YouVersion Logo
Search Icon

லூக்கா 17

17
பாவம், விசுவாசம், கடமை
1இயேசு தமது சீடர்களிடம் சொன்னதாவது: “மக்களுக்குப் பாவச்சோதனை வருவதை தவிர்க்க முடியாது.” ஆனால், அவை யாரால் வருகிறதோ, அவனுக்கு ஐயோ. 2இந்தச் சிறியவர்களில் ஒருவனை யாராவது பாவத்தில் விழப்பண்ணினால், அவ்வாறு செய்பவர்களின் கழுத்திலே திரிகைக்கல் கட்டி கடலிலே தள்ளப்படுவது, அவனுக்கு நலமாய் இருக்கும். 3எனவே, நீங்கள் கவனமாய் இருங்கள்.
“உன் சகோதரனோ அல்லது சகோதரியோ பாவம்செய்தால் அவர்களைக் கடிந்துகொள். அவர்கள் மனந்திரும்பினால், அவர்களை மன்னித்து விடு. 4அவர்கள் ஒரே நாளில், ஏழுமுறை உனக்கு எதிராகப் பாவம் செய்தாலும், அந்த ஏழுமுறையும் அவர்கள் உன்னிடம் வந்து, ‘நான் மனந்திரும்பி விட்டேன்’ என்றால், நீ அவர்களை மன்னிக்க வேண்டும்” என்றார்.
5அப்போஸ்தலர் கர்த்தரிடம், “எங்கள் விசுவாசத்தை அதிகரிக்கப்பண்ணும்!” என்றார்கள்.
6அதற்கு இயேசு, “கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால், நீங்கள் இந்த காட்டத்தி மரத்தைப்பார்த்து, ‘நீ வேரோடே பிடுங்குண்டு, கடலிலே நடப்படுவாயாக’ என்று சொன்னால், அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.
7“உங்களுக்கு ஒரு வேலைக்காரன் இருந்தால், அவன் வயலை உழுது அல்லது ஆடுகளை மேய்த்து திரும்பி வரும்போது, எஜமான் வேலைக்காரனிடம், ‘இங்கு, வந்து உட்கார்ந்து சாப்பிடு’ என்று சொல்லுவானா? 8மாறாக அவனிடம், ‘எனது சாப்பாட்டைத் தயாராக்கி, நீயும் ஆயத்தமாகி நான் சாப்பிட்டு குடித்து முடிக்கும்வரை, எனக்குப் பணிசெய்; அதற்குப் பின்பு, நீ சாப்பிடலாம்’ என்று சொல்லுவான் அல்லவா? 9கட்டளையிட்டதைச் செய்ததற்காக, அந்த வேலைக்காரனுக்கு அவன் நன்றி செலுத்துவானா? 10எனவே நீங்களும், உங்களுக்குக் கட்டளையிட்டதையெல்லாம் செய்துமுடித்த பின்பு, ‘நாங்கள் தகுதியற்ற வேலைக்காரர்; நாங்கள் எங்களுடைய கடமையை மட்டுமே செய்தோம்’ என்று சொல்லுங்கள்” என்றார்.
குஷ்ட வியாதியுடைய பத்துப்பேர்
11இயேசு எருசலேமுக்குப் போகும்போது, சமாரியா மற்றும் கலிலேயா பகுதிகள் இடையே இருக்கும், எல்லை கிராமங்கள் வழியாகப் பயணம் செய்தார். 12அவர் ஒரு கிராமத்திற்கு வந்தபோது, குஷ்ட வியாதியுடைய பத்துப்பேர் அவருக்கு எதிர்ப்பட்டார்கள். அவர்கள் தூரத்தில் நின்று கொண்டே, 13“ஐயா, இயேசுவே, எங்களுக்கு இரக்கம் காட்டும்!” என்று சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள்.
14இயேசு அவர்களைக் கண்டபோது, “நீங்கள் போய் ஆசாரியர்களிடம் உங்களைக் காண்பியுங்கள்”#17:14 லேவி. 14:2‑32 என்றார். அப்படியே அவர்கள் போகும்போதே, சுகமடைந்தார்கள்.
15அவர்களில் ஒருவன் தான் சுகமடைந்ததைக் கண்டபோது, உரத்த சத்தமாய் இறைவனைத் துதித்துக்கொண்டு திரும்பிவந்தான். 16அவன் இயேசுவின் பாதத்தில் விழுந்து, அவருக்கு நன்றி செலுத்தினான். அவனோ ஒரு சமாரியனாயிருந்தான்.
17அப்பொழுது இயேசு, “பத்துப்பேரும் சுகமடைந்தார்கள் அல்லவா? மற்ற ஒன்பது பேர் எங்கே? 18இந்த வெளிநாட்டானைத் தவிர, இறைவனுக்குத் துதி செலுத்துவதற்கு வேறு யாரும் திரும்பிவரக் காணோமே?” என்று கேட்டார். 19பின்பு இயேசு அவனிடம், “நீ எழுந்து போ; உன் விசுவாசம் உன்னைச் சுகப்படுத்தியது” என்று சொன்னார்.
இறைவனின் அரசின் வருகை
