YouVersion Logo
Search Icon

மாற்கு 11

11
இயேசு எருசலேமுக்கு அரசனாக வருகிறார்
1அவர்கள் எருசலேமுக்கு அருகில் வந்தார்கள். ஒலிவமலையில் உள்ள பெத்பகே மற்றும் பெத்தானியா ஆகிய இடங்களுக்கு வந்தபோது, அவர் தமது சீடர்கள் இரண்டுபேரை அனுப்பி, 2“உங்களுக்கு முன்னேயிருக்கிற கிராமத்திற்குப் போங்கள். நீங்கள் அதற்குள்ளேப் போகையில், ஒருவரும் ஏறிச் சென்றிராத ஒரு கழுதைக்குட்டி கட்டியிருப்பதைக் காண்பீர்கள்; அதை அவிழ்த்து இங்கே கொண்டுவாருங்கள். 3யாராவது உங்களிடம், ‘ஏன் அதை அவிழ்க்கிறீர்கள்?’ என்று கேட்டால், ‘கர்த்தருக்கு இது வேண்டும், அவர் சீக்கிரமாய் இதைத் திரும்பவும் இங்கே அனுப்பி வைப்பார்’ என்று சொல்லுங்கள்” என்றார்.
4அவர்கள் போய் வெளிவீதியில், ஒரு வீட்டின் வாசலின் அருகே கழுதைக்குட்டி ஒன்று கட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அவர்கள் அதை அவிழ்க்கும்போது, 5அங்கே நின்றுகொண்டிருந்த சிலர், “நீங்கள் என்ன செய்கிறீர்கள்? ஏன் கழுதைக்குட்டியை அவிழ்க்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். 6அதற்கு சீடர்கள், இயேசு தங்களுக்குச் சொல்லியிருந்தபடியே பதிலளித்தார்கள். அவர்களும் சீடர்கள் அதை அவிழ்த்துக் கொண்டுபோக அனுமதித்தார்கள். 7அவர்கள் கழுதைக்குட்டியை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, தமது மேலுடைகளை அதன்மேல் போட்டார்கள். அவர் அதின்மேல் உட்கார்ந்தார். 8அநேகர் தங்களுடைய மேலுடைகளை வழியிலே விரித்தார்கள். மற்றவர்கள் வயல்வெளியில் இருந்த மரக்கிளைகளை வெட்டிப் பரப்பினார்கள். 9அவருக்கு முன்னாக சென்றவர்களும், பின்னாகச் சென்றவர்களும் சத்தமிட்டு:
“ஓசன்னா!”
“கர்த்தரின் பெயரில் வருகிறவர் ஆசீர்வதிக்கப்படுவாராக!”#11:9 சங். 118:25,26
10“வரப்போகும் நமது தந்தை தாவீதின் அரசு ஆசீர்வதிக்கப்படுவதாக!”
“உன்னதங்களில் ஓசன்னா!”
என்று ஆர்ப்பரித்தார்கள்.
11இயேசு எருசலேமுக்குள் சென்று, ஆலயத்தில் நுழைந்தார். அவர் எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்துவிட்டு, நேரமாகி விட்டதால், பன்னிரண்டு பேர்களுடன் அங்கிருந்து பெத்தானியாவுக்குச் சென்றார்.
இயேசு அத்திமரத்தைச் சபித்தலும், ஆலயத்தைச் சுத்திகரித்தலும்
12மறுநாள் அவர்கள் பெத்தானியாவை விட்டுப் புறப்படுகையில், இயேசு பசியாயிருந்தார். 13தூரத்திலே இலைகளுள்ள ஒரு அத்திமரத்தை அவர் கண்டு, அதில் பழங்கள் ஏதும் இருக்கின்றனவா என்று பார்க்கும்படிச் சென்றார். அவர் அதன் அருகே வந்தபோது, அதிலே இலைகளைத் தவிர வேறொன்றும் இல்லாதிருந்தது. ஏனெனில், அது அத்திப்பழக் காலம் அல்ல. 14அப்பொழுது இயேசு அந்த மரத்தைப்பார்த்து, “இனி ஒருவரும், ஒருபோதும் உன்னிலிருந்து பழம் பறித்துச் சாப்பிடக்கூடாது” என்றார். அவர் அப்படிச் சொன்னதைச் சீடர்கள் கேட்டனர்.
15பிறகு அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு ஆலய முற்றத்திற்குச் சென்று, அங்கே பொருட்கள் விற்பவர்களையும், வாங்குபவர்களையும் வெளியே துரத்தத் தொடங்கினார். காசு மாற்றம் செய்பவர்களின் மேஜைகளையும், புறாக்கள் விற்பவர்களின் இருக்கைகளையும் புரட்டித்தள்ளினார். 16ஆலய முற்றத்தின் வழியாக வியாபாரப் பொருட்களைக் கொண்டுசெல்வதற்கு அவர் ஒருவரையும் அனுமதிக்கவில்லை. 17இயேசு அவர்களுக்கு போதித்து, “என்னுடைய வீடு, எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு என்று அழைக்கப்படும் என எழுதப்பட்டிருக்கிறதல்லவா#11:17 ஏசா. 56:7? ஆனால், நீங்களோ அதைக் கள்வர்களின் குகையாக்குகிறீர்களே#11:17 எரே. 7:11” என்று சொன்னார்.
