YouVersion Logo
Search Icon

ஏசாயா 29

29
எருசலேமுக்கு ஐயோ!
1அரியேலே,#29:1 அரியேலே என்றால் இறைவனின் பெண் சிங்கம் எனவும், இறைவனின் பீடம் எனவும் பொருள்படும். அரியேலே,
தாவீது குடியிருந்த பட்டணமே, ஐயோ, உனக்குக் கேடு!
வருடத்துடன் வருடத்தைக் கூட்டு,
உங்கள் பண்டிகைகளும் ஒன்றன்பின் ஒன்றாக நடக்கட்டும்.
2ஆனாலும் நான் அரியேலை முற்றுகையிடுவேன்;
அது துக்கித்துப் புலம்பும்,
அது எனக்கு பலிபீடத்தின் அடுப்பைப் போலிருக்கும்.
3நான் உனக்கு விரோதமாக உன்னைச் சுற்றி முகாமிடுவேன்;
நான் கோபுரங்களால் உன்னைச் சூழ்ந்துகொள்வேன்,
எனது முற்றுகை வேலைகளை உனக்கு விரோதமாய் அமைப்பேன்.
4நீ தாழ்த்தப்பட்டு நிலத்திலிருந்து பேசுவாய்,
உனது பேச்சு புழுதியிலிருந்து முணுமுணுக்கும்.
உனது குரல் செத்தவனின் ஆவியைப்போல் பூமியிலிருந்து வரும்;
உனது பேச்சு புழுதியிலிருந்து தாழ் குரலாய் வரும்.
5ஆனாலும் யெகோவாவின் நிமித்தம் உனது அநேக பகைவர்கள்
திடீரென புழுதியைப்போல் ஆவார்கள்;
இரக்கமில்லாதவரின் கூட்டங்கள் பறக்கும் பதரைப்போல் ஆகும்.
சடுதியாய், ஒரு நொடிப்பொழுதில்,
6இடி முழக்கத்துடனும் பூமியதிர்ச்சியுடனும், பெருஞ்சத்தத்துடனும்
சேனைகளின் யெகோவா அவர்களுக்கெதிராக வருவார்.
அவர் புயல்காற்றுடனும், சூறாவளியுடனும்,
எரிக்கும் நெருப்புச் சுவாலையுடனும் வருவார்.
7அப்பொழுது அரியேலுக்கு விரோதமாய்ப் போரிடும்
எல்லா நாடுகளின் கூட்டத்தாரும்
அதன் அரண்களையும் தாக்கி, முற்றுகையிடுகிறவர்கள் ஒரு கனவுபோலவும்,
இரவின் தரிசனம் போலவும் மறைந்துபோவார்கள்.
8அவர்கள் நினைத்திருந்த வெற்றியோ,
பசியுள்ளவன் தான் சாப்பிடுவதாகக் கனவு கண்டும்
அவன் விழித்தவுடன் பசியுடனே இருப்பதுபோலவும்,
தாகமுள்ளவன் தான் குடிப்பதாகக் கனவு கண்டும்
அவன் விழித்தவுடன் தீராத தாகத்துடன் மயங்குவதுபோலவும்,
சீயோன் மலையை எதிர்த்துப் போரிடும் எல்லா நாடுகளின் கூட்டத்திற்கும் இருக்கும்.
9திகைத்து வியப்படையுங்கள்!
நீங்களே உங்களைக் குருடர்களாக்கி பார்வையற்றவர்களாய் இருங்கள்.
வெறிகொள்ளுங்கள், ஆனால் திராட்சை இரசத்தினால் அல்ல;
தள்ளாடுங்கள், ஆனால் மதுவினால் அல்ல.
10யெகோவா உங்கள்மேல் ஆழ்ந்த நித்திரையை வருவித்துள்ளார்:
அவர் உங்கள் இறைவாக்கினரினதும்
தரிசனம் காண்போரினதும் கண்களை மூடியிருக்கிறார்.
11அவர்களுக்கோ இந்த தரிசனம் முழுவதும் முத்திரை இடப்பட்ட சுருளிலிருக்கும் வார்த்தைகளைப்போல் மட்டுமே இருக்கும். நீ அதை வாசிக்கக்கூடிய ஒருவனிடம் கொடுத்து, “தயவுசெய்து இதை வாசி” எனச் சொன்னால் அவன், “எனக்கு வாசிக்க முடியாது. அது முத்திரையிடப்பட்டிருக்கிறது” என்பான். 12அல்லது அந்தச் சுருளை வாசிக்கமுடியாத ஒருவனிடம் கொடுத்து, “தயவுசெய்து இதை வாசி” என்று சொன்னால், அவன், “எப்படி வாசிப்பது என எனக்குத் தெரியாது” என்பான்.
