அப்போஸ்தலர் 24
24
பேலிக்ஸின் முன் பவுல்
1ஐந்து நாட்களுக்குபின், பிரதான ஆசாரியன் அனனியாவும், யூதரின் தலைவரில் சிலரும், தெர்த்துல்லு என்னும் பெயருடைய வழக்கறிஞனும், செசரியாவுக்குச் சென்றார்கள். அவர்கள் அங்கே பவுலுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஆளுநருக்குமுன் வைத்தார்கள். 2பவுல் அழைத்து வரப்பட்டபோது, தெர்த்துல்லு என்பவன் பேலிக்ஸின் முன்பாக தன் வழக்கை எடுத்துரைத்தான்: “மாண்புமிகு ஆளுநர் அவர்களே, உமது ஆட்சியின்கீழ் நீண்டகாலமாக நாங்கள் சமாதானத்தை அனுபவித்து வருகிறோம், உம்முடைய முன்விவேகத்தால், இந்த நாட்டில் பல சீர்திருத்தங்கள் ஏற்பட்டிருக்கின்றன. 3எல்லா இடங்களிலும், எல்லா விதத்திலேயும், இதை நாங்கள் மிகுந்த நன்றியுடன் ஏற்றுக்கொள்கிறோம். 4நான் உம்மைத் தொடர்ந்து தொல்லைப்படுத்த விரும்பவில்லை. எனவே நாங்கள் சுருக்கமாய்ச் சொல்வதைத் தயவாய் கேட்கும்படி உம்மை வேண்டிக்கொள்கிறேன்.
5“இந்த பவுல் குழப்பத்தை விளைவிக்கிறவனாய் இருக்கிறதை நாங்கள் கண்டோம். உலகம் முழுவதிலுமுள்ள யூதர்கள் மத்தியில், இவன் குழப்பத்தை மூட்டி வருகிறான். இவனே நசரேய பிரிவினரின் தலைவனாயிருக்கிறான். 6இவன் ஆலயத்தைக்கூட தூய்மைக்கேடாக்க முயன்றான்; அதனால் எங்கள் சட்டத்தின்படி தீர்ப்பு வழங்கவே, நாங்கள் இவனைப் பிடித்தோம். 7ஆனால் படைத்தளபதி லீசியா வந்து பலவந்தமாக எங்கள் கைகளிலிருந்து இவனை இழுத்துக்கொண்டுபோய், 8இவன்மேல் குற்றஞ்சாட்டுகிறவர்களை உமது முன்வரும்படி கட்டளையிட்டான். நீரே இவனை விசாரித்தால், நாங்கள் இந்த பவுலுக்கு எதிராகக் கொண்டுவரும் எல்லாக் குற்றச்சாட்டுகள் பற்றிய உண்மையையும் அறிந்துகொள்வீர்” என்றான்.#24:8 சில மூலபிரதிகளில் 7ஆம் மற்றும் 8 ஆம் வசனத்தின் முதலாம் பகுதி காணப்படுவதில்லை.
9யூதரும் குற்றம் சாட்டுவதில் வழக்கறிஞனுடனே சேர்ந்து, இவையெல்லாம் உண்மை என்று உறுதிப்படுத்தினார்கள்.
10பவுல் பேசும்படி ஆளுநர் சைகை காட்டியபோது, அவன் சொன்னதாவது: “பலவருடங்களாக இந்த நாட்டின்மேல் நீர் நீதிபதியாய் இருப்பதை நான் அறிவேன்; எனவே நான் மகிழ்ச்சியுடனே எனது சார்பாய்ப் பேசுகிறேன். 11நான் வழிபாடு செய்யும்படி எருசலேமுக்குப் போய் இன்னும் பன்னிரண்டு நாட்கள் ஆகவில்லை. இதை நீர் விசாரித்து எளிதாக அறிந்துகொள்ளலாம். 12என்னைக் குற்றம் சாட்டுகிறவர்கள், நான் ஆலயத்திலே யாருடனாவது விவாதம் செய்ததைக் கண்டதில்லை. அல்லது ஜெப ஆலயங்களிலோ, பட்டணத்தின் வேறு இடங்களிலோ மக்களைக் குழப்பம் செய்யத் தூண்டியதையும் இவர்கள் கண்டதில்லை. 13இவர்கள் இப்பொழுது எனக்கு எதிராகக் கொண்டுவந்த குற்றச்சாட்டுகளை உமக்கு முன்னால் நிரூபிக்கவும் இவர்களால் முடியாது. 14ஆனால் இந்த வழியைப் பின்பற்றி, எங்கள் தந்தையரின் இறைவனை வழிபடுகிறேன் என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். இதையே இவர்கள், ‘பிரிவினை மார்க்கம்’ என்று சொல்கிறார்கள். மோசேயின் சட்டத்தில் கூறப்பட்டவைகளுடனும், இறைவாக்கினரின் புத்தகங்களில் எழுதப்பட்டிருக்கிற எல்லாவற்றையும் நான் நம்புகிறேன். 15நீதிமான்களும் அநீதிமான்களும் இறந்தோரில் இருந்து உயிர்த்தெழுவார்கள் என்ற அதே எதிர்பார்ப்பு இவர்களைப் போல் எனக்கும் இறைவனில் இருக்கிறது. 16அதனால்தான் இறைவனுக்கு முன்பாகவும், மனிதனுக்கு முன்பாகவும், என் மனசாட்சியைச் சுத்தமுள்ளதாகக் காத்துக்கொள்ள நான் எப்பொழுதும் பிரயாசப்படுகிறேன்.
