YouVersion Logo
Search Icon

எசேக்கியேல் 42

42
ஆசாரியர்களின் அறைகள்
1பின்பு அந்த மனிதன் என்னை வடப்பக்கமாக வெளிமுற்றத்துக்கு அழைத்து வந்தான். அங்கே ஆலய முற்றத்துக்கு எதிரிலும், வடபுறத்திலிருந்த வெளிமதிலுக்கு எதிரிலும் அறைகள் இருந்தன. 2வடக்கு முகமாய்க் கதவுகளைக் கொண்டிருந்த கட்டடம் நூறுமுழ நீளமும் ஐம்பதுமுழ அகலமுமாயிருந்தது. 3உள்முற்றத்தின் எதிரே ஒருநிரை மாடங்கள் இருந்தன. வெளிமுற்றத்தின் எதிரே இன்னுமொரு நிரை மாடங்கள் இருந்தன. ஒவ்வொரு அறையும் இருபதுமுழ நீளமாயிருந்தது. இவ்வாறு இரு பகுதிகளிலும் இருந்த மூன்று தளங்களிலும், ஒன்றையொன்று நோக்கிய வண்ணமாக மாடங்கள் இருந்தன. 4அறைகளுக்கு முன்னால் பத்துமுழ அகலமும் நூறுமுழ நீளமும் கொண்ட உட்புற வழியொன்று இருந்தது. அந்த அறைகளின் கதவுகள் வடக்குப்புறமாக இருந்தன. 5மேலறைகள் ஒடுக்கமானவைகளாயிருந்தன. ஏனெனில், நடைபாதைகள் கட்டடத்தின் கீழ் மாடியிலும், மத்திய மாடியிலும், எடுத்திருந்த இடத்தைப் பார்க்கிலும், மேல்மாடியில் அதிக இடத்தை எடுத்திருந்தன. 6மூன்றாம் மாடியிலிருந்த அறைகள் முற்றங்களைப்போல் தூண்களைக் கொண்டிருக்கவில்லை. எனவே அவை கீழ் மாடியையும் மத்திய மாடியையும்விட, குறைந்த நிலப்பரப்பை உடையனவாயிருந்தன. 7அறைகளுக்கும் வெளிமுற்றத்துக்கும் சமாந்தரமாக அங்கே வெளிச்சுவரொன்று இருந்தது. அது அறைகளுக்கு முன் ஐம்பது முழம் நீட்டப்பட்டிருந்தது. 8வெளிமுற்றத்தை அடுத்து வரிசையாக அமைந்திருந்த அறைகள் ஐம்பதுமுழ நீளமாய் இருந்தன. ஆலயத்திற்குச் சமீபமாய் இருந்த அறைகளின் வரிசை நூறுமுழ நீளமாயிருந்தது. 9வெளிமுற்றத்திலிருந்து கீழ் மாடியறைகளுக்குப் போகத்தக்கதாக, கிழக்குப் பக்கமாக ஒரு புகுமுக வாசல் இருந்தது.
10தெற்குப் பக்கத்தில் இருந்த வெளிமுற்றச்சுவர் ஓரமாக, ஆலய முற்றத்தை அடுத்தும், வெளிமதிலுக்கு எதிராக இருந்த கட்டடத்தில் இரண்டுநிரை அறைகள் இருந்தன. 11அவைகளுக்கு இடையில் ஒரு பாதை இருந்தது. அந்த அறைகள் வடக்கேயிருந்த அறைகளைப் போன்றவை. அவைகளும் அதே நீள அகலம் கொண்டவை. வெளியேறும் வாசல்களும் அவற்றின் அளவுகளும் ஒரே மாதிரியானவை. வடக்கிலிருந்த வாசல்களைப்போலவே, 12தெற்கிலிருந்த அறை வாசல்களும் அமைந்திருந்தன. உட்பக்கத்தின் நடைபாதையின் கிழக்குப்பக்கத்தின் முடிவில் ஒரு வாசல் இருந்தது. அதன் வழியாகவே மக்கள் தெற்கு அறைகளுக்குப் போனார்கள். தெற்கு சுவர், வெளியிலிருந்து அறைகளுக்குக் கிழக்குப்பக்கமாய்ப் போனது.
13பின்பு அவன் என்னிடம், “ஆலய முற்றத்தை நோக்கியிருக்கும் வடக்கு தெற்கு அறைகள் ஆசாரியருக்கான அறைகள். அங்கே யெகோவாவைச் சந்திக்கும் ஆசாரியர்கள் மகா பரிசுத்த காணிக்கைப் பொருட்களைச் சாப்பிடுவார்கள். மகா பரிசுத்த காணிக்கைகளையும், தானிய காணிக்கைகளையும், பாவநிவாரண காணிக்கைகளையும், குற்றநிவாரண காணிக்கைகளையும் அங்கே வைப்பார்கள். அந்த இடம் பரிசுத்தமானது. 14ஆசாரியர்கள் பரிசுத்த பகுதிக்குள்போனதும், ஆராதனைக்கான உடைகளைக் கழட்டும்வரை அவர்கள் வெளிமுற்றத்துக்குப் போகக்கூடாது. ஏனெனில் அவை பரிசுத்தமானவை. மக்களுக்காக இருக்கும் இடங்களுக்கருகே போகுமுன் அவர்கள் வேறு உடைகளை உடுத்திக்கொள்ளவேண்டும் என்றான்.”
15அவன் ஆலய உட்பகுதியில் இருந்த அனைத்தையும் அளந்து முடித்தான். பின்பு அவன், என்னைக் கிழக்குவாசல் பக்கமாக அழைத்துப்போய் அப்பகுதிகளைச் சுற்றி அளந்தான். 16அவன் அளவுகோலினால் கிழக்குப்பக்கத்தை அளந்தான். அது ஐந்நூறு முழங்களாயிருந்தது. 17அவன் வடக்குப் பக்கத்தை அளந்தான். அது அளவுகோலினால் ஐந்நூறு முழங்களாயிருந்தது. 18அவன் தெற்குப்பக்கத்தை அளந்தான். அதுவும் அளவுகோலினால் ஐந்நூறு முழங்களாயிருந்தது. 19பின்பு அவன் மேற்குப்பக்கம் திரும்பி அளந்தான். அதுவும் அளவுகோலினால் ஐந்நூறு முழங்களாயிருந்தது. 20இவ்வாறாக அவன் நான்கு பக்கங்களிலுமுள்ள எல்லா பகுதிகளையும் அளந்தான். அதைச் சுற்றிலும் ஒரு மதில் இருந்தது. அது ஐந்நூறு முழ நீளம், ஐந்நூறு முழ அகலமாய் இருந்தது. அது பொது இடத்தைப் பரிசுத்த இடத்திலிருந்து வேறுபடுத்துவதாக அமைந்திருந்தது.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in