கலாத்தியர் 2
2
பவுல் அப்போஸ்தலர்களால் ஏற்றுக்கொள்ளப்படுதல்
1பதினான்கு வருடங்களுக்குப் பின்பு, மீண்டும் பர்னபாவுடன் எருசலேமுக்குப் போனேன். நான் தீத்துவையும் என்னுடனே கூட்டிக்கொண்டு போனேன். 2நான் பெற்றுக்கொண்ட ஒரு வெளிப்பாட்டின்படிதான், அங்கு நான் போனேன். அங்கே யூதரல்லாத மக்களுக்கு நான் பிரசங்கிக்கிற நற்செய்தியைப் பற்றி, அவர்களுக்கு விவரமாகக் கூறினேன். தலைவர்களாகக் காணப்பட்டவர்களுடன் தனிப்பட்ட விதத்திலேயே நான் எடுத்துரைத்தேன். ஏனெனில் நான் செய்த ஊழியமும், செய்கின்ற ஊழியமும் பயனற்றதாகி விடக்கூடாது என்று நான் தீர்மானித்துக் கொண்டேன். 3ஆனால் என்னுடன் இருந்த தீத்து ஒரு கிரேக்கனாயிருந்தபோதுங்கூட, அவன் விருத்தசேதனம் செய்யப்படவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படவில்லை. 4ஆனால் இது ஒரு பிரச்சனையாக எழுந்தது. ஏனெனில், சில பொய்யான சகோதரர்களும் சபைக்குள் புகுந்துகொண்டு கிறிஸ்து இயேசுவுக்குள் நாங்கள் அனுபவித்த சுதந்திரத்தை அவர்கள் உளவுபார்த்து எங்களை அடிமைகளாக்கவே வந்தார்கள். 5ஆனால் நற்செய்தியின் சத்தியம் எப்பொழுதும் உங்களுடன் நிலைத்திருக்கும்படியாக, நாங்கள் அவர்களுக்குச் சற்றும் விட்டுக்கொடுக்கவில்லை.
6அங்கு முக்கியமானவர்களாய் கருதப்பட்டவர்கள்கூட என்னுடைய செய்தியுடன் வேறு ஒன்றையும் சேர்த்துக்கொள்ளவில்லை. அவர்கள் யாராயிருந்தாலும் பரவாயில்லை. இறைவன் ஆள்பார்த்து மதிப்பிடுகிறவர் அல்ல. 7யூதர்களுக்கு நற்செய்தியை பிரசங்கிக்கும் பணி பேதுருவுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டதுபோல, யூதரல்லாத மக்களுக்கு நற்செய்தியை அறிவிக்கும் பணி, எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறதை சபையின் தலைவர்கள் கண்டார்கள். 8ஏனெனில் யூதர்களுக்கு பேதுருவின் அப்போஸ்தல ஊழியத்தின் மூலமாக செயலாற்றிய இறைவன், யூதரல்லாத மக்களுக்கு அப்போஸ்தலனான என் ஊழியத்தின் மூலமும் செயலாற்றினார். 9இறைவனால் எனக்குக் கொடுக்கப்பட்ட கிருபையை திருச்சபையின் தூண்களாக எண்ணப்பட்ட யாக்கோபும், கேபாவும்#2:9 2:9 அதாவது, பேதுரு; என்று வசனங்கள் 11 மற்றும் 14 உள்ளது., யோவானும் கண்டார்கள். அப்பொழுது அவர்கள் எனக்கும், பர்னபாவுக்கும் வலதுகை கொடுத்து ஐக்கியம் பாராட்டினார்கள். நானும் பர்னபாவும் யூதரல்லாத மக்கள் மத்தியில் ஊழியம் செய்வது என்றும், அவர்களோ யூதமக்கள் மத்தியில் ஊழியம் செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. 10ஏழைகளையும் நாங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று மாத்திரம், எங்களை அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். உண்மையில் அவ்விதமாகவே செய்யவேண்டும் என்றே நானும் ஆவலாயிருந்தேன்.