17“நானோ பல வருடங்களுக்குப்பின், என் மக்களுக்கும், ஏழைகளுக்கும் நன்கொடைகளையும் காணிக்கைகளையும் கொடுப்பதற்கு எருசலேமுக்கு வந்தேன். 18இதை நான் ஆலய முற்றத்தில் செய்யும்போது, இவர்கள் என்னைக் கண்டார்கள். அப்பொழுது நான், பாரம்பரிய முறைப்படி சுத்தமாகவே இருந்தேன். என்னுடனே மக்கள் கூட்டம் எதுவும் இருக்கவில்லை. எந்தவிதக் குழப்பத்திலும் நான் ஈடுபடவும் இல்லை. 19ஆனால் ஆசியா பகுதியிலிருந்து சில யூதர்கள் அங்கே வந்தார்கள். எனக்கு எதிராய் அவர்களுக்கு ஏதாவது இருந்தால், அக்குற்றத்தை என்மேல் சுமத்துவதற்கு, அவர்கள் இங்கே உமக்கு முன்பு இருக்கவேண்டும். 20அப்படியில்லாவிட்டால், இங்கிருக்கும் இவர்கள் நான் ஆலோசனைச் சங்கத்தின்முன் நின்றபோது, என்ன குற்றத்தைக் கண்டார்கள் என்று கூறவேண்டும். 21‘இறந்தவர்கள் உயிரோடு எழுந்திருப்பதைக் குறித்தே இன்று நான் உங்களுக்கு முன்பாக விசாரணை செய்யப்படுகின்றேன்’ என்று நான் அவர்கள்முன் நின்றபோது, அன்று சத்தமிட்டுச் சொன்னேன். இந்த ஒரு குற்றச்சாட்டையே அவர்கள் எனக்கெதிராகக் கொண்டுவரலாம்” என்று பவுல் சொல்லி முடித்தான்.
22அப்பொழுது இந்த வழியை நன்றாக அறிந்திருந்த பேலிக்ஸ் விசாரணையை ஒத்திப்போட்டான். அவன், “படைத்தளபதி லீசியா வரும்போது, உங்கள் வழக்கிற்குத் தீர்ப்பு கூறுவேன்” என்று சொன்னான். 23பேலிக்ஸ் பவுலைக் காவலில் வைக்கும்படி நூற்றுக்குத் தலைவனுக்கு உத்தரவிட்டான். ஆனால் பவுலுக்கு ஓரளவு சுதந்திரம் கொடுக்கும்படியும், அவனுடைய தேவைகளைக் கொடுத்து, உதவுவதற்கு அவனது நண்பர்களை அனுமதிக்கும்படியும் பேலிக்ஸ் சொல்லியிருந்தான்.
24சில நாட்களுக்குப்பின்பு, பவுல் பேசுவதைக் கேட்பதற்காக, பேலிக்ஸ் யூதப்பெண்ணான தன் மனைவி துருசில்லாளுடன் வந்தான். அவன் பவுலை அழைத்து வரச்சொல்லி, கிறிஸ்து இயேசுவில் உள்ள விசுவாசத்தைக் குறித்துப் பவுல் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தான். 25பவுல் நீதியைக் குறித்தும், சுயக்கட்டுப்பாட்டைக் குறித்தும், வரப்போகின்ற நியாயத்தீர்ப்பைக் குறித்தும் பேசியபொழுது, பேலிக்ஸ் பயமடைந்தான். அவன் பவுலிடம், “இப்போதைக்கு இது போதும். நீ போகலாம். எனக்கு வசதியான ஒரு நேரம் கிடைக்கும்போது, நான் உன்னைத் திரும்பவும் கூப்பிடுவேன்” என்றான். 26அதே நேரத்தில், பவுல் தனக்கு பணம் கொடுப்பான் என்று பேலிக்ஸ் எதிர்பார்த்து, பவுலை அடிக்கடி வரவழைத்து அவனிடம் பேசினான்.
27இப்படி இரண்டு வருடங்கள் கடந்துசென்றன. பேலிக்ஸின் இடத்தில் பொர்க்கியு பெஸ்து என்பவன் பதவிக்கு வந்தான். ஆனால் பேலிக்ஸ் யூதருக்குத் தயவுகாட்ட விரும்பி, பவுலை சிறையிலேயே விட்டுச்சென்றான்.
Currently Selected:
அப்போஸ்தலர் 24: TCV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.