YouVersion Logo
Search Icon

எபேசியர் 4

4
கிறிஸ்துவின் உடலில் ஒற்றுமை
1ஆகையால் கர்த்தருக்காக கைதியாய் இருக்கிற நான் உங்களிடம் வேண்டிக்கொள்கிறதாவது: நீங்கள் இறைவனிடமிருந்து பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ற தகுதியுடன் உங்கள் வாழ்க்கையை வாழுங்கள். 2முழுமையான தாழ்மையும் சாந்தமும் உள்ளவர்களாய் இருங்கள்; ஒருவரையொருவர் சகித்து, பொறுமையோடு அன்புடன் நடவுங்கள். 3சமாதானத்தில் இணைந்து, ஆவியானவரால் கொடுக்கப்பட்டிருக்கும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள உங்களால் இயன்ற எல்லாவற்றையும் செய்யுங்கள். 4நீங்கள் அழைக்கப்பட்டபோது, ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டீர்கள்; அதுபோலவே, ஒரே உடலும் ஒரே ஆவியானவரும், 5ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே திருமுழுக்குமே உண்டு. 6ஒரே இறைவனாகவும், எல்லோருக்கும் தந்தையாகவும் இருக்கிறவரும் ஒருவரே. அவர் எல்லோருக்கும் மேலாக ஆட்சி செய்கிறவர். அவரே எல்லோரோடும், எல்லோரிலும் செயலாற்றுகிறவர்.
7கிறிஸ்து தாராளமாய் கொடுத்திருக்கிறதற்கு ஏற்றவாறு, நம்மில் ஒவ்வொருவரும் அவருடைய கிருபை வரத்தைப் பெற்றிருக்கிறோம். 8ஆதலால்:
“அவர் வானமண்டலத்திற்கு மேலெழுந்து போனபோது,
தம்முடன் பல கைதிகளை அணியணியாய் கூட்டிச்சென்றார்.
அவர் மனிதருக்கு வரங்களையும் கொடுத்தார்”#4:8 சங். 68:18
என்று சொல்லப்பட்டிருக்கிறது.
9“அவர் மேலெழுந்து போனார்” என்பதன் அர்த்தம் என்ன? அவர் அதற்குமுன்னதாக பூமியின் தாழ்வான இடங்களுக்கு இறங்கினார் என்று அர்த்தமாகிறது அல்லவா? 10கீழே இறங்கிச் சென்றவர் தான் எல்லா வானங்களுக்கும் மேலாய், படைப்பு முழுவதிலும் தாம் நிறைந்திருப்பதற்காக மேலெழுந்து சென்றார். 11கிறிஸ்து சிலரை அப்போஸ்தலராகவும், சிலரை இறைவாக்கினராகவும், சிலரை நற்செய்தி வேலைக்காரர்களாகவும், இன்னும் சிலரை மேய்ப்பர்களாகவும், வேதாகம ஆசிரியர்களாகவும் இருக்கும்படி திருச்சபைக்குக் கொடுத்தார். 12கிறிஸ்துவின் பணிகளைச் செய்வதற்கு, இறைவனுடைய மக்களை ஆயத்தப்படுத்துவதற்காகவே கிறிஸ்துவின் உடலாகிய திருச்சபையை இவ்விதமாய் கட்டியெழுப்புவதே அவர் இவர்களைக் கொடுத்த நோக்கமாயிருந்தது. 13இவ்விதமாக நாம் எல்லோரும் இறைவனுடைய மகனைப்பற்றிய விசுவாசத்திலும், அறிவிலும் ஒருமனப்பட்டு, கிறிஸ்துவினுடைய முழுநிறைவான வளர்ச்சியின் அளவை பெற்று, நாம் முதிர்ச்சியடைந்த மக்களாவதே, அந்த நோக்கத்தின் முடிவாயிருக்கிறது.
14அப்பொழுது நாம் தொடர்ந்து குழந்தைத்தனமுள்ளவர்களாய் இருக்கமாட்டோம். காற்றினாலும் அலைகளினாலும் அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்படுவதுபோல், மனிதரின் வெவ்வேறு புதுப்புது போதனைகளினால், நாமும் அலைக்கழிக்கப்படமாட்டோம். மனிதரின் தந்திரமும் கபடமுமுள்ள ஏமாற்றும் சூழ்ச்சியில் இழுபடவுமாட்டோம். 15மாறாக அன்புடனே உண்மையைப் பேசுகிறவர்களாய், எல்லாவகையிலும் நம் தலைவராயிருக்கிற கிறிஸ்துவுக்குள் வளர்ச்சியடைவோம். 16அவராலேயே முழு உடலும், இணைக்கும் மூட்டுகளினால் ஒன்றிணைக்கப்பட்டு, வளர்ச்சியடைந்து அவை ஒவ்வொன்றும் தங்களுக்கு குறிக்கப்பட்ட வேலையைச் செய்வதால் அன்பில் பெருகுகிறது.