13எனவே யெகோவா சொல்கிறார்:
“இந்த மக்கள் தங்கள் வாயின் வார்த்தைகளினால் என்னைக் கிட்டிச் சேருகிறார்கள்;
தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்.
ஆனால் அவர்களுடைய இருதயங்களோ எனக்கு வெகுதூரமாய் இருக்கின்றன.
அவர்கள் எனக்குச் செய்யும் வழிபாடு
மனிதர்களால் போதிக்கப்பட்ட சட்டங்களாகவே இருக்கின்றன.
14ஆகையால், இன்னும் ஒருமுறை அதிசயங்கள்மேல் அதிசயங்களால்
இம்மக்களை வியப்படையச் செய்வேன்.
ஞானிகளுடைய ஞானம் அழிந்துபோகும்,
அறிவாளிகளின் அறிவு ஒழிந்துபோகும்.”
15தங்களுடைய திட்டங்களை யெகோவாவிடமிருந்து மறைப்பதற்காக
மிக்க முயற்சி செய்கிறவர்களுக்கு ஐயோ கேடு!
இருண்ட இடங்களில் தமது செயல்களைச் செய்து, “நம்மைக் காண்பவன் யார்?
நம்மை அறிகிறவன் யார்?” என நினைக்கிறவர்களுக்கும் ஐயோ கேடு!
16நீங்கள் காரியங்களைத் தலைகீழாக்கி,
குயவனைக் களிமண்ணாக எண்ணுகிறீர்களே!
உருவாக்கப்பட்ட பொருள் உருவாக்கியவனைப் பார்த்து,
“இவர் என்னை உண்டாக்கவில்லை” என்றும்
பாத்திரமானது குயவனைப் பார்த்து,
“இவருக்கு ஒன்றுமே தெரியாது” என்றும் கூறலாமோ?
17இன்னும் சொற்ப காலத்தில் லெபனோன் ஒரு செழிப்பான வயலாக மாறாதோ?
செழிப்பான வயலும் வனமாகக் காணப்படாதோ?
18அந்த நாளில் புத்தகச்சுருளிலுள்ள வார்த்தைகளைச் செவிடர் கேட்பார்கள்;
குருடரின் கண்கள் அந்தகாரத்திலும்,
இருட்டிலும் இருந்து அதைக் காணும்.
19தாழ்த்தப்பட்டவர்கள் இன்னும் ஒருமுறை யெகோவாவுக்குள் மகிழ்ச்சியடைவார்கள்;
எளியோர் இஸ்ரயேலரின் பரிசுத்தரில் களிகூருவார்கள்.
20இரக்கமற்றோர் ஒழிந்துபோவார்கள்,
ஏளனம் செய்வோர் மறைந்துபோவார்கள்;
தீமையை நோக்கும் அனைவரும் இல்லாதொழிக்கப்படுவார்கள்.
21இவர்கள் தங்கள் பேச்சினால் ஒருவனைக் குற்றவாளியாக்கி,
நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்குவோரை இடறப் பண்ணுகிறார்கள்.
இவ்வாறு பொய்ச் சாட்சியத்தினால் குற்றமற்றவனுக்கு நீதிவழங்க மறுக்கிறார்கள்;
அதனாலேயே இல்லாதொழிக்கப்படுவார்கள்.
22ஆகையால், ஆபிரகாமை மீட்ட யெகோவா, யாக்கோபின் குடும்பத்திற்கு சொல்வது இதுவே:
“இனிமேலும் யாக்கோபு வெட்கமடைவதில்லை;
அவர்களுடைய முகங்களும் வெளிறிப் போவதில்லை.
23அவர்கள் எனது கரங்களின் வேலையாகிய,
தங்கள் பிள்ளைகளை தங்கள் மத்தியில் காணும்போது,
எனது பெயரைப் பரிசுத்தமாய் வைத்திருப்பார்கள்.
அவர்கள் யாக்கோபின் பரிசுத்தரின் பரிசுத்தத்தை உண்மையென்று ஒப்புக்கொண்டு,
இஸ்ரயேலின் இறைவனிடம் பயபக்தி உள்ளவர்களாய் இருப்பார்கள்.
24சிந்தனையில் தவறு செய்கிறவர்கள் விளக்கம் பெறுவார்கள்;
முறையிடுகிறவர்களும் அறிவுறுத்துதலை ஏற்றுக்கொள்வார்கள்.”

Currently Selected:

ஏசாயா 29: TCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for ஏசாயா 29