YouVersion Logo
Search Icon

ஏசாயா 39

39
பாபிலோனிலிருந்து தூதுவர்
1அந்நாட்களில் பாபிலோனிய அரசன் பலாதானின் மகன் மெரோதாக்பலாதான், எசேக்கியா வியாதியாயிருந்து குணமடைந்தான் என்பதைக் கேள்விப்பட்டான். எனவே அவன் எசேக்கியாவுக்குக் கடிதங்களையும் அன்பளிப்பையும் அனுப்பினான். 2எசேக்கியா அந்தத் தூதுவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றான். அவன் தனது களஞ்சியங்களிலுள்ள வெள்ளி, தங்கம், நறுமணப் பொருட்கள், சிறந்த எண்ணெய் ஆகியவற்றையும், ஆயுதசாலை முழுவதையும், தனது பொக்கிஷசாலையில் இருந்த எல்லாவற்றையும் அவர்களுக்குக் காட்டினான். தன் அரண்மனையிலும், தன்னுடைய அரசு முழுவதிலும் எசேக்கியா அவர்களுக்குக் காட்டாமல் விட்டது ஒன்றுமில்லை.
3அப்பொழுது இறைவாக்கினன் ஏசாயா, எசேக்கியா அரசனிடம் போய், “அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? என்ன சொன்னார்கள்?” என்று கேட்டான்.
அதற்கு எசேக்கியா, “தூர நாடான பாபிலோனிலிருந்து என்னிடம் வந்தார்கள்” என்றான்.
4இறைவாக்கினன் அவனிடம், “உனது அரண்மனையில் அவர்கள் எதைப் பார்த்தார்கள்?” என்று கேட்டான்.
அதற்கு எசேக்கியா, “எனது அரண்மனையிலுள்ள எல்லாவற்றையும் அவர்கள் பார்த்தார்கள். எனது பொக்கிஷங்களில் நான் அவர்களுக்குக் காட்டாமல் விட்டது ஒன்றுமேயில்லை” எனப் பதிலளித்தான்.
5அதற்கு ஏசாயா, எசேக்கியாவிடம், “சேனைகளின் யெகோவாவினுடைய வார்த்தையைக் கேள்: 6உனது அரண்மனையில் உள்ள ஒவ்வொன்றும், இன்றுவரை உன் முற்பிதாக்கள் சேகரித்து வைத்த யாவும் பாபிலோனுக்கு எடுத்துச் செல்லப்படும் காலம் நிச்சயமாக வரும். அவைகளில் ஒன்றாகிலும் மீந்திருக்காது என்று யெகோவா கூறுகிறார். 7மேலும் உனது சொந்த மாம்சமும் இரத்தமுமாக உனக்குப் பிறக்கப்போகும் உனது சந்ததிகள் சிலரும் சிறைப்பிடிக்கப்பட்டு, பாபிலோனிய அரசனின் அரண்மனையில் அண்ணகர்கள் ஆக்கப்படுவார்கள்” என்றான்.
8அதற்கு எசேக்கியா ஏசாயாவை நோக்கி, “நீர் சொன்னது யெகோவாவினுடைய வார்த்தை என்றால் அது நல்லதுதான்” என்று கூறினான். ஏனெனில், “எனது வாழ்நாளிலாவது சமாதானமும் பாதுகாப்பும் நிலவுமே” என அவன் எண்ணினான்.

Currently Selected:

ஏசாயா 39: TCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for ஏசாயா 39