18தலைமை ஆசாரியர்களும், மோசேயின் சட்ட ஆசிரியர்களும் இதைக் கேட்டபோது, அவரைக் கொல்வதற்கு வழிதேடத் தொடங்கினார்கள். ஆனால் அவர்கள் அவருக்குப் பயந்தார்கள். ஏனெனில் கூடியிருந்த மக்கள் கூட்டம் அவருடைய போதனையை வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தது.
19மாலை வேளையானபோது, இயேசுவும் சீடர்களும் நகரத்தைவிட்டு வெளியே சென்றார்கள்.
20மறுநாள் காலையில் அவர்கள் திரும்பி வரும்போது, அந்த அத்திமரம் வேரிலிருந்து காய்ந்து இருப்பதைச் சீடர்கள் கண்டார்கள். 21பேதுரு நடந்ததை நினைவுகூர்ந்து இயேசுவிடம், “போதகரே, பாரும்! நீர் சபித்த அந்த அத்திமரம் பட்டுப்போயிற்று!” என்றான்.
22அதற்கு இயேசு, “இறைவனில் விசுவாசம் கொண்டிருங்கள். 23நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், யாராவது இந்த மலையைப் பார்த்து, ‘நீ போய் கடலில் விழு’ என்று சொல்லி, தமது இருதயத்தில் சந்தேகப்படாமல், தாம் சொல்வது நடக்கும் என்று விசுவாசித்தால், அது அவர்களுக்குச் செய்யப்படும். 24ஆகையால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், உங்கள் மன்றாட்டில் நீங்கள் எதைக் கேட்கிறீர்களோ, அதைப் பெற்றுக்கொண்டீர்கள் என்று விசுவாசியுங்கள்; அப்பொழுது அது உங்களுடையதாகும். 25நீங்கள் நின்று மன்றாடும்போது, யாராவது உங்களுக்குப் பிழை செய்ததினால், அவருக்கு விரோதமாக உங்கள் மனதில் ஏதாவது கசப்பு வைத்திருந்தால், அவரை மன்னியுங்கள்; அப்பொழுது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுங்கூட உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பார். 26அப்படி நீங்கள் மன்னியாவிட்டால், உங்கள் பரலோகப் பிதாவும் உங்கள் பாவங்களை மன்னிக்கமாட்டார்”#11:26 சில கையெழுத்துப் பிரதிகளில் இங்கு மத். 6:15 ஆம் வசனத்திற்கு இணையான வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளது. என்றார்.
இயேசுவின் அதிகாரத்தைக் குறித்துக் கேள்வி கேட்டல்
27அவர்கள் மீண்டும் எருசலேமுக்கு வந்து சேர்ந்தார்கள். இயேசு ஆலய முற்றங்களில் நடந்துகொண்டிருக்கையில், தலைமை ஆசாரியர்களும், மோசேயின் சட்ட ஆசிரியர்களும், யூதரின் தலைவர்களும் அவரிடம் வந்தார்கள். 28அவர்கள் அவரிடம், “நீர் எந்த அதிகாரத்தினால் இந்தக் காரியங்களைச் செய்கிறீர்? இதைச் செய்வதற்கு உமக்கு அதிகாரம் கொடுத்தது யார்?” என்றார்கள்.
29அதற்கு இயேசு அவர்களிடம், “நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்குப் பதிலை எனக்குச் சொல்லுங்கள். அப்பொழுது எந்த அதிகாரத்தைக் கொண்டு நான் இவற்றைச் செய்கிறேன் என்று உங்களுக்குச் சொல்வேன். 30யோவானின் திருமுழுக்கு பரலோகத்திலிருந்து வந்ததா அல்லது மனிதரிடமிருந்து வந்ததா? அதை எனக்குச் சொல்லுங்கள்” என்றார்.
31அவர்கள் அதைக்குறித்து தங்களுக்குள்ளே கலந்து பேசிக்கொண்டார்கள், “அது பரலோகத்திலிருந்து வந்தது என்று நாம் சொல்வோமானால், ‘ஏன் நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை?’ என்று நம்மைக் கேட்பார். 32அது மனிதரிடமிருந்து வந்தது என்று சொல்லவும், நமக்குப் பயமாயிருக்கிறது” என்றார்கள். ஏனெனில் எல்லோரும் யோவான் ஒரு இறைவாக்கினன் என்று ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
33எனவே அவர்கள் இயேசுவிடம், “எங்களுக்குத் தெரியாது” என்று பதிலளித்தார்கள்.
இயேசு அதற்கு அவர்களிடம், “அப்படியானால், இந்த காரியங்களை எந்த அதிகாரத்தினால் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குச் சொல்லமாட்டேன்” என்றார்.

Currently Selected:

மாற்கு 11: TCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in