YouVersion Logo
Search Icon

ஆதியாகமம் 18

18
மூன்று விருந்தினர்கள்
1வெப்பமான பகற்பொழுதிலே, ஆபிரகாம் தன்னுடைய கூடாரவாசலில் உட்கார்ந்திருக்கையில், மம்ரேயின் மரச்சோலையருகே, யெகோவா இன்னும் ஒருமுறை அவனுக்குத் தரிசனமானார். 2ஆபிரகாம் நிமிர்ந்து பார்த்தபோது, சிறிது தொலைவில் மூன்று மனிதர் நிற்கிறதைக் கண்டான். அவன் அவர்களைக் கண்டபோது, அவர்களைச் சந்திக்கும்படியாக, தன் கூடாரவாசலில் இருந்து விரைந்து சென்று தரைமட்டும் தலைகுனிந்து வணங்கினான்.
3அவன், “என் ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைத்திருந்தால், உமது அடியானிடம் வராமல் போய்விடாதேயும். 4என் வேலைக்காரர் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும், நீங்கள் யாவரும் உங்கள் கால்களைக் கழுவி இம்மரத்தின் கீழ் இளைப்பாறலாம். 5இப்பொழுது நீங்கள் அடியேனிடம் வந்திருக்கிறபடியால், சாப்பிடுவதற்கு ஏதாவது கொண்டுவருகிறேன்; பின்பு நீங்கள் இளைப்பாறி, உங்கள் வழியே போகலாம்” என்றான்.
அதற்கு அவர்கள், “நல்லது, நீ சொன்னபடியே செய்” என்றார்கள்.
6உடனே ஆபிரகாம் கூடாரத்துக்குள் சாராளிடம் விரைந்து சென்று, “சீக்கிரமாய் மூன்றுபடி#18:6 அதாவது, சுமார் 36 பவுண்டுகள் அல்லது 16 கிலோகிராம் இருக்கும் அளவு சிறந்த மாவை எடுத்துப் பிசைந்து கொஞ்சம் அப்பங்கள் சுடு” என்றான்.
7ஆபிரகாம் தன் மாட்டு மந்தைக்கு விரைந்து சென்று, ஒரு நல்ல இளங்கன்றைத் தெரிந்தெடுத்து, அதை ஒரு வேலைக்காரனிடம் கொடுத்தான்; அவன் அதைச் சமைப்பதற்கு விரைந்தான். 8பின்பு ஆபிரகாம், வெண்ணெயையும் பாலையும், சமைத்த இளங்கன்றின் இறைச்சியையும் கொண்டுவந்து அந்த மனிதர்கள் முன்பாக வைத்தான். அவர்கள் சாப்பிடும்போது, அவன் அவர்களுக்கு அருகே மரத்தின்கீழ் நின்றுகொண்டிருந்தான்.
9அவர்கள் ஆபிரகாமிடம், “உன் மனைவி சாராள் எங்கே?” என்று கேட்டார்கள்.
“அவள் கூடாரத்தில் இருக்கிறாள்” என்றான்.
10அப்பொழுது அம்மூவரில் ஒருவர், “அடுத்த வருடம் ஏறக்குறைய இதே காலத்தில் நான் நிச்சயமாகத் திரும்பவும் உன்னிடம் வருவேன், அப்பொழுது உன் மனைவி சாராளுக்கு ஒரு மகன் இருப்பான்” என்றார்.
சாராள், அவர்களுக்குப் பின்னால் இருந்த கூடாரத்தின் வாசலிலே நின்று அதைக்கேட்டுக் கொண்டிருந்தாள். 11ஆபிரகாமும் சாராளும் வயது முதிர்ந்தவர்களாய் இருந்தார்கள், சாராளும் பிள்ளைபெறும் வயதைத் தாண்டினவளாக இருந்தாள். 12எனவே சாராள், “என் உடல் தளர்ந்துவிட்டது, என் கணவரும் வயது சென்றவராகிவிட்டார், இப்பொழுது இந்த இன்பம் எனக்கு இருக்குமோ?” என நினைத்துத் தனக்குள்ளே சிரித்தாள்.
13அப்பொழுது யெகோவா ஆபிரகாமிடம், “ ‘நான் வயது முதிர்ந்தவளாய் இருக்கையில் உண்மையாய்ப் பிள்ளை பெறுவேனோ என சாராள் கூறிச் சிரித்தது ஏன்?’ 14யெகோவாவுக்கு செய்யமுடியாத கடினமானது ஏதேனும் உண்டோ? நான் அடுத்த வருடம் நியமிக்கப்பட்ட காலத்தில் திரும்பவும் உன்னிடம் வருவேன், அப்பொழுது சாராளுக்கு ஒரு மகன் இருப்பான்” என்றார்.
15சாராள் பயந்ததினால், “நான் சிரிக்கவில்லை” என்று பொய் சொன்னாள்.
அதற்கு அவர், “ஆம், நீ உண்மையாய்ச் சிரித்தாய்” என்றார்.
