YouVersion Logo
Search Icon

எண்ணாகமம் 10

10
வெள்ளி எக்காளங்கள்
1யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: 2“வெள்ளியை அடித்து இரண்டு எக்காளங்களைச் செய்யவேண்டும். மக்களை ஒன்றுகூட்டி அழைப்பதற்கும், முகாமில் உள்ளவர்களை புறப்படச்செய்வதற்கும் அவற்றைச் செய்யப்படவேண்டும். 3அந்த இரண்டு எக்காளங்களும் ஊதப்படுகின்றபோது, எல்லா மக்களும் சபைக்கூடார வாசலில் உனக்கு முன்பாகக் கூடிவரவேண்டும். 4ஆனால் ஒரு எக்காளம் மட்டும் ஊதப்படும்போது தலைவர்கள், இஸ்ரயேல் வம்சத்தலைவர்கள் மாத்திரமே உனக்கு முன்பாகக் கூடிவரவேண்டும். 5எக்காளத்தின் சத்தம் பெரிதாய் தொனிக்கும்போது, கிழக்குப் பக்கத்தில் முகாமிட்டிருக்கும் கோத்திரங்கள் புறப்படவேண்டும். 6இரண்டாந்தரமும் எக்காள சத்தம் பெரிதாய் தொனிக்கும்போது, தெற்கே முகாமிட்டிருக்கிறவர்கள் புறப்படவேண்டும். எக்காளத்தின் பெருந்தொனி புறப்படுவதற்கு அடையாளமாயிருக்க வேண்டும். 7மக்களை ஒன்று கூட்டுவதற்காக எக்காளம் ஊதவேண்டும். ஊதப்படும் தொனி வித்தியாசமாயிருக்க வேண்டும்.
8“ஆசாரியர்களான ஆரோனின் மகன்களே எக்காளங்களை ஊதவேண்டும். இது உனக்கும், உன் சந்ததிக்கும் தலைமுறைதோறும் ஒரு நித்திய நியமமாய் இருக்கும். 9உங்களை ஒடுக்குகிற உங்கள் பகைவர்களுக்கு எதிராக உங்கள் சொந்த நாட்டிலே நீங்கள் போருக்குச் செல்லும்போது, நீ எக்காளங்களினால் பெருந்தொனியை எழுப்பவேண்டும். அப்பொழுது நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவினால் நினைவுகூரப்பட்டு, உங்கள் பகைவர்களிடமிருந்து தப்புவிக்கப்படுவீர்கள். 10அத்துடன் உங்களுக்கு நியமிக்கப்பட்ட பண்டிகைகளையும், அமாவாசைப் பண்டிகைகளையும் கொண்டாடி மகிழும் காலங்களில், உங்கள் தகன காணிக்கைகளுக்கும், சமாதான காணிக்கைகளுக்கும் மேலாக எக்காளங்களை ஊதவேண்டும். அவை உங்கள் இறைவனுக்கு முன்பாக உங்களை ஞாபகப்படுத்தும் அடையாளமாயிருக்கும். நான் உங்கள் இறைவனாகிய யெகோவா” என்றார்.
இஸ்ரயேலர் சீனாயை விட்டுப்போதல்
11இஸ்ரயேலர் எகிப்திலிருந்து வெளியேறிய பிறகு இரண்டாம் வருடம், இரண்டாம் மாதம், இருபதாம் நாளில் சாட்சியின் கூடாரத்தின் மேலாக இருந்த மேகம் மேலெழுந்தது. 12அப்பொழுது இஸ்ரயேலர் சீனாய் பாலைவனத்தை விட்டுப் புறப்பட்டு, ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குப் பயணம்பண்ணி, அந்த மேகம் பாரான் பாலைவனத்தில் தங்கும்வரை போய்க்கொண்டிருந்தார்கள். 13யெகோவா மோசேயின் மூலம் கொடுத்த கட்டளையின்படியே, இவ்விதம் முதல்முறையாக அவர்கள் புறப்பட்டார்கள்.
14முதலாவதாக, யூதாவின் முகாம் பிரிவுகள் தங்கள் கொடியின்கீழ் சென்றன. அம்மினதாபின் மகன் நகசோன் அவர்களுக்குத் தலைமை தாங்கினான். 15சூவாரின் மகன் நெதனெயேல் இசக்கார் கோத்திரப் பிரிவுக்குத் தலைமை தாங்கினான். 16ஏலோனின் மகன் எலியாப், செபுலோன் கோத்திரப் பிரிவுக்குத் தலைமை தாங்கினான். 17அப்பொழுது இறைசமுக கூடாரமும் கழற்றப்பட்டது. கெர்சோனியரும், மெராரியரும் அதைச் சுமந்துகொண்டு புறப்பட்டார்கள்.
