YouVersion Logo
Search Icon

எபிரெயர் 11

11
விசுவாசம்
1விசுவாசம் என்பது, நாம் எதிர்பார்த்திருக்கும் காரியங்களைக்குறித்த நிச்சயமும், நம்மால் காண முடியாதவற்றைக் குறித்த உறுதியுமாயிருக்கிறது. 2இப்படிப்பட்ட விசுவாசத்தினாலேயே நமது முன்னோர்கள் நற்சாட்சி பெற்றார்கள்.
3விசுவாசத்தினாலேயே நாம் உலகங்கள் அனைத்தும் இறைவன் தனது வார்த்தையினால் கட்டளையிட உருவாக்கப்பட்டன என்று விளங்கிக்கொள்கிறோம். ஆகவே காணப்படுகிறவைகள், காணப்படாதவற்றிலிருந்து உண்டாயிற்று.
4விசுவாசத்தினாலேயே ஆபேல், காயீன் செலுத்திய பலியைப் பார்க்கிலும் மேன்மையான பலியை இறைவனுக்குச் செலுத்தினான். இறைவனே அவனுடைய காணிக்கையைக்குறித்து நன்றாகப் பேசியபோது, விசுவாசத்தினாலேயே அவன், நீதிமான் என நற்சாட்சி பெற்றான். விசுவாசத்தினாலேயே ஆபேல் இறந்து போனபோதும், இன்னும் பேசிக்கொண்டே இருக்கிறான்.
5விசுவாசத்தினாலேயே ஏனோக்கு மரணத்தை அனுபவிக்காமல், இவ்வாழ்க்கையிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டான்.#11:5 ஆதி. 5:24 இறைவன் அவனை எடுத்துக்கொண்டதனால், அவன் காணாமல் போய்விட்டான். அவன் இறைவனால் எடுத்துக்கொள்ளப்படும் முன்பு, அவன் இறைவனுக்குப் பிரியமானவன் என்று நற்சாட்சி பெற்றிருந்தான். 6விசுவாசம் இல்லாமல் இறைவனை ஒருபோதும் பிரியப்படுத்தமுடியாது. ஏனெனில் இறைவனிடம் வருகிறவர்கள், அவர் இருக்கிறார் என்றும், அவர் தம்மை முழுமனதோடு தேடுகிறவர்களுக்கு வெகுமதியைக் கொடுக்கிறவர் என்றும் விசுவாசிக்க வேண்டும்.
7விசுவாசத்தினாலேயே நோவா, இன்னும் காணப்படாத காரியங்களைக்குறித்து எச்சரிக்கப்பட்டபோது, தனது குடும்பத்தை இரட்சிக்கும்படி, இறைபயத்துடனே ஒரு பேழையைச்#11:7 பேழையை என்பது பெரிய படகு எனப்படும் செய்தான். அவன் தன்னுடைய விசுவாசத்தினாலேயே உலகத்தை நியாயந்தீர்த்து, விசுவாசத்தினால் வரும் நீதிக்கு உரிமையாளன் ஆனான்.
8விசுவாசத்தினாலேயே ஆபிரகாம் தான் உரிமைச்சொத்தாகப் பெறவிருந்த இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, தான் எங்கே போகிறேன் என்றுகூட அவன் அறியாதிருந்ததும் கீழ்ப்படிந்து புறப்பட்டான். 9விசுவாசத்தினாலேயே ஆபிரகாம் பிறநாட்டில் இருக்கும் ஒரு அந்நியனைப்போல் வாக்குக்கொடுத்த நாட்டில் தனது குடியிருப்பை அமைத்தான். அவன் கூடாரங்களிலேயே குடியிருந்தான். அதே வாக்குத்தத்தத்திற்கு உரிமையாளர்களான ஈசாக்கும், யாக்கோபும் கூடாரங்களிலேயே குடியிருந்தார்கள். 10ஏனெனில், இறைவனே சிற்பியாக கட்டுபவராக அஸ்திபாரமிட்ட நகரத்தை ஆபிரகாம் எதிர்பார்த்துக் காத்திருந்தான். 11சாராள் வயது சென்றவளும், மலடியுமாயிருந்தபோதும் பிள்ளைபெறும் ஆற்றலைப் பெற்றாள். ஏனெனில் தனக்கு வாக்குத்தத்தத்தைக் கொடுத்த இறைவன் வாக்குமாறாதவர் என்று அவள் நம்பினாள். 12ஆபிரகாமின் உடல் வல்லமையிழந்து, உயிரற்றதுபோல் இருந்தபோதும், வானத்திலுள்ள நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரையிலுள்ள மணலைப்போலவும் எண்ணற்ற மக்கள் அவனுக்கு பிறந்தனர்.
