YouVersion Logo
Search Icon

ஆமோஸ் 9

9
இஸ்ரயேல் அழிக்கப்படுதல்
1யெகோவா பலிபீடத்தின் அருகே நிற்பதைக் கண்டேன்:
அவர் சொன்னதாவது: தூண்களின் உச்சியை இடித்துப்போடுங்கள்.
தூண்களின் வாசல் நிலைகள் அசையட்டும்.
அவற்றை மக்கள் எல்லோரின் தலைகள்மேலும் விழப்பண்ணுங்கள்.
மீந்திருப்போரை நான் வாளினால் கொல்லுவேன்.
ஒருவனும் தப்பி ஓடமாட்டான்,
ஒருவனுமே தப்பமாட்டான்.
2பாதாளத்தின் ஆழங்கள்வரை அவர்கள் தோண்டிக்கொண்டு போனாலும்,
அங்கிருந்தும் என் கை அவர்களைப் பிடித்தெடுக்கும்.
அவர்கள் வானங்கள்வரை ஏறினாலும்,
அங்கிருந்தும் அவர்களை கீழே கொண்டுவருவேன்.
3கர்மேல் மலையுச்சியில் அவர்கள் ஒளிந்துகொண்டாலும்,
நான் அங்கேயும் அவர்களைத் தேடிப் பிடித்துக்கொள்வேன்.
என் பார்வைக்குத் தப்பி கடலின் அடியில் மறைந்துகொண்டாலும்
அவர்களைக் கடிக்க பாம்பிற்குக் கட்டளையிடுவேன்.
4தங்கள் பகைவரால் நாடுகடத்தப்பட்டுத் துரத்தப்பட்டாலும்,
அங்கே அவர்களைக் கொல்லும்படி வாளுக்குக் கட்டளையிடுவேன்.
“நன்மைக்காக அல்ல,
தீமைக்காகவே அவர்கள்மேல் என் கண்களை வைப்பேன்.”
5யெகோவா, சேனைகளின் யெகோவா பூமியைத் தொடுகிறார்,
அது உருகுகிறது,
அதில் வாழும் அனைவரும் புலம்புகிறார்கள்;
முழு நாடும் நைல் நதியைப்போல் பொங்கி எழுகிறது,
பின்னர் எகிப்தின் நதியைப்போல் வற்றிப்போகிறது.
6யெகோவா வானங்களின் உயர்வில் தமது அரண்மனைகளைக் கட்டுகிறார்,
பூமியின்மேல் அஸ்திபாரத்தை அமைக்கிறார்;
கடல்நீரை அழைத்து
பூமியின் மேற்பரப்பில் அதைப் பொழிகிறார்.
யெகோவா என்பது அவர் பெயர்.
7இஸ்ரயேலின் மக்களே,
நீங்களும் எனக்கு எத்தியோப்பியரைப்போல் அல்லவோ இருக்கிறீர்கள்
என்று யெகோவா அறிவிக்கிறார்.
நான் இஸ்ரயேலரை எகிப்திலிருந்து கொண்டுவந்தேன்.
பெலிஸ்தியரை கப்தோரிலிருந்தும்,
சீரியரை கீரிலிருந்தும் கொண்டுவரவில்லையோ?
8“நிச்சயமாக ஆண்டவராகிய
யெகோவாவின் கண்கள் பாவமுள்ள அரசின்மேல் இருக்கின்றன.
பூமியின்மேல் இராதபடி அந்த அரசை அழிப்பேன்.
எனினும் யாக்கோபின் குடும்பத்தை
நான் முற்றிலும்
அழிக்கமாட்டேன்”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
9“நானே கட்டளையிட்டு,
தானியத்தை அரிதட்டில் போட்டு அரித்தெடுப்பதுபோல,
எல்லா நாடுகளுக்குள்ளேயும்
இஸ்ரயேல் குடும்பத்தை அரித்தெடுப்பேன்.
ஒரு கூழாங்கல்லும் தரையில் விழாது.
10என் மக்களுள் வாழும் எல்லா பாவிகளும்,
பேராபத்து எங்களை
மேற்கொள்ளவோ சந்திக்கவோ மாட்டாது என்று
சொல்கின்ற எல்லோரும் வாளினால் சாவார்கள்.
இஸ்ரேலின் மறுசீரமைப்பு
11“அந்த நாளில்
“நான் விழுந்து கிடக்கும் தாவீதின் கூடாரத்தைத் திரும்பவும் அமைப்பேன்.
நான் அதன் உடைந்த இடங்களை பழுதுபார்த்து,
அதன் பாழிடங்களை சீரமைப்பேன்.
முன் இருந்ததுபோல அதைக் கட்டுவேன்,
12அப்பொழுது என் மக்கள் ஏதோமில் மீதியாக இருப்போரையும்,
என் பெயரைத் தரித்திருக்கும் எல்லா நாடுகளையும்
உரிமையாக்கிக்கொள்வார்கள் என்று
இவற்றைச் செயற்படுத்தப்போகிற யெகோவா அறிவிக்கிறார்.
13“நாட்கள் வருகின்றன” என்று யெகோவா அறிவிக்கிறார்.
“அப்பொழுது அறுவடை செய்கிறவனை உழுகிறவன் முந்திக்கொள்வான்;
நடுகிறவனை திராட்சைப் பழத்தைப் பிழிகிறவன் முந்திக்கொள்வான்.
மலைகளிலிருந்து புது திராட்சை இரசம்
வடிந்து எல்லாக் குன்றுகளின்மேலும் ஓடும்,
14நாடுகடத்தப்பட்ட என் மக்களாகிய இஸ்ரயேலரை முன்நிலைக்குக் கொண்டுவருவேன்.
“அவர்கள் பாழடைந்த பட்டணங்களை திரும்பக் கட்டி, அவற்றில் குடியிருந்து,
திராட்சைத் தோட்டங்களை நாட்டி, அதன் இரசத்தைக் குடித்து,
தோட்டங்களை உண்டாக்கி, அதன் பழங்களைச் சாப்பிடுவார்கள்.
15நான் இஸ்ரயேலை அவர்கள் சொந்த நாட்டிலே நாட்டுவேன்.
நான் அவர்களுக்குக் கொடுத்திருக்கும் நாட்டிலிருந்து,
இனியொருபோதும் வேரோடு பிடுங்கப்படமாட்டார்கள் என்று”
உங்கள் இறைவனாகிய யெகோவா சொல்கிறார்.

Currently Selected:

ஆமோஸ் 9: TCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in