20ஒரு நாள், இறைவனின் அரசு எப்போது வருமென்று, பரிசேயர் இயேசுவைக் கேட்டார்கள். அதற்கு இயேசு, “இறைவனின் அரசு, நீங்கள் கவனமாய் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது வருவதில்லை. 21‘இதோ இங்கே வந்துவிட்டது!’ என்றும், ‘அதோ அங்கே வந்துவிட்டது’ என்றும், மக்களால் சொல்லவும் முடியாது. ஏனெனில், இறைவனின் அரசு உங்கள் மத்தியிலே இருக்கிறது”#17:21 அல்லது உங்களில் இருக்கிறது என்றார்.
22பின்பு அவர் சீடர்களிடம், “மானிடமகனாகிய என்னுடைய நாட்களில் ஒன்றையாவது காண்பதற்கு நீங்கள் ஆவல்கொள்ளும் காலம் வரும். ஆனாலும், நீங்கள் அதைக் காணமாட்டீர்கள். 23‘அங்கே அவர் இருக்கிறார்’ என்றும் ‘இங்கே அவர் இருக்கிறார்’ என்றும் சிலர் சொல்வார்கள். நீங்களோ அவர்கள் பின்னால் ஓட வேண்டாம். 24வானத்தின் ஒரு முனையிலிருந்து, மறுமுனைவரை பிரகாசித்து மின்னும் மின்னலைப்போல் மானிடமகனாகிய நான் என்னுடைய நாளில் காணப்படுவேன். 25ஆனால் முதலாவது, நான் பல வேதனைகளை அனுபவித்து, இந்தத் தலைமுறையினரால் புறக்கணிக்கப்பட வேண்டியதாயிருக்கிறது.
26“நோவாவின் நாட்களில் இருந்ததுபோலவே,#17:26 ஆதி. 7 ஆம் அதிகாரத்தைப் பார்க்கவும். மானிடமகனாகிய எனது நாட்களிலும் இருக்கும். 27நோவா பேழைக்குள் போகும்வரைக்கும், மக்கள் சாப்பிட்டுக்கொண்டும் குடித்துக்கொண்டும், திருமணம் செய்துகொண்டும், திருமணம் செய்துகொடுத்துக்கொண்டும் இருந்தார்கள். அப்போது, வெள்ளம் வந்து மக்கள் எல்லோரையும் அழித்துப்போட்டது.
28“லோத்தின் நாட்களிலும் அப்படித்தான் நடந்தது. அந்த மக்களும் சாப்பிட்டு, குடித்து, வாங்கி, விற்று, பயிரிட்டுக்கொண்டும், கட்டிக்கொண்டும் இருந்தார்கள். 29ஆனால், லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே, நெருப்பும் கந்தகமும் வானத்திலிருந்து மழையாகப் பெய்து, அவர்கள் எல்லோரையும் அழித்துப்போட்டது.
30“மானிடமகனாகிய நான் வெளிப்படும் நாளிலும், இதைப்போலவே இருக்கும். 31அந்த நாளிலே, தமது வீட்டின்மேல் இருப்பவர்கள், தமது வீட்டிலுள்ள பொருட்களை எடுக்கும்படி, கீழே இறங்கிப் போகக்கூடாது. அப்படியே வயலில் இருக்கிறவர்கள், எதற்காகவும் திரும்பிப் போகக்கூடாது. 32லோத்தின் மனைவியை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். 33தம் வாழ்வைக் காத்துக்கொள்ள முயற்சிக்கிறவர்கள் எவர்களோ, அவர்கள் அதை இழந்துபோவார்கள். தம் வாழ்வை இழக்கிறவர்கள் எவர்களோ, அவர்கள் அதைக் காத்துக்கொள்வார்கள். 34நான் உங்களுக்குச் சொல்கிறேன், அந்த இரவிலே இரண்டுபேர் ஒரு படுக்கையில் படுத்திருப்பார்கள்; ஒருவன் எடுத்துக்கொள்ளப்படுவான், மற்றவன் விட்டுவிடப்படுவான். 35இரண்டு பெண்கள் ஒன்றாகத் தானியம் அரைத்துக் கொண்டிருப்பார்கள்; ஒருத்தி எடுத்துக்கொள்ளப்படுவாள், மற்றவள் விட்டுவிடப்படுவாள். 36இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் எடுத்துக்கொள்ளப்படுவான், மற்றவன் விட்டுவிடப்படுவான்.”#17:36 சில கையெழுத்துப் பிரதிகளில் இங்கு மத். 24:40 ஆம் வசனத்திற்கு இணையான வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளது. என்றார்.
37அதற்கு சீடர்கள், “எங்கே ஆண்டவரே?” என்றார்கள்.
இயேசு அதற்குப் பதிலாக, “பிணம் எங்கே கிடக்கிறதோ, அங்கே கழுகுகள் ஒன்றுகூடும்” என்றார்.

Currently Selected:

லூக்கா 17: TCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in