YouVersion Logo
Search Icon

எரேமியா 37

37
சிறையில் எரேமியா
1பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சார் யோசியாவின் மகன் சிதேக்கியாவை யூதாவுக்கு அரசனாக்கினான். அவன் யோயாக்கீமுடைய மகன் கோனியாவின்#37:1 எபிரெயத்தில் கோனியாவின் மற்றொரு பெயர் யெகோயாசின் இடத்தில் அரசாண்டான். 2ஆயினும் அவனோ, அவனுடைய வேலையாட்களோ, அந்த நாட்டு மக்களோ, இறைவாக்கினன் எரேமியாவின் மூலம் யெகோவா பேசிய வார்த்தைகளுக்கு எவ்வித கவனமும் செலுத்தவில்லை.
3அப்படியிருந்தும் சிதேக்கியா அரசன், செலேமியாவின் மகன் யூகாலை, மாசெயாவின் மகனும் ஆசாரியனுமாகிய செப்பனியாவுடன் இறைவாக்கினன் எரேமியாவிடம் அனுப்பி, “தயவுசெய்து நம் இறைவனாகிய யெகோவாவிடம் எங்களுக்காக மன்றாடும்” என்று செய்தி அனுப்பினான்.
4இப்பொழுது எரேமியாவுக்கு மக்கள் மத்தியில் போய் வரக்கூடிய சுதந்தரம் இருந்தது. ஏனெனில், அவன் இன்னும் சிறையில் அடைக்கப்படவில்லை. 5இதற்கிடையில் பார்வோனின் இராணுவம் எகிப்தைவிட்டுப் புறப்பட்டது. எருசலேமை முற்றுகையிட்டிருந்த பாபிலோனியர், எகிப்தியரைப் பற்றிய செய்தியைக் கேட்டபோது எருசலேமைவிட்டு போனார்கள்.
6அப்பொழுது இறைவாக்கினன் எரேமியாவுக்கு யெகோவாவின் வார்த்தை வந்தது: 7“இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே, என்னிடம் விசாரிக்கும்படி உன்னை அனுப்பிய யூதா அரசனிடம் நீ கூறவேண்டியதாவது: ‘உனக்கு உதவிசெய்ய புறப்பட்ட பார்வோனின் இராணுவம், தன் சொந்த நாடாகிய எகிப்திற்குத் திரும்பிப் போய்விடும். 8அப்பொழுது பாபிலோனியர் திரும்பிவந்து இப்பட்டணத்தைத் தாக்குவார்கள். அவர்கள் அதைக் கைப்பற்றி எரித்துப் போடுவார்கள்.’
9“யெகோவா கூறுவது இதுவே: ‘பாபிலோனியர் நிச்சயமாக எம்மைவிட்டுப் போய்விடுவார்கள்’ என எண்ணி உங்களை ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். அவர்கள் அப்படிச் செய்யமாட்டார்கள். 10உங்களை தாக்குகிற பாபிலோனிய இராணுவத்தை நீங்கள் முற்றிலும் தோற்கடித்து, அவர்களில் காயப்பட்டவர்கள் மாத்திரம் கூடாரங்களில் மீந்திருந்தாலுங்கூட, அவர்கள் வெளியே வந்து இந்தப் பட்டணத்தை எரித்துவிடுவார்கள்” என்று சொல்லுங்கள் என்றார்.
11பார்வோனின் இராணுவத்தினிமித்தம் பாபிலோனியப் படையினர் எருசலேமைவிட்டுப் போனபின்பு, 12எரேமியா பென்யமீன் நாட்டு மக்களிடையே உள்ள தன் சொத்தின் பங்கைப் பெற்றுக்கொள்வதற்கு, எருசலேமைவிட்டு அங்கே போகப் புறப்பட்டான். 13ஆனால் எரேமியா பென்யமீன் வாசலை அடைந்தபோது அனனியாவின் பேரனும், செலேமியாவின் மகனுமான யெரியா என்ற காவலாளர்களின் தலைவன் இறைவாக்கினனான எரேமியாவை கைது செய்தான். அவன், “நீ எங்களைவிட்டு பாபிலோனியரிடம் சேரப்போகிறாய்” என்று குற்றஞ்சாட்டினான்.
14அதற்கு எரேமியா, “அது பொய்; நான் பாபிலோனியரைச் சேரப்போகவில்லை” என்றான். ஆனால் யெரியா அதை ஏற்றுக்கொள்ளாமல் எரேமியாவைக் கைதுசெய்து அதிகாரிகளிடத்தில் கொண்டுபோனான். 15அப்பொழுது அந்த அதிகாரிகள் எரேமியாவின்மீது கோபங்கொண்டு, அவனை அடித்து, செயலாளராகிய யோனத்தான் வீட்டில் காவலில் அடைத்தார்கள். அவர்கள் அதைக் காவற்கூடமாக மாற்றியிருந்தார்கள்.
16எரேமியா இருட்டான ஒரு காவற்கிடங்கில் போடப்பட்டு, அநேக காலம் அங்கேயிருந்தான். 17அதன்பின் சிதேக்கியா அரசன் ஆளனுப்பி அவனை அரண்மனைக்கு அழைப்பித்து அவனிடம் “யெகோவாவிடமிருந்து ஏதேனும் வார்த்தை உண்டோ?” என்று தனிப்பட்ட முறையில் கேட்டான்.
அதற்கு எரேமியா, “ஆம்; நீ பாபிலோன் அரசனுடைய கையில் ஒப்புக்கொடுக்கப்படுவாய்” என்று பதிலளித்தான்.
18பின்பு எரேமியா சிதேக்கியா அரசனிடம், “நீர் என்னைச் சிறையில் அடைத்திருப்பதற்கு உமக்கோ, உமது அதிகாரிகளுக்கோ, இந்த மக்களுக்கோ விரோதமாக நான் செய்த குற்றம் என்ன? 19‘பாபிலோன் அரசன் உம்மையோ, இந்த நாட்டையோ தாக்கமாட்டான்’ என்று இறைவாக்கு சொல்லிய உம்முடைய இறைவாக்கு உரைப்போர் எங்கே? 20என் தலைவனான அரசே! தயவுசெய்து கேளும். என் விண்ணப்பத்தை உமக்கு முன்பாகச் சமர்ப்பிக்க அனுமதியும். என்னை விண்ணப்பிக்கவிடும். என்னை செயலாளராகிய யோனத்தானுடைய வீட்டுக்குத் திரும்பவும் அனுப்பவேண்டாம். அனுப்பினால், நான் அங்கேயே இறந்துவிடுவேன்” என்றான்.
21அப்பொழுது சிதேக்கியா அரசன் எரேமியாவைக் காவற்கூட முற்றத்தில் சிறை வைக்கும்படி கட்டளையிட்டான். மேலும் பட்டணத்தில் அப்பம் முடியும்வரை அப்பம் சுடுவோரின் தெருவிலிருந்து தினமும் அவனுக்கு அப்பம் கொடுக்கும்படியும் கட்டளையிட்டான்; எனவே எரேமியா காவற்கூட முற்றத்தில் இருந்தான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for எரேமியா 37