YouVersion Logo
Search Icon

யோசுவா 9

9
கிபியோனியர்களின் தந்திரம்
1யோர்தானுக்கு மேற்கேயிருந்த அரசர்கள் இச்செயல்களைப்பற்றிக் கேள்விப்பட்டனர். இவர்கள் மலைநாட்டின் மேற்கேயுள்ள மலையடிவாரத்திலும், மத்திய தரைக்கடல் கரையோரம் முழுவதிலும் லெபனோன் வரையும் வாழ்ந்த ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகிய நாடுகளின் அரசர்கள். 2இந்த அரசர்கள் ஒன்றுசேர்ந்து யோசுவாவுக்கும், இஸ்ரயேலருக்கும் எதிராகப் போர் தொடுப்பதற்கென வந்தார்கள்.
3ஆயினும் எரிகோ, ஆயிபட்டணங்களுக்கு யோசுவா செய்தவற்றைக் கிபியோனின் மக்கள் கேள்விப்பட்டபோது, 4கிபியோன் மக்கள் பிரதிநிதிகள்போல தந்திரமாக சென்றார்கள். அவர்கள் கந்தையான சாக்கு மூட்டைகளையும் கிழிந்து தைக்கப்பட்ட பழைய தோல் திராட்சைக் குடுவைகளையும் கழுதைகளில் ஏற்றிக்கொண்டு, 5தேய்ந்ததும், தைக்கப்பட்டதுமான பழைய காலணிகளையும், பழைய உடைகளையும் அணிந்துகொண்டு, காய்ந்த பூசணம் பிடித்திருந்த அப்பங்களை உணவாக எடுத்துக்கொண்டு சென்றனர். 6இவ்வாறான கோலத்துடன் இக்குழுவினர் கில்காலில் முகாமிட்டிருந்த யோசுவாவிடம் சென்றனர். அவர்கள் யோசுவாவிடமும் இஸ்ரயேல் மக்களிடமும் சென்று, “நாங்கள் வெகுதொலைவிலுள்ள நாட்டிலிருந்து வருகிறோம். எனவே எங்களோடு ஒரு சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ளுங்கள்” என்றனர்.
7அதற்கு இஸ்ரயேல் மனிதர் அந்த ஏவியரிடம், “ஒருவேளை நீங்கள் எங்களுக்கு அருகில் வாழ்பவர்களாய் இருக்கக்கூடும். அப்படியானால் நாங்கள் உங்களோடு எப்படி உடன்படிக்கை செய்துகொள்ள முடியும்?” என்று கேட்டனர்.
8அதற்கு அவர்கள் யோசுவாவிடம், “நாங்கள் உங்கள் அடிமைகள்” என்றனர்.
ஆனாலும் யோசுவா அவர்களிடம், “நீங்கள் யார்? எங்கேயிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டான்.
9அதற்கு அவர்கள், “உங்கள் இறைவனாகிய யெகோவாவின் புகழின் நிமித்தம், உங்கள் அடியவர்கள் வெகுதொலைவிலுள்ள நாட்டிலிருந்து வந்திருக்கிறோம். ஏனெனில், அவர் எகிப்திலே செய்த செயல்கள் எல்லாவற்றைப்பற்றியும் நாங்கள் கேள்விப்பட்டோம். 10மேலும், அவர் யோர்தானுக்குக் கிழக்கேயுள்ள அஸ்தரோத்தில் ஆட்சி செய்த எமோரியரின் இரண்டு அரசர்களான, எஸ்போனின் அரசனாகிய சீகோனுக்கும், பாசானின் அரசனாகிய ஓகுக்கும் செய்த எல்லாவற்றையும் கேள்விப்பட்டோம். 11எனவே எங்கள் சபைத்தலைவர்களும், எங்கள் தேசத்தில் வாழும் எல்லோரும் எங்களிடம், ‘உங்கள் பயணத்துக்குத் தேவையான உணவுகளை எடுத்துக்கொண்டு இஸ்ரயேலரிடம் போய், நாங்கள் உங்கள் அடிமைகளாயிருப்போம்; எங்களோடு ஒரு சமாதான ஒப்பந்தம் செய்யுங்கள் என்று சொல்லுங்கள்’ என்றார்கள். 12உங்களிடம் வருவதற்கு நாங்கள் வீட்டிலிருந்து புறப்பட்டபோது, இந்த அப்பங்களைச் சுடச்சுடக் கட்டிக்கொண்டு வந்தோம். இப்பொழுதோ இவைகள் எவ்வளவாய்க் காய்ந்து பூசணம் பிடித்திருக்கின்றன என்று நீங்களே பாருங்கள். 13இந்தத் திராட்சை தோற்குடுவைகள் நாங்கள் நிரப்பியபோது புதிதாய் இருந்தன. ஆனால் இப்பொழுது எவ்வளவாக கிழிந்துவிட்டன என்று பாருங்கள். மிக நீண்ட பிரயாணத்தினால், எங்கள் உடைகளும் பாதணிகளும் பழசாய்ப்போய்விட்டன” என்றார்கள்.
