YouVersion Logo
Search Icon

எசேக்கியேல் 28

28
தீரு அரசனுக்கெதிரான இறைவாக்கு
1யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது, அவர்: 2“மனுபுத்திரனே, தீருவின் ஆளுநனிடம் நீ சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே:
“ ‘நீ உன் இருதயத்தில்,
“நான் ஒரு தெய்வம்;
கடல்களின் நடுவே ஒரு தெய்வ அரியணையிலே நான் வீற்றிருக்கிறேன்”
என பெருமையில் பேசுகிறாய்.
ஒரு தெய்வத்தைப்போன்ற ஞானியென உன்னை நீ எண்ணிக்கொண்டாலும்
நீ மனிதனேயன்றி தெய்வமல்ல;
3தானியேலைவிட நீ அறிவாளியோ?
உனக்கு மறைவான இரகசியம் இல்லையோ?
4நீ உன் ஞானத்தினாலும்,
விளங்கும் ஆற்றலினாலும் உனக்காகச் செல்வத்தைச் சம்பாதித்தாய்.
தங்கத்தையும் வெள்ளியையும்
உன் களஞ்சியங்களில் குவித்தாய்!
5வர்த்தகத்தில் உனக்குள்ள திறமையினால்
உன் செல்வத்தை நீ பெருக்கிக்கொண்டாய்:
உன் செல்வத்தால்
உன் இருதயமும் மேட்டிமையடைந்தது.
6“ ‘ஆகையால், ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே:
“ ‘நீ ஒரு தெய்வத்தைப்போல்
ஞானமுள்ளவன் என எண்ணியபடியால்,
7நாடுகளில் இரக்கமே இல்லாத பிறநாட்டினரை நான்
உனக்கு விரோதமாகக் கொண்டுவரப் போகிறேன்.
அவர்கள் உன் அழகுக்கும் அறிவுக்கும் விரோதமாகத் தங்கள் வாள்களை உருவி,
துலங்குகின்ற உன் சிறப்பைக் குத்திப்போடுவார்கள்.
8அவர்கள் உன்னைக் குழியிலே தள்ளுவார்கள்.
நீ கடல்களின் நடுவே
ஒரு அவலமான சாவுக்கு உள்ளாவாய்!
9அப்பொழுது நீ, உன்னைக் கொலைசெய்வோர் முன்னிலையில்
“நான் ஒரு தெய்வம்” என்று சொல்வாயோ?
உன்னைக் கொலைசெய்வோர் கைகளில்
நீ தெய்வமல்ல, மனிதனேதான்.
10பிறநாட்டாரின் கைகளிலே
நீ விருத்தசேதனம் அற்றவனைப்போல சாவாய்.
“நானே இதைச் சொன்னேன்” என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.’ ”
11பின்னும் யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது: 12“மனுபுத்திரனே, நீ தீருவின் அரசனைக் குறித்துப் புலம்பிச் சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே.
“ ‘நீ ஞானத்தால் நிறைந்து, அழகில் முழுநிறைவுபெற்று,
முழுநிறைவின் மாதிரியாய்த் திகழ்ந்தாய்.
13இறைவனின் தோட்டமாகிய
ஏதேனில் நீ இருந்தாய்.
சிவப்பு இரத்தினம், புஷ்பராகம்,
வைரம், பளிங்கு, கோமேதகம்,
யஸ்பி, இந்திரநீலம், மரகதம்,
மாணிக்கம் ஆகிய அத்தனை விலைமதிப்புள்ள கற்களும் உன்னை அலங்கரித்தன.
இவை எல்லாம் தங்க வேலைப்பாட்டுடன் அமைந்திருந்தன.
நீ உண்டாக்கப்பட்ட நாளிலேயே அவை ஆயத்தம் செய்யப்பட்டிருந்தன.
14நீ காவல்செய்யும் கேருபீனாக அபிஷேகம் செய்யப்பட்டாய்.
ஏனெனில் அப்படியே நான் உன்னை நியமித்தேன்.
இறைவனின் பரிசுத்த மலையில் நீ இருந்தாய்.
நெருப்புக்கனல் வீசும் கற்களிடையே நீ நடந்தாய்.
15நீ உண்டாக்கப்பட்ட நாள் தொடங்கி,
கொடுமை உன்னில் காணப்படுமட்டும்
உன்னுடைய வழிகளில் நீ குற்றமற்றிருந்தாய்.
16உன்னுடைய வியாபாரத்தின் மிகுதியினால்,
நீ கொடுமை நிறைந்தவனாகிப் பாவம் செய்தாய்.
