YouVersion Logo
Search Icon

உபாகமம் 8

8
யெகோவாவை மறக்கவேண்டாம்
1இன்று நான் உங்களுக்குக் கொடுக்கும் ஒவ்வொரு கட்டளையையும் பின்பற்றக் கவனமாய் இருங்கள், அப்பொழுது நீங்கள் வாழ்ந்து பெருகுவீர்கள். உங்கள் முற்பிதாக்களுக்கு யெகோவா ஆணையிட்டு வாக்குக்கொடுத்த நாட்டிற்குள்போய் அதை உரிமையாக்கிக்கொள்வீர்கள். 2உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களை சிறுமைப்படுத்தி, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்வீர்களோ கைக்கொள்ளமாட்டீர்களோ என உங்களைச் சோதித்து, உங்கள் இருதயத்தில் உள்ளதை அறியும்படிக்கும், இந்த நாற்பது வருடங்களாக பாலைவனத்தில் வழியெங்கும் உங்களை எப்படி வழிநடத்தினார் என்பதை நினைத்துக்கொள்ளுங்கள். 3அவர் உங்களை சிறுமைப்படுத்தி, உங்களை பசியடையச்செய்து, பின்பு உங்கள் முற்பிதாக்கள் அறியாதிருந்த மன்னாவை உங்களுக்கு உண்ணக்கொடுத்தார். மனிதன் அப்பத்தினால் மட்டுமல்ல, யெகோவாவினுடைய வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையினாலும் வாழ்வான் என்று உங்களுக்குப் போதிக்கும்படியே இப்படிச் செய்தார். 4இந்த நாற்பது வருட காலத்தில் உங்கள் உடைகள் பழையதாகிக் கிழியவுமில்லை, உங்கள் கால்கள் வீங்கவுமில்லை. 5ஒருவன் தன் மகனைக் கண்டித்து நடத்துவதுபோல, உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களைக் கண்டித்து நடத்துகிறார் என்பதை உங்கள் இருதயத்தில் அறிந்துகொள்ளுங்கள்.
6உங்கள் இறைவனாகிய யெகோவாவின் வழிகளில் நடந்து அவரிடத்தில் பயபக்தியாயிருந்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுங்கள். 7ஏனெனில் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களை வளமான நாட்டிற்குக் கொண்டுவரப்போகிறார். அது ஆறுகளும் நீரோடைகளும் ஏரிகளும் நிறைந்து பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலும் பாய்ந்தோடும் நாடு. 8அது கோதுமையும் வாற்கோதுமையும், திராட்சைத் தோட்டங்களும், அத்திமரங்களும், மாதுளம்பழங்களும், ஒலிவ எண்ணெயும், தேனும் நிறைந்த நாடு. 9அது உணவு குறைவுபடாத நாடு, அங்கு உங்களுக்குக் குறைவே இருக்காது; அந்த நாட்டின் கற்பாறைகள் இரும்பாய் இருக்கின்றன. அதன் மலைகளில் இருந்து செம்பைத் தோண்டி எடுக்கலாம்.
10நீங்கள் சாப்பிட்டுத் திருப்தியாயிருக்கும்போது, உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுத்த அந்த வளமான நாட்டிற்காக அவரைத் துதியுங்கள். 11நீங்கள் இறைவனை மறந்து நான் இன்று உங்களுக்குக் கொடுக்கும் உங்கள் இறைவனாகிய யெகோவாவினுடைய கட்டளைகளையும், சட்டங்களையும், விதிமுறைகளையும் கைக்கொள்ளத் தவறாதபடி எச்சரிக்கையாயிருங்கள். 12ஏனெனில் நீங்கள் சாப்பிட்டுத் திருப்தியாயிருக்கும்போதும், நல்ல வீடுகளைக் கட்டி, அங்கு குடியிருக்கும்போதும், 13உங்கள் மாட்டு மந்தைகளும், உங்கள் ஆட்டு மந்தைகளும் பெருகும்போதும், உங்கள் வெள்ளியும் தங்கமும் அதிகரித்து, உங்களிடம் உள்ளவைகள் எல்லாம் பெருகும்போதும் கவனமாயிருக்க வேண்டும். 14அப்பொழுது உங்கள் இருதயங்கள் பெருமையடைந்து, அடிமைத்தன நாடான எகிப்திலிருந்து உங்களை மீட்டுக் கொண்டுவந்த உங்கள் இறைவனாகிய யெகோவாவை நீங்கள் மறந்துவிடவேண்டாம். 15ஏனெனில் அவரே உங்களை விஷப்பாம்புகளும் தேள்களும் நிறைந்த, விசாலமும் பயங்கரமுமான, தண்ணீரில்லாத அந்த வறண்ட நிலமாகிய கடினமான பாலைவனத்தின் வழியாக வழிநடத்தி வந்தார். அவர் உங்களுக்குக் கற்பாறையிலிருந்து தண்ணீர் கொடுத்தார். 16உங்கள் முற்பிதாக்கள் அறிந்திராத மன்னாவை அவர் உங்களுக்குப் பாலைவனத்தில் சாப்பிடக் கொடுத்தார். முடிவில் எல்லாம் உங்களுக்கு நலமாய் இருக்கும்படியாக உங்களைத் தாழ்மைப்படுத்தி உங்களைப் பரீட்சிப்பதற்காகவே அவர் இப்படிச் செய்தார். 17நீங்கள், “எங்கள் வல்லமையும், எங்கள் கையின் வலிமையுமே இந்த செல்வத்தை எங்களுக்குச் சம்பாதித்தன” என்று எண்ணலாம். 18ஆனால் நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவை நினைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில், அவரே இந்த செல்வத்தைச் சம்பாதிக்கும் ஆற்றலை உங்களுக்குக் கொடுக்கிறார்; அவர் இன்றிருப்பதுபோலவே உங்கள் முற்பிதாக்களுக்கு ஆணையிட்ட தமது உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறவர்.
19நீங்களோ எப்பொழுதாவது உங்கள் இறைவனாகிய யெகோவாவை மறந்து, வேறு தெய்வங்களைப் பின்பற்றி அவைகளை வழிபட்டு வணங்குவீர்களானால், நிச்சயமாகவே நீங்கள் அழிக்கப்படுவீர்கள் என்று நான் இன்று உங்களுக்கு விரோதமாய் சாட்சி கூறுகிறேன். 20உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு நீங்கள் கீழ்ப்படியாதபடியால், உங்களுக்கு முன்பாக யெகோவா அழித்த நாடுகளைப்போலவே நீங்களும் அழிக்கப்படுவீர்கள்.

Currently Selected:

உபாகமம் 8: TCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in