13விசுவாசத்துடன் வாழ்ந்த இந்த மக்கள் எல்லோரும் இறக்கும்போதும், அந்த விசுவாசத்திலே இறந்தார்கள். ஏனெனில் அவர்களோ, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதை அப்பொழுது பெற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் தூரத்திலிருந்து அதைக்கண்டு, வரவேற்று மகிழ்ச்சி கொண்டவர்களாக மட்டுமே இருந்தார்கள். தாங்கள் பூமியிலே அந்நியர் என்பதையும், தற்காலிக குடிகள் என்பதையும் ஏற்றுக்கொண்டார்கள். 14இப்படி அறிக்கையிடுகின்ற மக்கள், தாங்கள் தங்களுக்குச் சொந்தமான ஒரு நாட்டையே தேடுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. 15தாங்கள் தேடுகிற நாடு தாங்கள் விட்டுப் புறப்பட்டு வந்த நாடே என அவர்கள் நினைத்திருந்தால், அவர்கள் அங்கு திரும்பிப் போகக்கூடிய தருணம் அவர்களுக்குக் கிடைத்திருக்கும். 16ஆனால் அவர்களோ அதிலும் மேன்மையான நாட்டை, ஒரு பரலோக நாட்டையேத் தேடினார்கள். அதை அடையவே ஆசைப்பட்டார்கள். ஆகவே இறைவன், “அவர்களுடைய இறைவன்” என்று தான் அழைக்கப்படுவதை வெட்கமாக எண்ணவில்லை. ஏனெனில் இறைவன், அவர்களுக்கென்று ஒரு நகரத்தை ஆயத்தம் பண்ணியிருக்கிறார்.
17விசுவாசத்தினாலேயே ஆபிரகாம் இறைவன் அவனைச் சோதித்தபோது, ஈசாக்கைப் பலியாகச் செலுத்தினான். வாக்குத்தத்தங்களைப் பெற்றுக்கொண்டவன் தனது ஒரேயொரு மகனைப் பலியாகக் கொடுக்கவும் ஆயத்தமாயிருந்தான். 18“ஈசாக்கின் மூலமே உனக்கு சந்ததி உண்டாகும்”#11:18 ஆதி. 21:12 என்று இறைவன் அவனுக்குச் சொல்லியிருந்தும்கூட, அவன் இப்படிச் செய்தான். 19இறந்தவர்களையும் உயிரோடு எழுப்ப இறைவனால் முடியும் என்று ஆபிரகாம் உணர்ந்திருந்தான். ஒரு வகையில் அவன் ஈசாக்கை மரணத்திலிருந்தே மீண்டும் பெற்றுக்கொண்டான் என்று சொல்லலாம்.
20விசுவாசத்தினாலேயே ஈசாக்கு, யாக்கோபு மற்றும் ஏசாவின் எதிர்காலத்தைக் குறித்து ஆசீர்வதித்தான்.
21யாக்கோபு தான் சாகும் வேளையில் விசுவாசத்தினாலேயே யோசேப்பினுடைய மகன்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்தான். பின்பு தனது கோலின் மேற்புறத்தில் சாய்ந்துகொண்டு வழிபட்டான்.
22விசுவாசத்தினாலேயே யோசேப்பு தனது முடிவுகாலம் நெருங்கியபோது, இஸ்ரயேலர் எகிப்திலிருந்து புறப்பட்டுப் போவார்கள் என்பதைக் குறித்துப்பேசி, தனது எலும்புகளைக்குறித்துக் கட்டளை கொடுத்தான்.
23மோசேயின் பெற்றோர் அவன் பிறந்தபோது, விசுவாசத்தினாலேயே அவனை மூன்று மாதத்திற்கு ஒளித்துவைத்தார்கள். அவன் ஒரு சாதாரண குழந்தையல்ல என்பதை உணர்ந்துகொண்டதால், அவர்கள் அரச கட்டளைக்குப் பயப்படவில்லை.