ஆகவே, காவல்காக்கும் கேருபே,
இவ்விதமாய் நான் உன்னை நெருப்புக்கனல் வீசும்
கற்களினிடையிலிருந்து வெளியேற்றினேன்.
நான் உன்னை இறைவனின் மலையிலிருந்து
அவமானத்தோடு துரத்திவிட்டேன்.
17உன் அழகினிமித்தம்
உன் இருதயம் பெருமைகொண்டது,
உன் செல்வச் சிறப்பின் காரணத்தால்
உன் ஞானத்தை சீர் கெடுத்துக்கொண்டாய்.
ஆதலால் உன்னைப் பூமியை நோக்கி எறிந்துவிட்டேன்.
அரசர்கள் முன் உன்னைக் காட்சிப் பொருளாக்கினேன்.
18உன் அநேக பாவங்களாலும், அநீதியான வர்த்தகத்தினாலும்
பரிசுத்த இடங்களின் தூய்மையை நீ கெடுத்தாய்.
ஆகையால் நான் ஒரு நெருப்பை உன்னிலிருந்து புறப்படச் செய்தேன்.
அது உன்னைச் சுட்டெரித்தது.
மேலும், உன்னைப் பார்த்துக்கொண்டிருந்த எல்லோருடைய
பார்வையிலும் பூமியிலே உன்னைச் சாம்பலாக்கினேன்.
19உன்னை அறிந்திருந்த எல்லா நாடுகளும்
உன்னைக் கண்டு திகைத்தார்கள்.
உனக்கு ஒரு பயங்கரமான முடிவு வந்துவிட்டது.
நீ இனி ஒருபோதும் இருக்கமாட்டாய்.’ ”
சீதோனுக்கு விரோதமாய் இறைவாக்கு
20யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது. 21“மனுபுத்திரனே, நீ சீதோனுக்கு எதிராக உன் முகத்தைத் திருப்பி, அவளுக்கு விரோதமாய் இறைவாக்கு உரைத்துச் சொல்லவேண்டியதாவது: 22ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே:
“ ‘சீதோனே, நான் உனக்கு விரோதமாயிருக்கிறேன்;
நான் உன் மத்தியில் மகிமைப்படுவேன்.
நான் அவள்மீது தண்டனையை வரச்செய்து,
எனது பரிசுத்தத்தை அவள் மத்தியில் காட்டும்போது,
நானே யெகோவா என்பதை மனிதர்கள் அறிந்துகொள்வார்கள்.
23நான் அவள்மீது கொள்ளைநோயை அனுப்பி,
அவளுடைய வீதிகளில் இரத்தத்தை ஓடப்பண்ணுவேன்.
ஒவ்வொரு திசையிலுமிருந்து அவளுக்கெதிராக வரும் வாளினால் கொல்லப்படுவோர்,
அவள் மத்தியில் விழுவார்கள்.
அப்பொழுது மனிதர்கள் நானே யெகோவா என்பதை அறிந்துகொள்வார்கள்.
24“ ‘இஸ்ரயேலருக்கோ வேதனைமிக்க முட்புதர்களும், கூரிய முட்களுமான வஞ்சனையுள்ள அயலவர் இனியொருபோதும் இருக்கமாட்டார்கள். அப்பொழுது அவர்கள் ஆண்டவராகிய யெகோவா நானே என்பதை அறிந்துகொள்வார்கள்.
25“ ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: பல நாடுகளிடையே சிதறடிக்கப்பட்டிருக்கின்ற இஸ்ரயேலை, நான் அவர்களுக்குள்ளேயிருந்து ஒன்றுசேர்க்கும்போது, அந்த நாடுகளின் பார்வையில், இஸ்ரயேலர் மத்தியில் என்னைப் பரிசுத்தராக நான் காண்பிப்பேன். பின்பு அவர்கள் எனது அடியவன் யாக்கோபுக்கு நான் கொடுத்த அவர்களுடைய சொந்த நாட்டிலே குடியிருப்பார்கள். 26அங்கே அவர்கள் பாதுகாப்பாகக் குடியிருந்து, வீடுகளைக் கட்டி, திராட்சைத் தோட்டங்களை அமைப்பார்கள். அவர்களைத் தூற்றிய அவர்களுடைய அயலவர்கள் அனைவர்மீதும் நான் தண்டனையை வருவிக்கும்போது, இஸ்ரயேலர் பாதுகாப்பாக வாழ்வார்கள். அப்பொழுது அவர்களுடைய இறைவனாகிய யெகோவா நானே என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.’ ” என்றார்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for எசேக்கியேல் 28