14இஸ்ரயேலர், அவர்களுடைய உணவுப்பொருளில் கொஞ்சம் எடுத்து ருசிபார்த்தார்கள். ஆனால் யெகோவாவிடம் அவர்களைப்பற்றி விசாரிக்கவில்லை. 15அதன்பின் யோசுவா அவர்களை அங்கு வாழவிடுவதென ஒரு சமாதான ஒப்பந்தம் செய்தான். மக்கள் சமுதாயத்தில் இஸ்ரயேலரின் தலைவர்களும் ஒப்பந்தத்தை ஏற்று ஆணையிட்டு உறுதிசெய்தனர்.
16இஸ்ரயேலர் கிபியோன் நகரத்தாருடன் ஒப்பந்தம் செய்துகொண்ட மூன்றே நாட்களில், அவர்கள் தமக்கு அருகில் வசிக்கும் அயலகத்தாரெனக் கேள்விப்பட்டார்கள். 17எனவே மூன்றாம் நாள் இஸ்ரயேலர் புறப்பட்டு ஏவியரின் பட்டணங்களான கிபியோன், கெபிரா, பேரோத், கீரியாத்யாரீம் என்னும் பட்டணங்களை அடைந்தார்கள். 18ஆயினும் மக்கள் சமுதாயத் தலைவர்கள் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவின் பெயரில் ஆணையிட்டு உறுதியளித்தபடியால், இஸ்ரயேலர் அந்நகரங்களைத் தாக்கவில்லை.
இதனால் கூடியிருந்த இஸ்ரயேல் மக்கள் எல்லோரும் தலைவர்களுக்கு எதிராக முறுமுறுத்தார்கள். 19ஆனால் தலைவர்கள் எல்லோரும் அதற்கு மறுமொழியாக: “நாங்கள் இஸ்ரயேலரின் இறைவனாகிய யெகோவாவின் பெயரால் ஆணையிட்டுவிட்டோம். எனவே நாம் அவர்களை இப்பொழுது தொடமுடியாது. 20மாறாக நாம் அவர்களுக்கு இப்படிச் செய்வோம். நாங்கள் அவர்களுக்கு அளித்த ஆணைப்படி வாக்குறுதியை மீறுவதனால் நம்மேல் இறைவனின் கோபம் ஏற்படாதபடிக்கு, அவர்களை நாம் வாழ உயிரோடு விட்டுவிடுவோம். 21அவர்கள் வாழட்டும்; அவர்கள் இஸ்ரயேலின் முழு சமுதாயத்தினருக்கும் மரம் வெட்டிகளாயும், தண்ணீர் கொண்டுவருபவர்களாயும் இருக்கட்டும்” என்றனர். இவ்வாறு தலைவர்களால் அவர்களுக்குக் கொடுத்த வாக்கு காப்பாற்றப்பட்டது.
22பின் யோசுவா கிபியோனியரை தன்னிடம் வரச்செய்து அவர்களிடம், “நீங்கள் எங்களுக்கு அருகில் குடியிருந்துகொண்டு, வெகுதொலைவிலிருந்து வந்தவர்களெனக் கூறி ஏன் எங்களை ஏமாற்றினீர்கள்? 23இப்பொழுது நீங்கள் சபிக்கப்பட்டவர்கள். இனிமேல் என் இறைவனின் ஆலயத்திற்கு நீங்கள் மரம் வெட்டிகளாயும், தண்ணீர் கொண்டுவருபவர்களாயும் இருப்பீர்கள்; இவ்வேலையிலிருந்து நீங்கள் ஒருபோதும் நீங்கமாட்டீர்கள்” என்றான்.
24அதற்கு அவர்கள் யோசுவாவிடம், “உங்கள் இறைவனாகிய யெகோவா முழு நாட்டையும் உங்களுக்குக் கொடுக்கவும், அங்குள்ள குடிகளை உங்களுக்கு முன்பாக அழிக்கவும், மோசேக்கு எவ்வாறு கட்டளையிட்டார் என்பதை, உங்கள் அடிமைகளாகிய நாங்கள் கேள்விப்பட்டோம். எனவே உங்கள் நிமித்தம் எங்கள் உயிருக்குப் பயந்தே இப்படிச் செய்தோம். 25இப்பொழுது நாங்கள் உமது கையிலேயே இருக்கிறோம். எது உமக்கு நல்லதாகவும், சரியாகவும் தோன்றுகிறதோ அதை எங்களுக்குச் செய்யும்” என்றார்கள்.
26இவ்விதமாய் யோசுவா இஸ்ரயேலரிடமிருந்து கிபியோனியர்களைக் காப்பாற்றினான். இஸ்ரயேலர் அவர்களை அழிக்கவில்லை. 27அவன் அன்றே கிபியோனியரை, இஸ்ரயேலின் மக்கள் சமுதாயத்திற்கும், யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்தில் அமைக்கப்படும் பலிபீடத்திற்கும் விறகு வெட்டுபவர்களாயும், தண்ணீர் கொண்டுவருபவர்களாயும் நியமித்தான். இன்றுவரை அவர்கள் அவ்வாறே இருக்கிறார்கள்.

Currently Selected:

யோசுவா 9: TCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for யோசுவா 9