YouVersion Logo
Search Icon

எசேக்கியேல் 45

45
நாட்டைப் பங்கிடுதல்
1“ ‘நீங்கள் நாட்டை உரிமைச்சொத்தாகப் பங்கிடும்போது நாட்டின் ஒரு பங்கைப் பரிசுத்த பகுதியாக யெகோவாவுக்கென ஒதுக்கிவைக்கவேண்டும். அது 25,000 முழ நீளமும் 20,000 முழ அகலமுமாய் இருக்கவேண்டும். அப்பகுதி முழுவதும் பரிசுத்த இடமாக இருக்கும். 2அதில் 500 முழ சதுரமான பகுதி பரிசுத்த ஆலயத்திற்கென இருக்கவேண்டும். அதைச் சுற்றிலும் 50 முழ அகலமான வெளியான நிலம் இருக்கவேண்டும். 3அப்பரிசுத்த பகுதியில் 25,000 முழ நீளமும், 10,000 முழ அகலமும்கொண்ட பகுதியை வேறுபடுத்தி வைக்கவேண்டும். அதில் மகா பரிசுத்தமான பரிசுத்த இடம் இருக்கும். 4அது யெகோவாவுக்கு முன்பாக பரிசுத்த இடத்தில் ஊழியம் செய்ய அருகில் செல்லும் ஆசாரியருக்குரிய நிலத்தின் பரிசுத்த பங்காக இருக்கும். அது அவர்களுடைய வீடுகளுக்கான இடமாகவும் பரிசுத்த இடத்திற்குரிய பரிசுத்த பகுதியாகவும் இருக்கும். 5ஆலயத்தின் 25,000 முழ நீளமும், 10,000 முழ அகலமும்கொண்ட ஒரு பகுதி அங்கு பணிபுரியும் லேவியருக்குரிய உடைமையாயிருக்கும். அங்கு அவர்கள் தாங்கள் வசிப்பதற்கான நகரங்களை அமைத்துக்கொள்வார்கள்.
6“ ‘பரிசுத்த பங்கிற்கு அடுத்தாற்போல், 25,000 முழ நீளமும் 5,000 முழ அகலமும்கொண்ட நிலத்தை நகரத்திற்குரிய சொத்தாகக் கொடுக்கவேண்டும். இது முழு இஸ்ரயேல் குடும்பத்திற்கும் சொந்தமாயிருக்கும்.
7“ ‘ஒவ்வொரு புறத்திலும் பரிசுத்த பகுதியின் எல்லைகளையும் நகரத்துக்குரிய சொத்தின் எல்லையையும் கொண்டதாக அரசனுக்குரிய நிலம் அமைந்திருக்கும். அது மேற்குப்புறத்தில் மேற்குப்பக்கமாகவும், கிழக்குப்புறத்தில் கிழக்குப்பக்கமாகவும் அகன்றிருக்கும். மேற்கிலிருந்து கிழக்கு எல்லைவரையுள்ள பகுதி நீளமாய்போய் ஒரு கோத்திரப் பங்குக்கு எதிராயிருக்கவேண்டும். 8அந்நிலம் இஸ்ரயேலிலே அரசனுடைய உரிமைச்சொத்தாக இருக்கும். இனிமேல் என் அரசர்கள் என் மக்களை ஒடுக்கமாட்டார்கள். இஸ்ரயேலர் தங்கள் கோத்திரங்களுக்கேற்ப நாட்டை உரிமையாக்கிக்கொள்ள அவர்கள் அனுமதிப்பார்கள்.
9“ ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: இஸ்ரயேலின் அரசர்களே, நீங்கள் செய்ததுபோதும். உங்கள் வன்முறைகளையும், ஒடுக்குதல்களையும் விட்டுவிட்டு, நீதியானவற்றையும் சரியானவற்றையும் செய்யுங்கள். என் மக்களின் உடைமைகளைப் பறிப்பதையும் நிறுத்துங்கள் என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். 10நீங்கள் நிறுத்துவதற்கு சரியான அளவைகளையும் திண்மம் அளப்பதற்கு சரியான அளவுடைய எப்பா மரக்கால்களையும், திரவம் அளப்பதற்கு சரியான அளவுடைய பாத் குடங்களையும் உங்களுக்கு இருக்கட்டும். 11எப்பா மரக்கால் அளவும், பாத் குடத்தின் அளவும் ஒரே அளவானவையாக இருக்கவேண்டும். ஒரு பாத் குடத்தின் அளவு ஓமர் அளவில் பத்தில் ஒன்றும், ஒரு எப்பா அளவும் ஒரு ஓமர் அளவில் பத்தில் ஒன்றுமாக இருக்கவேண்டும். இரு அளவுகளுக்கும் ஓமரே பொது அளவையாக இருக்கவேண்டும். 12நிறுத்துவதற்குரிய பொது அளவை, சேக்கலாக இருக்கவேண்டும். இருபது கேரா அளவே ஒரு சேக்கல் அளவாகும். அறுபது சேக்கல் ஒரு இராத்தலுக்கு சமானமாகும்.
