YouVersion Logo
Search Icon

ஆமோஸ் 8

8
பழுத்த பழங்களுடைய கூடை
1ஆண்டவராகிய யெகோவா எனக்குக் காண்பித்தது இதுவே: பழுத்த பழங்களை உடைய ஒரு கூடையைக் கண்டேன். 2“ஆமோஸ், நீ என்னத்தைக் காண்கிறாய்?” என்று கேட்டார்.
அதற்கு நான், “பழுத்த பழங்களுடைய கூடையைக் காண்கிறேன்” என்றேன்.
அப்பொழுது யெகோவா என்னிடம், “இஸ்ரயேலரான என் மக்களுக்கு முடிவுகாலம் வந்துவிட்டது. நான் இனிமேலும் அவர்களைத் தப்பவிடமாட்டேன்.
3“அந்த நாளில், ஆலயப் பாடல்கள் புலம்பலாக மாறும். ஏராளமான உடல்கள், எங்கும் எறியப்பட்டுக் கிடக்கும்! எங்கும் நிசப்தம் உண்டாகும்!” என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
4சிறுமைப்பட்டவர்களை மிதித்து,
நாட்டின் ஏழைகளை அகற்றுகிறவர்களே, இதைக் கேளுங்கள்.
5நீங்கள் தானியம் விற்பதற்கு
அமாவாசை எப்போது முடியும் என்றும்,
கோதுமை விற்பதற்கு
ஓய்வுநாள் எப்போது முடிவடையும் என்றும் சொல்லி,
அளவைக் குறைத்து,
விலையை அதிகரித்து,
கள்ளத்தராசினால்
ஏமாற்றுவதற்குக் காத்திருக்கிறீர்கள்.
6ஏழையை வெள்ளி கொடுத்து வாங்குவதற்கும்,
சிறுமைப்பட்டவர்களை ஒரு ஜோடி செருப்பு கொடுத்து வாங்குவதற்கும்,
பதரைக் கோதுமையுடன் விற்பதற்கும் அல்லவோ காத்திருக்கிறீர்கள்.
7யாக்கோபின் அகந்தையின்மீது யெகோவா ஆணையிட்டார்: “அவர்கள் செய்த செயல்கள் எதையும் நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்.
8“இதனால் நாடு நடுங்காதோ,
அதில் வாழும் அனைவரும் துக்கப்பட மாட்டார்களோ?
நாடு முழுவதும் நைல் நதிபோல பொங்கும்.
அது குமுறிப் பொங்கி,
பின் அது எகிப்து நதியைப்போல் தணிந்துபோகும்.”
9ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறதாவது:
“அந்நாளில் நான் நண்பகலில் சூரியனை மறையச் செய்வேன்,
பட்டப்பகலில் பூமியை இருளடையச் செய்வேன்.
10உங்கள் மதக்கொண்டாட்டங்களை துக்கக்கொண்டாட்டமாகவும்,
உங்கள் பாடல்களை அழுகையாகவும் மாற்றுவேன்.
உங்கள் அனைவரையும் துக்கவுடை உடுத்தச் செய்வேன்.
உங்களை மொட்டையடிக்கப் பண்ணுவேன்.
நான் அந்த காலத்தை ஒரே மகனுக்காக துக்கங்கொண்டாடும் காலத்தைப்போல் மாற்றுவேன்.
அதன் முடிவை ஒரு கசப்பான நாளைப்போல் ஆக்குவேன் என்கிறார்.
11“மேலும் ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறதாவது: நாட்கள் வருகின்றன,
நாடெங்கும் பஞ்சத்தை அனுப்புவேன்.
அது உணவு கிடைக்காத பஞ்சமோ, தாகத்திற்கு தண்ணீர் கிடைக்காத பஞ்சமோ அல்ல.
மாறாக யெகோவாவினுடைய வார்த்தைகளைக் கேட்க முடியாத பஞ்சமே அது.
12அப்போது மனிதர், ஒரு கடல் தொடங்கி மறுகடல் வரையும் அலைந்து சென்று,
வடதிசை தொடங்கி, கீழ்த்திசை வரையும் அலைந்து திரிந்து,
யெகோவாவின் வார்த்தையைத் தேடுவார்கள்.
ஆனால் அதைப் பெற்றுக்கொள்ளமாட்டார்கள்.
13“அந்த நாளில்
“அழகிய இளம்பெண்களும்,
வலிமையுள்ள வாலிபர் எல்லோருமே தாகத்தால் சோர்ந்துபோவார்கள்.
14அக்காலத்தில் சமாரியாவின் வெட்கக்கேடான
விக்கிரகங்களின்மேல் ஆணையிடுகிறவர்களோ,
அல்லது ‘தாணே, உனது தெய்வம் வாழ்வது நிச்சயம்போல்’
என்று சொல்லுகிறவர்களோ,
அல்லது ‘பெயெர்செபாவின் தெய்வம் வாழ்வது நிச்சயம்போல்’
என்று சொல்லுகிறவர்களோ எல்லோரும் விழுந்துபோவார்கள்,
அவர்கள் ஒருபோதும் எழுந்திருக்கமாட்டார்கள்.”

Currently Selected:

ஆமோஸ் 8: TCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in