YouVersion Logo
Search Icon

யோசுவா 18

18
மீதமுள்ள தேசத்தின் பங்கீடு
1பின் இஸ்ரயேல் மக்கள் சீலோ என்னும் இடத்தில் ஒன்றுகூடி அங்கே சபைக் கூடாரத்தை அமைத்தார்கள். அந்த நாடு அவர்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது, 2ஆனால் இஸ்ரயேலில் இன்னும் ஏழு கோத்திரங்கள் தங்கள் சொத்துரிமையைப் பெறாமல் இருந்தன.
3எனவே யோசுவா இஸ்ரயேலரிடம் கூறியதாவது: “உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு அளித்துள்ள நாட்டை, உங்கள் கைவசமாக்குவதற்கு இன்னும் எவ்வளவு காலத்திற்குத் தாமதிப்பீர்கள்? 4ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் மூன்றுபேரை நியமியுங்கள். நான் அவர்களை நாட்டைச் சுற்றிப்பார்த்து மதிப்பீடு செய்ய அனுப்புவேன். அவர்கள் ஒவ்வொரு கோத்திரத்திற்கும் கொடுக்கப்படவேண்டிய சொத்துரிமை அளவுப்படி அதை விவரமாய் எழுதிக்கொண்டு என்னிடம் திரும்பி வரவேண்டும். 5நீங்கள் தேசத்தை ஏழு பங்குகளாகப் பிரிக்கவேண்டும். யூதா கோத்திரம் தென்பகுதியிலும், யோசேப்பின் குடும்பம் வடபகுதியிலும் தொடர்ந்து குடியிருக்கட்டும். 6நாட்டின் ஏழு பிரிவுகளின் விவரங்களையும் எழுதியபின் என்னிடம் கொண்டுவாருங்கள். நான் நமது இறைவனாகிய யெகோவாவுக்கு முன்பாக உங்களுக்காகச் சீட்டுப்போட்டு, உங்கள் பங்கைக் குறிப்பிடுவேன். 7லேவி கோத்திரத்தார் உங்கள் நாட்டில் உங்கள் மத்தியில் பங்கைப் பெறுவதில்லை. ஏனெனில் யெகோவாவுக்கு ஆசாரியர்களாகப் பணிசெய்வதே அவர்கள் பங்கு. காத், ரூபன், மனாசேயின் பாதிக் கோத்திரம் ஏற்கனவே யோர்தானின் கிழக்குப் பகுதியில் தங்கள் சொத்துரிமையைப் பெற்றிருந்தார்கள். அதை யெகோவாவின் அடியவனாகிய மோசே கொடுத்திருந்தான்.”
8நாட்டை அளந்து பார்த்துப் பங்கிட அவர்கள் புறப்பட்டபோது யோசுவா அவர்களிடம், “நாட்டைச் சுற்றிப்பார்த்து அதன் விவரத்தை எழுதிக்கொண்டு என்னிடம் திரும்பிவாருங்கள். நான் சீலோவிலே யெகோவாவின் முன்னிலையில் உங்களுக்காக சீட்டுப்போடுவேன்” என்று அறிவுறுத்தினான். 9உடனே அவர்கள் புறப்பட்டு நாட்டின் வழியாகச் சென்றார்கள். அவர்கள் நாட்டின் விவரங்களைப் பட்டணம் பட்டணமாக ஏழு பகுதிகளாகப் பிரித்து, ஒரு புத்தகச்சுருளில் எழுதி சீலோவில் கூடாரத்தில் இருந்த யோசுவாவிடம் கொண்டுவந்தார்கள்.
10அப்பொழுது யோசுவா, சீலோவில் யெகோவாவின் முன்னிலையில் அவர்களுக்கு சீட்டுப்போட்டு, இஸ்ரயேலரின் கோத்திரப் பிரிவுகளின்படி அவர்களுக்குரிய நிலத்தை பிரித்துக்கொடுத்தான்.
பென்யமீனின் பங்கு
11வம்சம் வம்சமாக பென்யமீன் கோத்திரத்திற்கு முதலாவது சீட்டு விழுந்தது. அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலப்பரப்பின் பங்கு யூதா, யோசேப்பு கோத்திரங்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலங்களுக்கு இடையில் இருந்தது.
