் ஒரு வீட்டில் வசிக்கவில்லை. கூடாரத்தையே என் உறைவிடமாக்கிக்கொண்டு நான் இடம்விட்டு இடம் வசித்துக்கொண்டிருக்கிறேன். 7நான் இஸ்ரயேல் மக்களுடன் பயணம் செய்த இடமெல்லாம் என் மக்களான இஸ்ரயேலரை வழிநடத்தும்படி நான் ஆளுநர்களை நியமித்தேன். அவர்களிடம், “எனக்காக கேதுரு மரங்களினால் ஒரு வீட்டை நீங்கள் ஏன் கட்டவில்லை?” என எப்போதாவது கேட்டதுண்டோ’ என்றார்.
8“இப்பொழுதும் நீ என் அடியானாகிய தாவீதிடம் சென்று, ‘சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: என் மக்களாகிய இஸ்ரயேலரின்மேல் அதிபதியாயிருக்கும்படி புல்வெளியில் மந்தையை மேய்த்துக்கொண்டிருந்த உன்னை தெரிந்தெடுத்தேன். 9நீ சென்ற இடங்களிலெல்லாம் நான் உன்னோடுகூட இருந்து உன் பகைவரையெல்லாம் உனக்கு முன்பாக அழித்தேன். இப்பொழுது பூமியிலுள்ள மேன்மையானவர்களின் பெயருக்கு ஒப்பாக உனது பெயரை மேன்மைப்படுத்துவேன். 10நான் எனது மக்களாகிய இஸ்ரயேலருக்கு ஒரு இடத்தை ஏற்படுத்தி, அங்கு அவர்களை நிலைநாட்டுவேன். அப்பொழுது அவர்களுக்கு ஒரு சொந்த இருப்பிடம் இருக்கும். அவர்களை ஒருவரும் தொல்லைப்படுத்தமாட்டார்கள். முன்பு அவர்களை கொடியவர்கள் ஒடுக்கியதுபோல் இனி ஒருபோதும் ஒருவரும் ஒடுக்கமாட்டார்கள். 11என் மக்களாகிய இஸ்ரயேலருக்கு மேலாக தலைவர்களை நான் ஏற்படுத்திய காலத்திலிருந்து நடந்ததுபோல, அந்தக் கொடியவர்கள் அவர்களை இனிமேலும் ஒடுக்கமாட்டார்கள். உன்னுடைய எல்லாப் பகைவரிடமிருந்தும் நான் உனக்கு ஆறுதல் தருவேன்.
“ ‘மேலும் யெகோவா அறிவிக்கிறதாவது: யெகோவாவே உனக்கு ஒரு வீட்டைக் கட்டுவார்.#7:11 கட்டுவார் என்றால் உன் வம்சம் தொடர்ந்து ஆளும் என்று அர்த்தம் 12உனது வாழ்நாள் முடிவுற்று நீ உன் முற்பிதாக்களுடன் படுத்திருக்கும்போது, உனக்கு பிறக்கும் உன் சந்ததியில் ஒருவனை நான் எழுப்பி, அவனுடைய அரசை நான் நிலைநாட்டுவேன். 13அவனே என் பெயருக்காக ஒரு ஆலயத்தைக் கட்டுவான். அவனுடைய அரசாட்சியின் அரியணையை நான் என்றென்றும் நிலைநிறுத்துவேன். 14நான் அவனுக்குத் தகப்பனாயிருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான். அவன் அநியாயம் செய்கிறபோது, மனிதர் பயன்படுத்தும் தடியினாலும் கசையடியினாலும் அவனை நான் தண்டிப்பேன். 15இருப்பினும் உனக்கு முன்னதாக நான் அகற்றிய சவுலிடமிருந்து எனது அன்பை அகற்றினதுபோல, எனது அன்பை அவனிடமிருந்து அகற்றமாட்டேன். 16உனது குடும்பமும், அரசும் எனக்குமுன் என்றென்றைக்கும் நிலைநிற்கும். உனது அரியணை என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் என்கிறார்’ ” என்றான்.
17இவ்வாறு நாத்தான் இந்த எல்லா வார்த்தைகளின்படியும், இந்த எல்லா வெளிப்படுத்துதலின்படியும் தாவீதுக்குச் சொன்னான்.