24விசுவாசத்தினாலேயே மோசே வளர்ந்து பெரியவனானபோது, தான் பார்வோனுடைய மகளின் மகன் என்று சொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள மறுத்தான். 25மோசே விரைவில் கடந்துபோகும் பாவச் சிற்றின்பங்களை அனுபவிப்பதைப் பார்க்கிலும், இறைவனுடைய மக்களுடன் சேர்ந்து கஷ்டங்களை அனுபவிப்பதையே தெரிந்துகொண்டான். 26கிறிஸ்துவுக்காக அவமானப்படுவது எகிப்தின் செல்வங்களைப் பார்க்கிலும் மேலான மதிப்புடையது என்றே கருதினான். ஏனெனில், அவன் வரப்போகின்ற வெகுமதிக்காகவே எதிர்பார்த்துக் காத்திருந்தான். 27விசுவாசத்தினாலேயே மோசே அரசனின் கோபத்திற்கும் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் புறப்பட்டுப் போனான். ஏனெனில், அவன் கண்ணுக்குக் காணப்படாத இறைவனைக் கண்டவனாய் மனவுறுதியுடன் இருந்தான். 28தலைப்பிள்ளைகளை அழிக்கும் இறைத்தூதன், இஸ்ரயேலரின் தலைப்பிள்ளைகளை தொடாதபடி விசுவாசத்தினாலேயே மோசே பஸ்காவையும், கதவு நிலைகளில் இரத்தத்தைத் தெளிப்பதையும் கைக்கொண்டான்.
29விசுவாசத்தினாலேயே இஸ்ரயேல் மக்கள் உலர்ந்த தரையில் நடப்பதுபோல், செங்கடலைக் கடந்து சென்றார்கள். ஆனால், அவ்வாறு எகிப்தியர் செய்ய முற்பட்டபோது, அவர்கள் கடலில் மூழ்கிப்போனார்கள்.
30விசுவாசத்தினாலேயே இஸ்ரயேல் மக்கள் எரிகோ பட்டணத்தைச்சுற்றி ஏழு நாட்கள் அணிவகுத்து நடந்தபோது, எரிகோவின் மதில்கள் இடிந்து விழுந்தன.
31விசுவாசத்தினாலேயே ராகாப் என்ற விலைமகள், இஸ்ரயேல் ஒற்றர்களை வரவேற்று, இறைவனுக்குக் கீழ்ப்படியாதவர்களுடனேகூட கொல்லப்படாமல் தப்பினாள்.
32இன்னும் நான் என்ன சொல்லுவேன்? கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுயேல் ஆகியோரைக்குறித்தும், மற்ற இறைவாக்கினரைக்குறித்தும் சொல்வதற்கு நேரமில்லை. 33இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலேயே அரசுகளை வென்றெடுத்தார்கள். நீதியை நடைமுறைப்படுத்தினார்கள். வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெற்றுக்கொண்டார்கள். சிங்கங்களின் வாய்களைக் கட்டினார்கள். 34கொழுந்து விட்டெரியும் நெருப்பின் அனலையும் அணைத்தார்கள். வாள்முனைக்கும் தப்பினார்கள். அவர்களது பலவீனங்கள் பலமுள்ளதாய் மாற்றப்பட்டன. அவர்கள் யுத்தத்தில் வலிமையுடையவர்களாகி, அந்நிய படைகளைத் தோற்கடித்தார்கள். 35விசுவாசத்தினாலேயே பெண்கள் தங்கள் இறந்தவர்களை மீண்டும் உயிரோடப் பெற்றுக்கொண்டார்கள். ஆனால் வேறுசிலரோ துன்புறுத்தப்பட்டும், ஒரு மேன்மையான உயிர்த்தெழுதலைப் பெற்றுக்கொள்வதற்காகவே விடுதலை பெற்றுக்கொள்ள மறுத்தார்கள். 36இன்னும் சிலர் ஏளனத்துக்குள்ளாகி, சவுக்கால் அடிக்கப்பட்டார்கள். வேறுசிலர் விலங்கிடப்பட்டவர்களாய், சிறையில் அடைக்கப்பட்டார்கள். 37அவர்கள் கல்லெறியப்பட்டார்கள், இரண்டாக அறுக்கப்பட்டார்கள், வாளினால் கொலைசெய்யப்பட்டார்கள். அவர்கள் செம்மறியாட்டுத் தோல்களையும், வெள்ளாட்டுத் தோல்களையும் உடுத்திக்கொண்டு திரிந்தார்கள். குறைவையும், உபத்திரவத்தையும், துன்பத்தையும் அநுபவித்தார்கள். 38இந்த உலகமோ அவர்களுக்குத் தகுதியற்றதாயிருந்தது. அவர்கள் பாலைவனங்களிலும், மலைகளிலும் அலைந்து, குகைகளிலும், நிலத்திலுள்ள கிடங்குகளிலும் வாழ்ந்தார்கள்.
39இவர்கள் எல்லோரும் தங்கள் விசுவாசத்தால் நற்பெயர் பெற்றார்கள். ஆனால் இவர்கள் ஒருவரும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெற்றுக்கொள்ளவில்லை. 40இறைவனோ நமக்காக அதிலும் மேன்மையான ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார். இதனால் அவர்களும், நம்முடன் ஒன்று சேர்ந்துதான் நிறைவுபெறமுடியும்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for எபிரெயர் 11