YouVersion Logo
Search Icon

நியாயாதிபதிகள் 12

12
யெப்தாவும் எப்பிராயீமும்
1எப்பிராயீம் மனிதர் தங்கள் படைகளைக் கூட்டிக்கொண்டு சாபோனைக் கடந்துவந்து யெப்தாவிடம் சொன்னதாவது: “எங்களையும் உன்னுடன் அழைத்துக்கொண்டு போகாமல் நீ ஏன் அம்மோனியருடன் சண்டையிடப்போனாய்? உன்னை வீட்டிற்குள் வைத்து உன் வீட்டை எரிக்கப்போகிறோம்” என்றார்கள்.
2அதற்கு யெப்தா மறுமொழியாக, “நானும் என் மக்களும் அம்மோனியருடன் ஒரு பெரிய இக்கட்டில் இருக்கும்போது உங்களைக் கூப்பிட்டேன். நீங்கள் வந்து அவர்களுடைய கைகளில் இருந்து காப்பாற்றவில்லை. 3நீங்கள் உதவிசெய்ய மாட்டீர்கள் என்பதை நான் கண்டு, எனது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, யோர்தானைக் கடந்துபோய் அம்மோனியருடன் யுத்தம் செய்தேன். யெகோவாவும் எனக்கு வெற்றி தந்துள்ளார். இப்பொழுது நீங்கள் ஏன் இன்று என்னுடன் சண்டை பிடிக்கும்படி வந்திருக்கிறீர்கள்?” என்றான்.
4அதன்பின் யெப்தா கீலியாத் மனிதர்களைக் கூப்பிட்டு ஒன்றுசேர்த்து, எப்பிராயீம் மனிதருக்கு எதிராகச் சண்டையிடச் செய்தான். கீலியாத்தியர் அவர்களை வெட்டி வீழ்த்தினார்கள். ஏனெனில் எப்பிராயீமியரோ அவர்களிடம், “கீலேயாத்தியராகிய நீங்கள் எப்பிராயீம், மனாசேயினரை விட்டு ஓடிப்போனவர்கள்” என்று சொல்லியிருந்தார்கள். 5எப்பிராயீமுக்குப் போகும் யோர்தானிலுள்ள கடவு துறைகளையெல்லாம் கீலேயாத்தியர் கைப்பற்றினார்கள். எப்பிராயீமியரில் தப்பிய யாராவது நான் கடந்துபோக என்னை விடுங்கள் என கீலியாத்தியரிடம் கேட்டால், “நீ ஒரு எப்பிராயீமியனோ?” என்று கேட்பார்கள். அதற்கு அவன், “இல்லை” என பதிலளித்தால், 6“சரி, ‘சிபோலேத்’ என்று சொல்” என்பார்கள். அவனோ சரியாக உச்சரிக்க முடியாமல், “சிபோலேத்” என்று சொன்னால், அவர்கள் அவனைப் பிடித்து யோர்தானின் துறைமுகத்திலே வெட்டிப்போடுவார்கள். அந்நாட்களில் நாற்பத்து இரண்டாயிரம் எப்பிராயீமியர் கொல்லப்பட்டனர்.
7யெப்தா ஆறு வருடங்களுக்கு இஸ்ரயேலில் நீதிபதியாயிருந்தான். கீலேயாத்தியனான யெப்தா இறந்து, கீலேயாத்திலுள்ள ஒரு பட்டணத்தில் அடக்கம் செய்யப்பட்டான்.
இப்சான், ஏலோன், அப்தோன்
8அவனுக்குப்பின் பெத்லெகேமைச் சேர்ந்த இப்சான் இஸ்ரயேலில் நீதிபதியாயிருந்தான். 9அவனுக்கு முப்பது மகன்களும், முப்பது மகள்களும் இருந்தார்கள். அவன் தனது மகள்களைத் தன் வம்சத்திற்கு வெளியே திருமணம் செய்துகொடுத்தான். அவன் தனது மகன்களுக்கும் தனது வம்சத்திற்கு வெளியே முப்பது இளம்பெண்களை மனைவிகளாகக் கொண்டுவந்தான். இப்சான் இஸ்ரயேலுக்கு ஏழு வருடங்களுக்கு நீதிபதியாயிருந்தான். 10அதன்பின்பு இப்சான் இறந்து பெத்லெகேமில் அடக்கம் செய்யப்பட்டான்.
11அவனுக்குப்பின் செபுலோனியனான ஏலோன் இஸ்ரயேலில் பத்து வருடங்களுக்கு நீதிபதியாயிருந்தான். 12பின் ஏலோன் இறந்து செபுலோன் நாட்டில் ஆயலோன் என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டான்.
13அவனுக்குப்பின் பிரத்தோனைச் சேர்ந்த இல்லேலின் மகன் அப்தோன் இஸ்ரயேலுக்கு நீதிபதியாயிருந்தான். 14அவனுக்கு நாற்பது மகன்களும், முப்பது பேரன்களும் இருந்தனர். அவர்கள் எழுபது கழுதைகளின்மேல் சவாரி செய்தார்கள். அவன் இஸ்ரயேலில் எட்டு வருடங்களுக்கு நீதிபதியாயிருந்தான். 15அதன்பின் இல்லேலின் மகன் அப்தோன் இறந்து அமலேக்கியரின் மலைநாட்டிலுள்ள எப்பிராயீமில் பிரத்தோன் என்னும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for நியாயாதிபதிகள் 12