YouVersion Logo
Search Icon

எசேக்கியேல் 41

41
1பின்பு அம்மனிதன் என்னை ஆலயத்தின் பெரிய மண்டபமான பரிசுத்த இடத்திற்குள் அழைத்துவந்து ஆதாரங்களை அளந்தான். ஒவ்வொரு புறத்திலும் அவற்றின் அகலம் ஆறு முழங்களாயிருந்தன. 2புகுமுக வாசல் பத்துமுழ அகலமாயிருந்தது. இரு பக்கங்களிலும் இருந்து தொடுத்துநிற்கும் சுவர்கள் ஐந்துமுழ அகலமுடையனவாயிருந்தன. அவன் வெளியே பரிசுத்த இடத்தை அளந்தான். அது நாற்பது முழ நீளமும், இருபதுமுழ அகலமுமாய் இருந்தது.
3பின்பு அவன் பரிசுத்த இடத்தின் உள் அறைக்குப் போய் புகுமுக வாசலின் ஆதாரங்களை அளந்தான். அவை ஒவ்வொன்றும் இரண்டு முழ அகலமாய் இருந்தன. புகுமுக வாசல் ஆறுமுழ அகலமும், ஒவ்வொரு புறத்திலும் தொடுத்துநிற்கும் சுவர்கள் ஏழு முழ அகலமுமாயிருந்தன. 4அவன் அந்த பரிசுத்த இடத்தின் உள் அறையின் நீளத்தை அளந்தான். அது இருபது முழங்களாயிருந்தது. அதன் அகலம் பரிசுத்த இடத்துக்குக் குறுக்கு கடைசிவரையும் இருபது முழங்களாயிருந்தது. அவன் என்னிடம், “மகா பரிசுத்த இடம் இதுவே” என்றான்.
5பின்பு அவன் ஆலயத்தின் சுவரை அளந்தான். அது ஆறுமுழ தடிப்பாயிருந்தது. ஆலயத்தைச் சுற்றியிருந்த பக்க அறைகள் ஒவ்வொன்றும் நான்கு முழ அகலமாயிருந்தன. 6பக்க அறைகள் ஒன்றின் மேலொன்றாக மூன்று அடுக்குகளாக கட்டப்பட்டிருந்தன. ஒவ்வொரு அடுக்கிலும் முப்பது அறைகள் அமைந்திருந்தன. பக்க அறைகளின் ஆதாரமாகப் பயன்படும் விளிம்புகள் ஆலயச்சுவரைச் சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்தன. ஆதலால் ஆதாரங்கள் ஆலயச்சுவர்களுக்கு உள்ளே இணைக்கப்படவில்லை. 7ஆலயத்தைச் சுற்றியிருந்த பக்க அறைகள் ஒவ்வொரு தொடர்த்தளத்திலும் அகலத்தில் கூடியனவாய் இருந்தன. அறைகள் மேலே போகப்போக அகலத்தில் கூடியதாயிருக்கத்தக்கதாக, ஆலயத்தைச் சுற்றியிருந்த அமைப்பு உயர்ந்து கொண்டுபோகும் நிலையில் கட்டப்பட்டிருந்தது. கீழ்மாடியிலிருந்து மேல்மாடிக்குச் செல்ல மத்திய மாடிக்கூடவே படிவரிசையொன்று அமைக்கப்பட்டிருந்தது.
8பக்க அறைகளுக்கு அஸ்திபாரமாக அமைந்திருந்த உயரமான அடித்தளம் ஆலயத்தைச் சுற்றிலும் காணப்பட்டது. அது ஒரு அளவுகோல் நீளம், அதாவது ஆறு நீள முழங்களாய் இருந்தன. 9பக்க அறைகளின் வெளிச்சுவர் ஐந்துமுழ தடிப்பாயிருந்தது. ஆலயத்தின் பக்க அறைகளுக்கும், 10ஆசாரியர்களின் அறைகளுக்கு இடையில் இருந்த திறந்தவெளி இருபதுமுழ அகலமுடையனவாய் ஆலயத்தைச் சுற்றிலுமிருந்தன. 11திறந்த வெளியிலிருந்த பக்க அறைகளுக்கு புகுமுக வாசல்கள் இருந்தன. அவற்றுள் ஒன்று வடக்கிலும், மற்றது தெற்கிலுமாக அமைந்திருந்தன. திறந்த வெளியைச் சார்ந்திருந்த அடித்தளம் சுற்றிலும் ஐந்துமுழ அகலமாயிருந்தது.