பவுல் கேபாவை எதிர்த்தல்
11கேபா அந்தியோகியா பட்டணத்திற்கு வந்தபோது, அவன் அங்கே தவறு செய்தவனாகத் தெரிந்ததினால், நான் அவனை நேரடியாகவே எதிர்த்தேன். 12யாக்கோபிடம் இருந்து சிலர் வரும்வரைக்கும், கேபா யூதரல்லாத மக்களுடன் உட்கார்ந்து சாப்பிட்டான். ஆனால் அவர்கள் வந்தபோது, யூதர்களுக்குப் பயந்து, யூதரல்லாத மக்களிடமிருந்து புறம்பாய் விலகிக்கொள்ளத் தொடங்கினான். 13மற்ற யூதர்களும், இவ்விதமாய் கேபாவினுடைய வெளிவேஷத்தில் சேர்ந்துகொண்டார்கள். இதனால் பர்னபாவும், அவர்களுடைய இந்த வேஷத்தில் ஈர்க்கப்பட்டான்.
14அவர்கள் நற்செய்தியின் சத்தியத்தின்படி நடவாததை நான் கண்டபோது, அவர்கள் எல்லோருக்கும் முன்பாக நான் கேபாவைப் பார்த்து, “நீ ஒரு யூதன், ஆனால் யூதனைப்போல் அல்ல, நீ யூதரல்லாதவனைப் போலல்லவா வாழ்கிறாய். அப்படியிருக்க யூதருடைய வழக்கங்களைக் கைக்கொள்ளும்படி, யூதரல்லாத மக்களை நீ எப்படி வற்புறுத்தலாம்?” என்றேன்.
15“பிறப்பிலேயே யூதர்களாகிய நாங்களோ, பாவிகள் எனப்படும் யூதரல்லாதவர்கள் அல்ல. 16ஆனால் ஒருவன் மோசேயின் சட்டத்தின் கிரியைகளைக் கைக்கொள்வதனாலே அல்ல, இயேசுகிறிஸ்துவின் விசுவாசத்தின் மூலமாகவே, நீதிமானாக்கப்படுகிறான் என்பது நமக்குத் தெரியும். அதனாலேதான், நாமும் மோசேயின் சட்டத்தின் கிரியைகளைக் கைக்கொள்வதனால் அல்ல, கிறிஸ்துவின் விசுவாசத்தின்மூலமாய் நீதிமான்கள் ஆக்கப்படும்படி, கிறிஸ்து இயேசுவில் விசுவாசம் வைத்துள்ளோம். ஏனெனில் மோசேயின் சட்டத்தின் கிரியைகளைக் கைக்கொள்வதனால், ஒருவனுமே நீதிமானாக்கப்படுவதில்லை.
17“கிறிஸ்துவில் நீதிமான்களாக்கப்படும்படி விரும்புகிற, நாமும் பாவிகளாய் இருக்கிறோம் என்றால் கிறிஸ்து பாவத்தைப் பெருகச்செய்கிறார் என்பது அர்த்தமா? ஒருபோதும் இல்லை. 18ஆனால் நான் அழித்ததைத் திரும்பவும் நான் கட்ட முயன்றால், மோசேயின் சட்டத்தை மீறுகிறவன் என்பதையே அது காட்டுகிறது.
19“நான் இறைவனுக்கென்று வாழும்படி மோசேயின் சட்டத்தின் மூலமாக மோசேயின் சட்டத்திற்கே இறந்தேன். 20கிறிஸ்துவுடனேகூட நான் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். ஆகவே இப்பொழுது வாழ்வது நானல்ல, கிறிஸ்துவே எனக்குள் வாழ்கிறார். இந்த மாம்சத்தில் இப்பொழுது நான் வாழ்கிற வாழ்க்கையை இறைவனுடைய மகனின் விசுவாசத்தினாலேயே வாழ்கிறேன். அவரே என்னை நேசித்து, எனக்காகத் தம்மையே கொடுத்தார். 21இறைவனுடைய கிருபையை நான் புறக்கணிக்கமாட்டேன். ஏனெனில் நீதியை மோசேயின் சட்டத்தின் மூலமாய் அடைய முடியுமானால், கிறிஸ்து இறந்தது வீணானதே!”
Currently Selected:
கலாத்தியர் 2: TCV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.