13“ ‘நீங்கள் செலுத்தவேண்டிய விசேஷச நன்கொடையானது, ஒவ்வொரு ஓமர் அளவு கோதுமையிலிருந்து, ஆறில் ஒரு பங்கு எப்பா அளவாயும், ஒவ்வொரு ஓமர் அளவு வாற்கோதுமையிலிருந்து ஆறில் ஒரு பங்கு எப்பா அளவாயும் இருக்கவேண்டும். 14பாத் அளவு குடத்தினால் அளக்கப்பட்டு, நீங்கள் செலுத்தவேண்டிய எண்ணெயின் அளவு ஒவ்வொரு கோரிற்கும் ஒரு பாத்தின் பத்தில் ஒரு பங்காகும். ஒரு கோர் என்பது பத்து பாத் குடங்கள் அல்லது ஒரு ஓமர் ஆகும். ஏனெனில் பத்து பாத் குடங்கள் ஒரு ஓமருக்குச் சமமானதாகும். 15மேலும், இஸ்ரயேலில் நல்ல நீர்ப்பாய்ச்சலுள்ள இடத்தில் மேயும் மந்தைகளில் ஒவ்வொரு இருநூறு செம்மறியாடுகள்கொண்ட மந்தையிலிருந்தும் ஒரு செம்மறியாடு எடுக்கப்படவேண்டும். இவை மக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படி, தானிய காணிக்கைகளாகவும், தகன காணிக்கைகளாகவும், சமாதான காணிக்கைகளாகவும் பயன்படுத்தப்படும் என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். 16இஸ்ரயேலின் அரசனுடைய பயன்பாட்டிற்காகக் கொடுக்கப்படும் இவ்விசேஷ நன்கொடையில் நாட்டின் எல்லா மக்களும் பங்குகொள்வார்கள். 17பண்டிகைகளும், அமாவாசைகளும், ஓய்வுநாட்களுமான இஸ்ரயேல் குடும்பத்தாருக்கு நியமிக்கப்பட்டுள்ள எல்லா விசேஷ தினங்களிலும் தகன காணிக்கைகளையும், தானிய காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் கொடுக்கவேண்டியது, அரசனுடைய கடமையாகும். இஸ்ரயேல் குடும்பத்தாருக்கு பாவநிவிர்த்தி செய்வதற்காக அவன் பாவநிவாரண காணிக்கைகளையும், தானிய காணிக்கைகளையும், தகன காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் கொடுப்பான்.
18“ ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. முதலாம் மாதம் முதலாம் நாள் நீங்கள் பழுதற்ற காளையொன்றைக் கொண்டுவந்து பரிசுத்த ஆலயத்தைச் சுத்திகரிக்கவேண்டும். 19ஆசாரியன் பாவநிவாரண காணிக்கையின் இரத்தத்தில் கொஞ்சத்தை எடுத்து, அதை ஆலயத்தின் கதவு நிலைகளிலும், பலிபீட மேல்விளிம்பின் நான்கு மூலைகளிலும், உள்முற்றத்திலுள்ள வாசல் நிலைகளிலும் பூசவேண்டும். 20தவறுதலாகவோ, அறியாமையாலோ பாவம் செய்யும் ஒருவனுக்காகவும் மாதத்தின் ஏழாம்நாள் நீங்கள் அவ்வாறே செய்யவேண்டும். அவ்விதமாய் நீங்கள் ஆலயத்திற்காகப் பாவநிவிர்த்தி செய்யவேண்டும்.
21“ ‘முதலாம் மாதம் பதினான்காம் நாள் நீங்கள் ஏழுநாள் பண்டிகையான பஸ்காவைக் கொண்டாடவேண்டும். அந்நாட்களில், நீங்கள் புளிப்பில்லாமல் செய்யப்பட்ட அப்பத்தைச் சாப்பிடவேண்டும். 22அந்த நாளில் அரசன் தனக்காகவும், நாட்டின் எல்லா மக்களுக்காகவும் பாவநிவாரண காணிக்கையாகக் காளையொன்றைக் கொடுக்கவேண்டும். 23பண்டிகையின் ஏழுநாட்களிலும் ஒவ்வொரு நாளும் அவன் பழுதற்ற ஏழு காளைகளையும், ஏழு செம்மறியாட்டுக் கடாக்களையும், யெகோவாவுக்குத் தகன காணிக்கையாகக் கொடுக்கவேண்டும். அத்துடன் ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரண காணிக்கையாகவும் செலுத்தவேண்டும். 24அவன் ஒவ்வொரு இளங்காளையோடும், ஒவ்வொரு செம்மறியாட்டுக்கடாவோடும் ஒரு எப்பா அளவு தானிய காணிக்கையையும், ஒரு ஹின்#45:24 அதாவது, சுமார் 1 கேலன் அல்லது சுமார் 3.8 லிட்டர் என்பதாகும் அளவு எண்ணெயையும் கொடுக்கவேண்டும்.
25“ ‘ஏழாம் மாதம் பதினைந்தாம்நாள் ஆரம்பமாகும் ஏழுநாட்களுக்குக் கொண்டாடப்படும் கூடாரப்பண்டிகையின்போதும், அவன் பாவநிவாரண காணிக்கைகளுக்கும், தகன காணிக்கைகளுக்கும், தானிய காணிக்கைகளுக்கும் உரியவற்றையும், எண்ணெயையும் அதேவிதமாகச் செலுத்தவேண்டும்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for எசேக்கியேல் 45