12மேற்குப்புறத்தில் ஆலய முற்றத்தை நோக்கியிருந்த கட்டடம் எழுபது முழ அகலமாயிருந்தது. கட்டடச் சுவர் சுற்றிலும் ஐந்துமுழ தடிப்பாக இருந்தது. அதன் நீளம் தொண்ணூறு முழங்களாயிருந்தது.
13பின்பு அவன் ஆலயத்தை அளந்தான். அது நூறு முழங்கள் நீளமுடையனவாயிருந்தது. ஆலய முற்றமும், சுவர்களுடன் சேர்ந்த கட்டடமும் நூறுமுழ நீளமாயிருந்தன. 14ஆலய முற்பகுதி உட்பட கிழக்கேயிருந்த ஆலய முற்றத்தின் அகலம் நூறு முழங்களாயிருந்தது.
15பின்பு அவன் ஆலயத்தின் பின்புறமாக உள்ள முற்றத்தை நோக்கியிருந்த கட்டடத்தின் நீளத்தை அளந்தான். அதன் ஒவ்வொரு புறத்திலுமிருந்த நுழை மாடங்களையும் சேர்த்து அளந்தான். அவை நூறு முழங்களாய் இருந்தன.
மகா பரிசுத்த இடமும், உள் பரிசுத்த இடமும், முற்றத்தை நோக்கியிருந்த புகுமுக மண்டபமும் மரப்பலகைகளால் மூடப்பட்டிருந்தன. 16ஆலயத்தின் உட்சுவர்களெல்லாம், ஜன்னல்களுக்கு மேலும் கீழும் மரப்பலகைகளால் மூடப்பட்டிருந்தன. அத்துடன் ஜன்னல்களும், மரப்பலகைகளினால் மூடப்படிருந்தன. 17மகா பரிசுத்த இடத்துக்குப் போகும் புகுமுக வாசலுக்கு வெளியே போக இருந்த இடமும் மரப்பலகைகளால் மூடப்பட்டிருந்தன. 18எல்லாச் சுவர்களிலும் கேருபீன்களும், பேரீச்சமரங்களும் செதுக்கப்பட்டிருந்தன. பேரீச்சமரமும் கேருபீனும் மாறிமாறி இருந்தன. ஒவ்வொரு கேருபீனும் இரண்டு முகங்களைக்கொண்டிருந்தன. 19ஒரு புறத்தில் பேரீச்சமரத்தை நோக்கிய ஒரு மனித முகமும், மறுபுறத்தில் பேரீச்சமரத்தை நோக்கிய ஒரு சிங்கமுகமும் இருந்தது. இவ்வாறு ஆலயம் முழுவதும் சுற்றிச் செதுக்கப்பட்டிருந்தன. 20தரையிலிருந்து புகுமுக வாசலுக்கு மேலாயிருந்த இடம் வரையும் கேருபீன்களும் பேரீச்சமரங்களும் பரிசுத்த இடத்தின் வெளிப்புற சுவரில் செதுக்கப்பட்டிருந்தன.
21பரிசுத்த இடம் நீண்ட சதுரமான கதவு நிலைகளைக் கொண்டிருந்தன. மகா பரிசுத்த இடத்துக்கு முன்புறமாக இருந்ததும் அதை ஒத்திருந்தது. 22அங்கே மூன்றுமுழ உயரமும் இரண்டு முழ சதுரமும் கொண்ட, மரத்தினாலான பலிபீடம் ஒன்று இருந்தது. அதன் மூலைகளும், அதன் அடித்தளமும், அதன் பக்கங்களும் மரத்தினாலானவை. அந்த மனிதன் என்னிடம், “யெகோவாவுக்கு முன்பாக இருக்கும் மேஜை இதுவே” என்றான். 23பரிசுத்த இடம், மகா பரிசுத்த இடம் இரண்டுமே இரட்டைக் கதவுகளைக் கொண்டிருந்தன. 24ஒவ்வொரு வாசலுக்கும் இருகதவுகள், அதாவது, இணைக்கப்பட்ட இருகதவுகள் இருந்தன. 25பரிசுத்த இடத்தின் கதவுகளிலும் மதில்களைப் போன்றே கேருபீன்களும் பேரீச்சமரங்களும் செதுக்கப்பட்டிருந்தன, புகுமுக மண்டபத்தின் முன்பக்கத்தில் மரத்தினாலான தொங்கும் தட்டியும் இருந்தது. 26புகுமுக மண்டபத்தின் பக்கச் சுவர்களில் ஒவ்வொருபுறமும் பேரீச்சமரம் செதுக்கப்பட்ட ஒடுங்கிய ஜன்னல்கள் இருந்தன. ஆலயத்தின் பக்க அறைகளும் தொங்கும் தட்டிகளைக் கொண்டிருந்தன.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in