YouVersion Logo
Search Icon

யாத்திராகமம் 13

13
தலையீற்றுக்கான அர்ப்பணம்
1யெகோவா மோசேயிடம், 2“முதற்பேறான எல்லா ஆண்களையும் எனக்கு அர்ப்பணம் செய்யவேண்டும். எந்த மனிதனானாலும், மிருகமானாலும் இஸ்ரயேலருக்குள் கர்ப்பத்திலிருந்து வரும் ஒவ்வொரு முதற்பேறும் எனக்குரியது” என்றார்.
3பின்பு மோசே இஸ்ரயேல் மக்களிடம் சொன்னதாவது, “நீங்கள் அடிமைத்தன நாடான எகிப்திலிருந்து வெளியேவந்த இந்த நாளை நினைவுபடுத்திக் கொண்டாடுங்கள். ஏனெனில் யெகோவா தமது வல்லமையான கரத்தினால் அவ்விடத்திலிருந்து உங்களை வெளியே கொண்டுவந்தார். புளிப்பூட்டப்பட்ட எதையும் சாப்பிடவேண்டாம். 4இன்று ஆபீப் மாதத்தில் நீங்கள் புறப்படுகிறீர்கள். 5யெகோவா உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுப்பேன் என வாக்குப்பண்ணிய, பாலும் தேனும் வழிந்தோடும் செழிப்பான நாடான கானானியர், ஏத்தியர், எமோரியர், ஏவியர், எபூசியர் என்பவர்களுடைய நாட்டுக்கு யெகோவா உங்களைக் கொண்டுவருவார். அப்போது இந்தப் பண்டிகையை வருடந்தோறும் இதே மாதத்தில் நீங்கள் கொண்டாடவேண்டும். 6புளிப்பில்லாத அப்பத்தை ஏழுநாட்களுக்குச் சாப்பிட்டு, ஏழாவதுநாள் யெகோவாவுக்கு பண்டிகையைக் கொண்டாடுவீர்களாக. 7ஏழுநாட்களும் புளிப்பில்லாத அப்பம் சாப்பிடவேண்டும்; உங்கள் வீட்டிலோ அல்லது நாட்டின் எல்லைக்குள்ளோ புளித்தது எதுவும் காணப்படக்கூடாது. 8அன்றையதினம் நீங்கள் உங்கள் மகன்களிடம், ‘நான் எகிப்திலிருந்து வந்தபோது யெகோவா எனக்குச் செய்தற்காகவே இதைச் செய்கிறேன்’ என்று சொல்லுங்கள். 9யெகோவாவின் சட்டம் உங்கள் வாயில் இருக்கவேண்டும் என்பதற்காக, இந்த கொண்டாட்டம் உங்கள் கையில் ஒரு அடையாளம் போலவும், உங்கள் நெற்றியில் ஒரு நினைவுச்சின்னம் போலவும் இருக்கும். ஏனெனில், யெகோவா தன் பலத்த கரத்தால் உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தார். 10ஆதலால் நீங்கள் வருடந்தோறும், குறித்த காலத்தில் இந்த நியமத்தைக் கைக்கொள்ளவேண்டும்.
11“யெகோவா உங்களுக்கும் உங்கள் முற்பிதாக்களுக்கும் கொடுப்பேன் என்று வாக்குப்பண்ணியபடி, கானானியருடைய நாட்டுக்கு உங்களைக் கொண்டுவந்து, அதை உங்களுக்குக் கொடுத்தபின்பு, 12யெகோவாவுக்கு நீங்கள் ஒவ்வொரு கர்ப்பத்தின் முதற்பிறப்புகளை கொடுக்கவேண்டும். உங்கள் கால்நடைகளில் ஆண் தலையீற்றுகளெல்லாம் யெகோவாவுக்கு உரியவை. 13கழுதையின் தலையீற்றுகளையெல்லாம் ஒரு செம்மறியாட்டுக் குட்டியால் மீட்டுக்கொள்ள வேண்டும்#13:13 ஏனெனில் கழுதையை பலியிடுவது ஏற்றுக்கொள்ளப்படாது; மீட்காவிட்டால், அதன் கழுத்தை முறித்துப்போடுங்கள். உங்கள் மகன்களில் முதற்பேறானவனை மீட்டுக்கொள்ள வேண்டும்.