ஒளியின் பிள்ளைகளாக வாழ்வது
17எனவே கர்த்தரில் நான் இதை உங்களுக்கு வலியுறுத்தி சொல்கிறதாவது: நீங்கள் தொடர்ந்து யூதரல்லாதவர்களைப்போல, அவர்களின் பயனற்ற சிந்தனையில் வாழக்கூடாது. 18அவர்கள் விளங்கிக்கொள்வதில் மந்தமுள்ளவர்களாயும், இறைவனின் வாழ்விலிருந்து பிரிக்கப்பட்டவர்களாயும் வாழ்கிறார்கள்; இது அவர்களுடைய இருதயக்கடினத்தினால் ஏற்பட்ட அறிவீனத்தினால் நடக்கிறது. 19அவர்கள் முற்றிலும் உணர்வற்றவர்களாகி, தங்களைச் சிற்றின்பங்களுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள். இதனால் எல்லாவித அசுத்தமான செயல்களையும் செய்து, காம வேட்கையில் தொடர்ந்து ஈடுபட ஆசைப்படுகிறார்கள்.
20ஆனால் நீங்கள் கிறிஸ்துவை இவ்விதமாக கற்றுக்கொள்ளவில்லை. 21நீங்கள் நிச்சயமாகவே அவரைக்குறித்துக் கேள்விப்பட்டதும் இயேசுவில் இருக்கும் சத்தியதின்படியே நீங்கள் போதிக்கப்பட்டீர்கள். 22உங்கள் முந்திய வாழ்க்கை முறையைப் பொறுத்தவரையில், ஏமாற்றும் ஆசைகளினால் உங்கள் பழைய மனித சுபாவம் சீர்கெடுவதால், அதை நீக்கிவிட வேண்டும் என போதிக்கப்பட்டீர்கள்; 23உங்கள் மனப்பான்மையில் புதிதாக்கப்பட வேண்டும் என்றும் அறிந்திருக்கிறீர்கள். 24இறைவனுடைய தன்மையைக் கொண்டதாக இருக்கும்படி, உண்மையான நீதியிலும் பரிசுத்தத்திலும் உருவான புதிதாக்கப்பட்ட மனிதனுக்குரிய சுபாவத்தை தரித்துக்கொள்ளுங்கள்.
25ஆகையால் நீங்கள் ஒவ்வொருவரும், உங்களிடமிருந்து பொய் சொல்வதை அகற்றிவிடுங்கள். நாம் எல்லோரும் ஒரே உடலின் அங்கத்தினர்களாய் இருப்பதனால், நாம் ஒவ்வொருவரும் நமது அயலவருடன் உண்மையையே பேசவேண்டும். 26“நீங்கள் உங்கள் கோபத்தில் பாவம் செய்யவேண்டாம்”#4:26 சங். 4:4 (எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதியைப் பார்க்கவும்): பொழுது சாய்வதற்குள் உங்கள் கோபம் தணியட்டும். 27பிசாசுக்கு உங்கள் வாழ்வில் கால் வைக்க இடம் கொடாதிருங்கள். 28களவு செய்வதில் ஈடுபட்டவன் தொடர்ந்து களவு செய்யாமல், தனது கைகளினால் பயனுள்ள வேலைகளைச் செய்யவேண்டும். அப்போது ஏழைகளுடன் பகிர்ந்துகொள்வதற்கும், அவனிடம் ஏதாவது இருக்கும்.
29தீமையான வார்த்தைகள் உங்கள் வாயிலிருந்து வெளியே புறப்படவேண்டாம். ஆனால் கேட்பவர்கள் பயனடையும்படி, அவர்களுடைய தேவைக்கு ஏற்றவாறு, வளர்ச்சி பெறுவதற்கு உதவியான வார்த்தைகளையே பேசுங்கள். 30இறைவனுடைய பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்தாதிருங்கள். நீங்கள் இறைவனுடையவர்கள் என்பதற்கு உங்களின் மீட்பு நாள்வரை உங்கள்மீது பொறிக்கப்பட்ட அச்சடையாளமாய் ஆவியானவர் இருக்கிறார். 31எல்லா விதமான கசப்பு உணர்வுகள், சினம், கோபம், வாய்ச்சண்டை, அவதூறாய் பேசுதல் ஆகியவற்றையும், எல்லா விதமான தீங்கையும் விட்டுவிடுங்கள். 32ஒருவரில் ஒருவர் தயவுள்ளவர்களாயும், மனவுருக்கமுள்ளவர்களாயும் இருங்கள். கிறிஸ்துவில் இறைவன் உங்களை மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவரையொருவர் மன்னியுங்கள்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for எபேசியர் 4