YouVersion Logo
Search Icon

பிரசங்கி 1

1
எல்லாம் அர்த்தமற்றவை
1தாவீதின் மகனும், எருசலேமின் அரசனுமான பிரசங்கியின் வார்த்தைகள்:
2“அர்த்தமற்றவை! அர்த்தமற்றவை!
முற்றிலும் அர்த்தமற்றவை;
எல்லாமே அர்த்தமற்றவை” என்று
பிரசங்கி கூறுகிறான்.
3மனிதனின் எல்லா உழைப்பினாலும் அவன் பெறும் இலாபம் என்ன?
சூரியனுக்குக் கீழே#1:3 சூரியனுக்குக் கீழே என்பது உலகத்தில் என்று அர்த்தம். அவன் படும் பிரசாயத்தினால் பலன் என்ன?
4சந்ததிகள் தோன்றி, சந்ததிகள் மறைகின்றன;
ஆனாலும் பூமி மட்டும் என்றென்றைக்கும் நிலைத்திருக்கின்றது.
5சூரியன் உதிக்கிறது, சூரியன் மறைகிறது;
தான் உதிக்கும் இடத்திற்கே அது விரைந்து திரும்பிச் செல்கிறது.
6காற்று தெற்கு நோக்கி வீசுகிறது,
வடக்கு நோக்கியும் திரும்புகிறது;
அது சுழன்று சுழன்று அடித்து,
எப்போதும் தான் சுற்றிவந்த இடத்திற்கே திரும்பிச் செல்கிறது.
7எல்லா ஆறுகளும் கடலில் கலக்கின்றன,
ஆனாலும் கடல் ஒருபோதும் நிறைவதில்லை.
ஆறுகள் ஊற்றெடுத்த இடத்திற்கே
திரும்பிப் போகின்றன.
8ஒருவனாலும் சொல்ல முடியாத அளவுக்கு
எல்லாக் காரியங்களும் வருத்தத்தையே கொடுக்கின்றன.
எவ்வளவு பார்த்தாலும் கண்களுக்கு ஆவல் தீருவதில்லை,
எவ்வளவு கேட்டாலும் காதுகள் திருப்தியடைவதில்லை.
9இருந்ததே இனிமேலும் இருக்கும்,
செய்யப்பட்டதே இனிமேலும் செய்யப்படும்;
சூரியனுக்குக் கீழே புதிதாக ஒன்றுமேயில்லை.
10“பாருங்கள், இது புதிதானது!”
என்று யாராவது சொல்லத்தக்கது ஏதாவது ஒன்று உண்டோ?
அது நெடுங்காலத்திற்கு முன்பே இங்கு இருந்தது;
நமது காலத்திற்கு முன்பும் இங்கு இருந்தது.
11முற்காலத்து மனிதரைக் குறித்து ஒருவருக்கும் ஞாபகம் இருப்பதில்லை;
அதுபோல இனிமேல் வரப்போகிறவர்களுக்கும்,
பின்வரும் காரியங்களைக்குறித்து
ஞாபகம் இருக்காது.
ஞானம் அர்த்தமற்றது
12பிரசங்கியாகிய நான் எருசலேமில் இஸ்ரயேலுக்கு அரசனாய் இருந்தேன். 13வானத்தின்கீழ் நடைபெறும் எல்லாவற்றையும் ஞானத்தினால் ஆராய்ந்து கண்டுபிடிக்கும்படி என்னை நான் அர்ப்பணித்தேன். மனுக்குலத்தின்மேல் இறைவன் வைத்திருக்கிறது எவ்வளவு பெரிய பாரம்! 14சூரியனுக்குக் கீழே செய்யப்படும் எல்லா செயல்களையும் நான் பார்த்திருக்கிறேன்; அவை அனைத்தும் அர்த்தமற்றவை, எல்லாம் காற்றைத் துரத்திப்பிடிக்கும் முயற்சியே.
15வளைந்ததை நேராக்கமுடியாது;
இல்லாததை எண்ணிக் கணக்கிட முடியாது.
16“பாருங்கள், எனக்குமுன் எருசலேமில் ஆளுகை செய்த எல்லோரையும்விட, நான் ஞானத்தில் வளர்ந்து பெருகியிருக்கிறேன்; ஞானத்திலும் அறிவிலும் அதிகமானதை நான் என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்” என்று நான் எனக்குள் சொல்லிக்கொண்டேன். 17பின்பு நான் ஞானத்தை விளங்கிக்கொள்வதற்கும், பைத்தியக்காரத்தனத்தையும் மூடத்தனத்தையும் விளங்கிக்கொள்ளவும் அதில் முழுமையாய் ஈடுபட்டேன். ஆனால் இதுவும் காற்றைத் துரத்திப்பிடிக்கும் முயற்சியே என்று அறிந்துகொண்டேன்.
18ஏனெனில் அதிக ஞானத்தினால் அதிக துக்கம் வருகிறது;
அதிக அறிவினால் அதிக கவலையும் வருகிறது.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in