18அடுத்ததாக, ரூபனின் முகாம் பிரிவுகள் தங்கள் கொடியின்கீழ் புறப்பட்டன. சேதேயூரின் மகன் எலிசூர் அவர்களுக்குத் தலைமை வகித்தான். 19சூரிஷதாயின் மகன் செலூமியேல் சிமியோன் கோத்திரப் பிரிவுக்குத் தலைமை தாங்கினான். 20தேகுயேலின் மகன் எலியாசாப், காத் கோத்திரப் பிரிவுக்குத் தலைமை தாங்கினான். 21அதன்பின் கோகாத்தியர் பரிசுத்த பொருட்களைச் சுமந்துகொண்டு புறப்பட்டார்கள். அவர்கள் போய்ச்சேருமுன் இறைசமுகக் கூடாரம் அமைக்கப்பட வேண்டியிருந்தது.
22அடுத்ததாக, எப்பிராயீமின் முகாம் பிரிவுகள் தங்கள் கொடியின்கீழ் புறப்பட்டன. அவர்களுக்கு அம்மியூதின் மகன் எலிஷாமா தலைமை தாங்கினான். 23பெதாசூரின் மகன் கமாலியேல், மனாசே கோத்திரப் பிரிவுக்குத் தலைமை தாங்கினான். 24கீதெயோனின் மகன் அபீதான், பென்யமீன் கோத்திரப் பிரிவுக்குத் தலைமை தாங்கினான்.
25கடைசியாக, தாணின் முகாம் பிரிவுகள் எல்லாப் பிரிவுகளுக்கும் பின்னணிக் காவலாக, தங்கள் கொடியின்கீழ் புறப்பட்டன. அம்மிஷதாயின் மகன் அகியேசேர் அவர்களுக்குத் தலைமை தாங்கினான். 26ஓகிரானின் மகன் பாகியேல், ஆசேர் கோத்திரப் பிரிவுக்குத் தலைமை தாங்கினான். 27ஏனானின் மகன் அகீரா, நப்தலி கோத்திரப் பிரிவுக்குத் தலைமை தாங்கினான். 28இஸ்ரயேலரின் பிரிவுகள் புறப்பட்டபோது, இவ்விதமாய் அவர்களின் அணிவகுப்பு ஒழுங்காய் அமைந்தது.
29அதன்பின் மோசே மீதியானியனான தன் மாமன் ரெகுயேலின் மகன் ஒபாவிடம், “இப்பொழுது நாங்கள் யெகோவா எங்களுக்குத் தருவேன் என வாக்குக்கொடுத்த இடத்திற்குப் போகிறோம். நீயும் எங்களுடன் வா. நாங்கள் உன்னை நன்றாக நடத்துவோம். ஏனெனில், யெகோவா இஸ்ரயேலருக்கு நன்மைகளைத் தருவதாக வாக்குத்தத்தம் செய்திருக்கிறார்” என்றான்.
30ஆனால் ஒபாவோ, “நான் உங்களுடன் வரமாட்டேன்; நான் என் சொந்த நாட்டிற்கும், என் சொந்த மக்களிடத்திற்கும் போகப்போகிறேன்” என்றான்.
31அதற்கு மோசே, “தயவுசெய்து நீ எங்களைவிட்டுப் போகவேண்டாம். நாங்கள் பாலைவனத்தில் எங்கே முகாமிடவேண்டும் என்பது உனக்குத் தெரியும். நீ எங்கள் வழிகாட்டியாயிரு. 32நீ எங்களுடன் வந்தால், யெகோவா எங்களுக்குத் தரப்போகிற எல்லா நன்மைகளையும் நாங்கள் உன்னோடு பகிர்ந்துகொள்வோம்” என்றான்.
33அப்படியே அவர்கள் யெகோவாவினுடைய மலையை விட்டுப் புறப்பட்டு மூன்று நாட்கள் பயணம் செய்தார்கள். தங்கும் இடம் ஒன்றைக் கண்டுகொள்வதற்காக அந்த மூன்றுநாட்களும் யெகோவாவின் உடன்படிக்கைப்பெட்டி அவர்களுக்கு முன்னால் சென்றது. 34அவர்கள் முகாமைவிட்டுப் புறப்பட்டபோது, பகலில் யெகோவாவின் மேகம் அவர்களுக்கு மேலாக இருந்தது.
35உடன்படிக்கைப்பெட்டி புறப்பட்டபோதெல்லாம் மோசே சொன்னது:
“யெகோவாவே, எழுந்தருளும்!
உமது பகைவர் சிதறடிக்கப்படுவார்களாக;
உமது எதிரிகள் உமக்கு முன்பாகப் பயந்து ஓடுவார்களாக.”
36உடன்படிக்கைப்பெட்டி தங்கும்போதெல்லாம் மோசே சொன்னது:
“யெகோவாவே,
எண்ணிலடங்கா பல்லாயிரக்கணக்கான இஸ்ரயேலரிடம் திரும்பி வாரும்.”

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in