12அவர்களுடைய வடக்கு எல்லை யோர்தான் நதியில் ஆரம்பித்து, எரிகோவின் வடமலைச் சாரலைக் கடந்து, மேற்கே உள்ள மலைநாட்டிற்குச் சென்று, பெத் ஆவென் பாலைவனத்தை வந்து சேர்ந்தது. 13அங்கிருந்து பெத்தேல் என்னும் லூஸின் தெற்கு மலைச்சரிவைக் கடந்து, பின்னர் கீழ் பெத் ஓரோனின் தெற்கே மலையில் அமைந்துள்ள அதரோத் ஆதாருக்குச் சென்றது.
14அந்த எல்லையானது தெற்கே பெத் ஓரோனை நோக்கியுள்ள குன்றிலிருந்து, மேற்குப்புறமாகத் தெற்கே திரும்பி, யூதாவின் நகரமான கீரியாத்யாரீம் அதாவது கீரியாத் பாகாலில் முடிவடைந்தது. இதுவே பென்யமீனின் மேற்கு எல்லை.
15தெற்கு எல்லையானது கீரியாத்யாரீம் நகர்ப்புறத்தில் ஆரம்பித்து, மேற்கே சென்று நெப்தோவின் நீர் நிலையருகில் முடிவடைந்தது. 16மேலும் இவ்வெல்லை ரெப்பா பள்ளத்தாக்கின் வடக்கே உள்ள, பென் இன்னோம் பள்ளத்தாக்கிற்கு எதிரே உள்ள மலையடிவாரத்தை அடைந்தது. அங்கிருந்து கின்னோம் பள்ளத்தாக்கின் வழியாக எபூசியரின் நகர் அமைந்த மலைச்சாரலின் தென்புற வழியேசென்று, என்ரொகேலை அடைந்தது. 17அங்கிருந்து எல்லையானது வடக்கே வளைந்து, என்சேமேசுக்குத் திரும்பி அதும்மீம் ஏற்றத்தின் எதிரே உள்ள கெலிலோத்தை அடைந்து, “போகனின் கல்” என்னும் இடத்திற்குச்சென்றது. போகன் ரூபனின் மகன். 18அது தொடர்ந்து பெத் அரபாவின் வடக்கு மலைச்சரிவுக்குச்சென்று, கீழே அரபாவை நோக்கிச்சென்றது. 19பின்னர் பெத் ஓக்லாவின் வடக்கே மலைச்சரிவிலே சென்று, சவக்கடலின் வளைகுடாக்கடலில் முடிவடைந்தது. உப்புக்கடல் தெற்கே யோர்தான் நதியின் முகத்துவாரத்தில் இருந்தது. இது பென்யமீனின் தெற்கு எல்லை.
20அவர்களுடைய கிழக்கு எல்லையாக யோர்தான் நதி அமைந்தது.
இவைகளே பென்யமீன் குடும்பங்களுக்குரிய சொத்துரிமையாய் கொடுக்கப்பட்ட நிலங்களின் எல்லை.
21வம்சம் வம்சமாக பென்யமீன் கோத்திரத்திற்கு கொடுக்கப்பட்ட பட்டணங்களாவன:
எரிகோ, பெத் ஓக்லா, எமேக் கேசீஸ், 22பெத் அரபா, செமராயீம், பெத்தேல், 23ஆவீம், பாரா, ஒப்ரா 24கேம்பார் அம்மோனி, ஒப்னி, கேபா, ஆகிய பன்னிரண்டு நகரங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும்.
25கிபியோன், ராமா, பேரோத், 26மிஸ்பா, கெபிரா, மோத்சா, 27ரெக்கேம், இர்பெயேல், தாராலா, 28சேலா, ஏலேப், எபூசியப் பட்டணம் அதாவது எருசலேம், கிபியா, கீரியாத் ஆகிய பதினான்கு பட்டணங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும்.
இவையே பென்யமீன் கோத்திர வம்சங்களுக்குக் கொடுக்கப்பட்ட சொத்துரிமை.

Currently Selected:

யோசுவா 18: TCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for யோசுவா 18