ஆபிரகாம் சோதோமுக்காக மன்றாடுதல்
16பின்பு அந்த மனிதர் புறப்படுவதற்கு எழுந்தபோது, சோதோமை நோக்கிப் பார்த்தார்கள்; ஆபிரகாம் அவர்களை வழியனுப்பும்படி அவர்களோடுகூடப் போனான். 17அப்பொழுது யெகோவா, “நான் செய்யப்போவதை ஆபிரகாமுக்கு மறைக்கலாமா? 18நிச்சயமாகவே ஆபிரகாம் பெரிதும் வலிமைமிக்கதுமான ஒரு நாடாக வருவான், அவன்மூலம் பூமியின் எல்லா நாடுகளும் ஆசீர்வதிக்கப்படும். 19ஏனெனில் நானே ஆபிரகாமைத் தெரிந்தெடுத்தேன், அவன் தனக்குப்பின் தனது பிள்ளைகளும், தனது குடும்பமும் சரியானதையும் நீதியானதையும் செய்து, யெகோவாவின் வழியைக் கடைப்பிடிப்பதற்கு அவர்களை வழிநடத்துவான். அப்பொழுது யெகோவா ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவார்” என்றார்.
20அதன்பின் யெகோவா, “சோதோம், கொமோராவின் பாவம் மிகவும் கொடியதாய் இருக்கிறது, அவர்களுக்கு விரோதமான கூக்குரலும் அதிகமாய் எழும்பியிருக்கின்றது. 21அவர்களின் செய்கைகள், எனக்கு எட்டிய கூக்குரலுக்கேற்ப கொடியதாய் இருக்கின்றனவோ என்று நான் போய்ப்பார்ப்பேன். அப்படியில்லையென்றால், அதையும் அறிவேன்” என்றார்.
22பின்பு அந்த மனிதர் அவ்விடத்தைவிட்டுச் சோதோமை நோக்கிப் போனார்கள், ஆனால் ஆபிரகாம் யெகோவாவுக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தான். 23ஆபிரகாம் யெகோவாவை அணுகி, “கொடியவர்களுடன் நீதிமான்களையும் அழிப்பீரோ? 24ஒருவேளை பட்டணத்தில் நீதிமான்கள் ஐம்பதுபேர் இருந்தால் அதை அழித்து விடுவீரோ? நீதிமானான அந்த ஐம்பது பேர்களுக்காகிலும் அதை அழியாமல் விடமாட்டீரோ? 25கொடியவர்களுடன் நீதிமான்களையும் கொல்லுவதும், கொடியவர்களையும் நீதிமான்களையும் ஒரேவிதமாக நடத்துவதும் உமக்கு ஒருபோதும் ஏற்றதல்ல. அது உமக்குத் தூரமாயிருப்பதாக! பூமி முழுவதற்கும் நீதிபதியானவர் நியாயத்தைச் செய்யமாட்டாரோ?” என்று கேட்டான்.
26அதற்கு யெகோவா ஆபிரகாமிடம், “நீதிமான்கள் ஐம்பது பேரை சோதோம் பட்டணத்தில் நான் காண்பேனாகில், அவர்களுக்காக அந்த முழு இடத்தையும் தப்பவிடுவேன்” என்றார்.
27மறுபடியும் ஆபிரகாம் யெகோவாவிடம், “புழுதியும் சாம்பலுமான நான் யெகோவாவுடன் பேசத் துணிவுகொண்டேன், 28ஒருவேளை நீதிமான்கள் நாற்பத்தைந்து பேர் மட்டும் இருந்தால், ஐந்துபேர் குறைவாக இருப்பதனால் அந்த முழுப்பட்டணத்தையும் அழிப்பீரோ?” எனக் கேட்டான்.
அதற்கு யெகோவா, “நீதிமான்கள் நாற்பத்தைந்து பேர் அங்கிருந்தாலும் அதை அழிக்கமாட்டேன்” என்றார்.
29மேலும் ஆபிரகாம் அவரிடம், “ஒருவேளை நீதிமான்கள் நாற்பது பேர் மட்டும் இருந்தால்?” என்றான்.
அதற்கு அவர், “நாற்பது பேர் இருந்தாலும் நான் அழிக்கமாட்டேன்” என்றார்.
30பின்பு ஆபிரகாம், “நான் மறுபடியும் பேசுவதற்காக யெகோவா கோபிக்காதிருப்பாராக, முப்பது பேர் மட்டும் இருப்பார்களானால் என்ன செய்வீர்?” என்றான்.
அதற்கு அவர், “முப்பது பேர் அங்கிருந்தாலும் அதை அழிக்கமாட்டேன்” என்றார்.
31ஆபிரகாம், “நான் இப்பொழுது யெகோவாவுடன் பேசத்துணிந்தேன், ஒருவேளை இருபது பேர் மட்டும் அங்கிருந்தால் என்ன செய்வீர்?” என்றான்.
அதற்கு அவர், “அந்த இருபது பேருக்காகவும் அதை அழிக்கமாட்டேன்” என்றார்.
32மறுபடியும் ஆபிரகாம், “நான் இன்னும் ஒருமுறை பேசுவதற்கு யெகோவா என்னோடு கோபிக்காதிருப்பாராக. பத்துப்பேர் மட்டும் அங்கிருந்தால் என்ன செய்வீர்?” என்றான்.
அதற்கு யெகோவா, “அந்த பத்துப்பேருக்காகவும் அதை நான் அழிக்கமாட்டேன்” என்றார்.
33யெகோவா ஆபிரகாமோடு பேசியபின், அவ்விடத்தைவிட்டுப் போனார். ஆபிரகாமும் தன் இருப்பிடத்திற்குத் திரும்பிச்சென்றான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for ஆதியாகமம் 18