YouVersion Logo
Search Icon

2 தெசலோனிக்கேயர் 3

3
மன்றாட்டுக்கான வேண்டுகோள்
1இறுதியாக பிரியமானவர்களே, கர்த்தருடைய செய்தி உங்களிடையே பரவியதுபோல, அது மகிமைப்பட்டு எங்கும் விரைவாய்ப் பரவவேண்டும் என்று எங்களுக்காக மன்றாடுங்கள். 2கொடியவர்களும், தீயவர்களுமான மனிதரிடமிருந்து நாங்கள் காப்பாற்றப்படவேண்டும் என்றும் மன்றாடுங்கள். ஏனெனில், எல்லாரிடத்திலும் விசுவாசம் இல்லையே. 3ஆனால், கர்த்தர் உண்மையுள்ளவர். அவர் உங்களைப் பெலப்படுத்தி, தீயவனிடமிருந்து பாதுகாத்துக்கொள்வார். 4நாங்கள் கட்டளையிடுகிற காரியங்களை நீங்கள் செய்கிறீர்கள் என்றும், தொடர்ந்து செய்வீர்கள் என்றும், கர்த்தரில் நாங்கள் மனவுறுதி உடையவர்களாய் இருக்கிறோம். 5கர்த்தர்தாமே உங்கள் இருதயங்களை இறைவனுடைய அன்புக்குள்ளும், கிறிஸ்துவின் மன உறுதிக்குள்ளும் நடத்துவாராக.
சோம்பலுக்கு எச்சரிக்கை
6பிரியமானவர்களே, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பெயரில் நாங்கள் உங்களுக்குக் கட்டளையிடுகிறதாவது, சோம்பேறிகளாய் வாழும் ஒவ்வொரு சகோதரரையும்விட்டு விலகியிருங்கள். எங்களிடமிருந்து நீங்கள் கற்றுக்கொண்டதின்படி நடக்காதவர்களைவிட்டு விலகியிருங்கள். 7எங்களுடைய முன்மாதிரியை எவ்விதம் பின்பற்றவேண்டுமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே. நாங்கள் உங்களுடன் இருந்தபோது சோம்பேறிகளாய் இருக்கவில்லை. 8யாரிடமும் உணவை இலவசமாய்ப் பெற்று, நாங்கள் சாப்பிட்டதில்லை. மாறாக, நாங்கள் இரவும் பகலும் கஷ்டப்பட்டு உழைத்தோம். இதனால், உங்களில் யாருக்கும் பாரமாய் இருந்ததில்லை. 9இவ்விதமான உதவியை உங்களிடமிருந்து பெற்றுக்கொள்ள எங்களுக்கு உரிமை இல்லை என்பதனால், நாங்கள் அப்படிச் செய்யவில்லை. ஆனால் நீங்கள் பின்பற்றக்கூடிய ஒரு முன்மாதிரியாக நாங்கள் இருக்கவேண்டும் என்பதற்காகவே, அப்படிச் செய்தோம். 10ஏனெனில், நாங்கள் உங்களுடன் இருந்தபோதுங்கூட, இந்த கட்டளையை நாங்கள் உங்களுக்குக் கொடுத்தோம்: “ஒருவன் வேலைசெய்யாவிட்டால், அவன் சாப்பிடவும் கூடாது.”
11உங்களில் சிலர் சோம்பேறிகளாய் இருக்கிறார்கள் என்று நாங்கள் கேள்விப்படுகிறோம். அவர்கள் எவ்வித வேலையும் செய்யாமல், பிறர் வேலையில் ஈடுபடுகிறார்கள். 12அப்படிப்பட்டவர்கள் வேலையில் நிலைத்திருந்து, தங்களுடைய உணவுக்காகத் தாங்களே உழைக்க வேண்டும் என்று, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவில் நாங்கள் கட்டளையிட்டு வேண்டிக்கொள்கிறோம். 13நீங்களோ பிரியமானவர்களே, நல்லதைச் செய்வதில் மனந்தளர வேண்டாம்.
14இந்தக் கடிதத்திலுள்ள அறிவுறுத்தலுக்கு யாராவது கீழ்ப்படியாவிட்டால், அப்படிப்பட்டவனைக் குறித்துக்கொண்டு, அவன் வெட்கமடையும்படிக்கு, அவனோடு கூடிப்பழக வேண்டாம். 15ஆனால், அவனைப் பகைவனாக எண்ணவேண்டாம்; ஒரு சகோதரனாக எண்ணி எச்சரியுங்கள்.
கடைசி வாழ்த்துதல்
16இப்பொழுதும் சமாதானத்திலும் அமைதியிலும் கர்த்தர்தாமே, எல்லா வேளைகளிலும் எல்லாவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைக் கொடுப்பாராக. கர்த்தர் உங்கள் எல்லோருடனும் இருப்பாராக.
17பவுலாகிய நான் இந்த வாழ்த்துதலை, என் சொந்தக் கையினாலே எழுதுகிறேன். இதுவே எனது கடிதங்களுக்கெல்லாம் அடையாளமும், நான் எழுதும் முறையும் இதுவே.
18நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை, உங்கள் எல்லோருடனும் இருப்பதாக. ஆமென்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in