தாவீதின் மன்றாட்டு
18பின்பு அரசன் தாவீது உள்ளே சென்று யெகோவாவுக்கு முன்பாக அமர்ந்து சொன்னதாவது:
“யெகோவாவாகிய ஆண்டவரே, இதுவரைக்கும் நீர் என்னை வழிநடத்தி வந்ததற்கு நான் யார்? என் குடும்பமும் எம்மாத்திரம்? 19யெகோவாவாகிய ஆண்டவரே, உமது பார்வைக்கு இதுவும் போதாதென்று நீர் உமது பணியாளனின் குடும்பத்தின் எதிர்காலத்தைக் குறித்தும் பேசியிருக்கிறீரே! யெகோவாவாகிய ஆண்டவரே, இப்படித்தான் நீர் மனிதருடன் நடந்துகொள்ளும் வழக்கமோ!
20“இன்னும் மேலாக தாவீது உம்மிடம் எதைச் சொல்லமுடியும்? யெகோவாவாகிய ஆண்டவரே! உம்முடைய அடியானை நீர் அறிவீர் 21உமது வாக்குத்தத்தத்தின் வார்த்தையின் நிமித்தமும், உமது திட்டத்தின்படியும், இப்பெரிய செயல்களைச் செய்து, அடியானுக்கு அதைத் தெரியப்படுத்தியிருக்கிறீர்.
22“ஆண்டவராகிய யெகோவாவே! நீரே பெரியவர்; உம்மைப்போல் யாரும் இல்லை. எங்கள் காதுகளால் நாங்கள் கேள்விப்பட்டதுபோல் உம்மைத்தவிர வேறொரு இறைவனும் இல்லை. 23உம்முடைய மக்களாகிய இஸ்ரயேலரைப்போல வேறு யாரும் உண்டோ? தமக்கு மக்களாயிருக்கும்படி, இறைவன் தாமே போய் மீட்டுக்கொண்ட பூமியிலுள்ள ஒரே இனம் அவர்களே. எகிப்தியரிடமிருந்து நீர் மீட்ட உமது மக்களுக்கு முன்பாக, பிற நாட்டு மக்களையும், அவர்களுடைய தெய்வங்களையும் துரத்தி, பெரிதும் பயங்கரமுமான அதிசய செயல்களைச் செய்து, மிகப்பெரிய பெயரை உமக்கு ஏற்படுத்தினீரே; 24உம்முடைய மக்களாகிய இஸ்ரயேலரை என்றென்றைக்கும் உமக்குரியவர்களாயிருக்கும்படி நிலைநிறுத்தி, யெகோவாவே! நீரே அவர்களின் இறைவனானீர்.
25“இப்பொழுதும் இறைவனாகிய யெகோவாவே, உம்முடைய அடியானையும், அவன் குடும்பத்தையும் குறித்து நீர் கொடுத்த வாக்குறுதியை என்றென்றைக்கும் நிலைப்படுத்தும். நீர் வாக்களித்தபடியே செய்யும். 26இதனால் உமது பெயர் என்றென்றும் பெரிதாயிருக்கும். அப்பொழுது, ‘சேனைகளின் யெகோவாவே இஸ்ரயேலின்மேல் இறைவன்’ என்று மனிதர் சொல்வார்கள். அப்பொழுது உமது அடியானாகிய தாவீதின் குடும்பம் உமக்கு முன்பாக நிலைநிறுத்தப்படும்.
27“சேனைகளின் யெகோவாவே, இஸ்ரயேலின் இறைவனே, ‘நான் உன் குடும்பத்தை கட்டி எழுப்புவேன்’ என்று உமது அடியானுக்கு நீர் வெளிப்படுத்தினீர். எனவே இந்த மன்றாட்டை உம்மிடம் சமர்ப்பிக்க உமது அடியானுக்கு துணிவு கிடைத்தது. 28ஆண்டவராகிய யெகோவாவே! நீரே இறைவன். உம்முடைய வார்த்தைகள் நம்பத்தகுந்தவை. நீர் இந்த நல்ல செயல்களை உமது அடியவனுக்கு வாக்காகக் கொடுத்திருக்கிறீர். 29எனவே இப்பொழுது உம்முடைய கண்களுக்கு முன்பாக உமது அடியானின் குடும்பம் எப்பொழுதும் நிலைத்திருக்கும்படி, அதை மனதார ஆசீர்வதியும். ஆண்டவராகிய யெகோவாவே, நீர் சொல்லியிருக்கிறீர். உமது ஆசீர்வாதத்தினால் உமது அடியானின் குடும்பம் என்றென்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்” என்றான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for 2 சாமுயேல் 7