14“இனிவரும் காலத்தில் உங்கள் மகன்கள் உங்களிடம், ‘இதன் பொருள் என்ன?’ என்று கேட்கும்போது அவர்களிடம், ‘யெகோவா தமது பலத்த கரத்தினால் அடிமைத்தன நாடான எகிப்திலிருந்து எங்களை வெளியே கொண்டுவந்தார். 15பார்வோன் எங்களைப் போகவிடாமல் பிடிவாதமாய் மறுத்தபோது, யெகோவா எகிப்திலுள்ள மனிதருடைய ஒவ்வொரு முதற்பேறானதையும், மிருகத்தினுடைய ஒவ்வொரு தலையீற்றையும் கொன்றுபோட்டார். அதனால்தான் நாங்களும் ஒவ்வொரு கர்ப்பத்தின் தலையீற்றான ஆணையும் யெகோவாவுக்குப் பலியிட்டு, என் முதற்பேறான மகன்களை மீட்டுக்கொள்கிறோம்.’ 16யெகோவா தமது பலத்த கரத்தினால் எங்களை எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டுவந்தார் என்பதற்கு, இப்பண்டிகை உங்கள் கையில் ஒரு அடையாளம் போலவும், உங்கள் நெற்றியில் ஒரு நினைவுச்சின்னம் போலவும் இருக்கும் என்று சொல்லுங்கள்” என்றார்.
செங்கடலைக் கடந்துசெல்லுதல்
17பார்வோன் இஸ்ரயேலரைப் போகவிட்டபின்பு, பெலிஸ்தியரின் நாட்டின் வழி குறுகியதாக இருந்தபோதிலும், இறைவன் அவர்களை அதன் வழியாக நடத்திச் செல்லவில்லை. ஏனெனில், “அவர்கள் யுத்தத்தை எதிர்கொண்டால், தங்கள் மனதை மாற்றி எகிப்திற்குத் திரும்பிவிடுவார்கள்” என இறைவன் சொன்னார். 18அதனால் இறைவன் மக்களை பாலைவனப் பாதைவழியே சுற்றி, செங்கடலை நோக்கி வழிநடத்தினார். இஸ்ரயேலர் ஆயுதம் அணிந்தவர்களாய், எகிப்திலிருந்து புறப்பட்டு யுத்தத்திற்கு ஆயத்தமாய் சென்றார்கள்.
19மோசே யோசேப்பின் எலும்புகளைத் தன்னுடன் எடுத்துச் சென்றான். ஏனெனில், யோசேப்பு இஸ்ரயேலின் மகன்களிடம் இவ்வாறு செய்யும்படி சத்தியம் வாங்கியிருந்தான். அவன் அவர்களிடம், “இறைவன் நிச்சயமாய் உங்களுக்கு உதவிக்கு வருவார்; அப்பொழுது நீங்கள் எனது எலும்புகளை இந்த இடத்திலிருந்து உங்களுடன் எடுத்துச்செல்ல வேண்டும்”#13:19 ஆதி. 50:25 என்று சொல்லியிருந்தான்.
20அவர்கள் சுக்கோத்திலிருந்து வெளியேறிய பின்பு, பாலைவனத்தின் அருகிலுள்ள ஏத்தாமிலே முகாமிட்டிருந்தார்கள். 21பகலில் அவர்கள் போகும் வழியாய் அவர்களுக்கு வழிகாட்ட, ஒரு மேகத்தூணாய் அவர்களுக்குமுன் யெகோவா சென்றார். இரவில் அவர்களுக்கு வெளிச்சம் கொடுப்பதற்காக, நெருப்புத்தூணாய் அவர்களுக்குமுன் சென்றார். இப்படியாக அவர்களால் இரவும் பகலும் பயணம் செய்ய முடிந்தது. 22பகலில் மேகத்தூணும், இரவில் நெருப்புத்தூணும் மக்களுக்குமுன் தன் இடத்தைவிட்டு விலகவில்லை.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for யாத்திராகமம் 13