YouVersion Logo
Search Icon

ஒபதியா 1

1
ஒபதியாவின் தரிசனம்
1ஒபதியாவின் தரிசனம்.
யெகோவாவாகிய ஆண்டவர் ஏதோம் நாட்டைக் குறித்துச் சொல்லுகிறது என்னவென்றால்:
“எழும்புங்கள், அதற்கு விரோதமாக யுத்தம் செய்ய வாருங்கள்”
என்று ஜனங்களிடம் சொல்லுவதற்காக
ஒரு தூதுவன் அனுப்பப்பட்டான்,
என்ற செய்தியை யெகோவா சொல்லக்கேட்டோம்.
2“இதோ, நான் உன்னை நாடுகளுக்குள்ளே சிறியதாக்குவேன்;
நீ முற்றிலும் அவமதிக்கப்படுவாய்.
3கற்பாறை பிளவுகளாகிய உன் உயர்ந்த ஸ்தானத்திலே குடியிருந்து,
‘என்னைத் தரையிலே விழத்தள்ளுகிறவன் யார்?’ என்று
உன் இருதயத்தில் சொல்லுகிறவனே,
உன் இருதயத்தின் அகந்தை
உன்னை மோசம்போக்குகிறது.
4நீ கழுகைப்போல உயரப்போனாலும்,
நீ நட்சத்திரங்களுக்குள்ளே உன் கூட்டைக் கட்டினாலும்,
அங்கிருந்தும் நான் உன்னைக் கீழே விழத்தள்ளுவேன்” என்று
யெகோவா அறிவிக்கிறார்.
5“நீ எவ்வளவாய்ச் சங்கரிக்கப்பட்டுப்போனாய்!
திருடராகிலும் இராத்திரியில் கொள்ளையடிக்கிறவர்களாகிலும்
உன்னிடத்தில் வந்தால்,
தங்களுக்குப் போதுமானமட்டும் திருடுவார்கள் அல்லவோ?
திராட்சைப் பழங்களை பறிக்கிறவர்கள் உன்னிடத்தில் வந்தால்,
சில பழங்களை விட்டுவிடுவார்கள் அல்லவோ?
6ஏசாவினுடையவைகள் எவ்வளவாய்த் ஆராய்ந்தெடுக்கப்பட்டது;
அவனுடைய அந்தரங்கப் பொக்கிஷங்கள் எவ்வளவாய் சூறையாடப்பட்டது.
7உன்னோடு உடன்படிக்கை செய்த எல்லா மனுஷரும்
உன்னை எல்லைமட்டும் துரத்திவிட்டார்கள்;
உன்னோடு சமாதானமாயிருந்த மனுஷர் உன்னை மோசம்போக்கி,
உன்னை மேற்கொண்டார்கள்;
உன் அப்பத்தைச் சாப்பிட்டவர்கள் உனக்குக் கீழே கண்ணிவைத்தார்கள்,
ஆனால் நீ அதைக் கண்டுகொள்ளமாட்டாய்.
8“அந்நாளில் அல்லவோ நான் ஏதோமிலுள்ள ஞானிகளையும்,
ஏசாவின் மலைமேலுள்ள புத்திமான்களையும் அழிப்பேன்,
என்று யெகோவா சொல்லுகிறார்.
9தேமானே, ஏசாவின் மலைமேலுள்ள மனுஷர் யாவரும்
கொலையினால் சங்கரிக்கப்படும்படி
உன் வலிமைமிக்க வீரர்கள் கலங்குவார்கள்.
10நீ உன் சகோதரனாகிய யாக்கோபுக்குச் செய்த கொடுமையினிமித்தம்,
வெட்கம் உன்னை மூடும்;
நீ முற்றிலும் அழிக்கப்பட்டுப் போவாய்.
11நீ எதிர்த்து நின்ற நாளிலும்,
பிறநாட்டார் அவன் சேனையைச் சிறைப்பிடித்துப்போன நாளிலும்,
வெளிநாட்டார் அவன் வாசல்களுக்குள் புகுந்து,
எருசலேமின்பேரில் சீட்டுப்போட்ட காலத்தில்,
நீயும் அவர்களில் ஒருவனைப்போல் இருந்தாய்.
12உன் சகோதரன் அந்நியர்வசமான நாளாகிய அவனுடைய நாளை
நீ பிரியத்தோடே பாராமலும்,
யூதா புத்திரருடைய அழிவின் நாளிலே அவர்கள் நிமித்தம் சந்தோஷப்படாமலும்,
அவர்கள் நெருக்கப்படுகிற நாளிலே
நீ பெருமையாய்ப் பேசாமலும்
இருக்கவேண்டியதாயிருந்தது.
13என் ஜனத்தின் ஆபத்துநாளிலே
நீ அவர்கள் வாசல்களுக்குள் பிரவேசியாமலும்,
அவர்கள் ஆபத்துநாளிலே
அவர்கள் அநுபவிக்கிற தீங்கை நீ பிரியத்தோடே பாராமலும்,
அவர்கள் ஆபத்துநாளிலே
அவர்கள் ஆஸ்தியில் கைபோடாமலும்,
14அவர்களில் தப்பினவர்களைச் சங்கரிக்கும்படி
வழிச்சந்திகளிலே நிற்காமலும்,
இக்கட்டு நாளில் அவர்களில் மீதியானவர்களைக்
காட்டிக்கொடாமலும் இருக்கவேண்டியதாயிருந்தது.
15“எல்லா நாடுகளுக்கும் விரோதமான நாளாகிய
யெகோவாவினுடைய நாள் சமீபமாய் வந்திருக்கிறது;
நீ செய்தபடியே உனக்கும் செய்யப்படும்;
உன் செய்கையின் பலன் உன் தலையின்மேல் திரும்பும்.
16நீங்கள் என் பரிசுத்த பர்வதத்தின்மேல் மதுபானம்பண்ணினபடியே
எல்லா நாடுகளும் எப்பொழுதும் மதுபானம்பண்ணுவார்கள்;
அவர்கள் குடித்துக்கொண்டே இருப்பார்கள்,
குடித்து மயங்கியிருப்பார்கள்.
17ஆனாலும் சீயோன் மலையிலே தப்பியிருப்பார் உண்டு,
அவர்கள் பரிசுத்தமாயிருப்பார்கள்;
யாக்கோபின் வம்சத்தார் தங்களுடைய உரிமைச்சொத்தைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.
18யாக்கோபு வம்சத்தார் அக்கினியும்,
யோசேப்பு வம்சத்தார் அக்கினிஜூவாலையுமாய் இருப்பார்கள்;
ஏசா வம்சத்தாரோ வைக்கோல் துரும்பாயிருப்பார்கள்;
அவர்கள் இவர்களைக் கொளுத்தி,
ஏசாவின் வம்சத்தில்
மீதியிராதபடி இவர்களைப் பட்சிப்பார்கள்.”
யெகோவா இதைச் சொன்னார்.
19நெகேவில் இருப்பவர்கள் ஏசாவின் மலையையும்,
செபேலாவைச் சேர்ந்தவர்கள் பெலிஸ்தரின் நாட்டையும்
சுதந்தரித்துக்கொள்வார்கள்;
அவர்கள் எப்பிராயீமிம், சமாரியா நாடுகளையும்
சுதந்தரித்துக்கொள்வார்கள்;
பென்யமீன் மனுஷர் கீலேயாத்தையும் சுதந்தரித்துக்கொள்வார்கள்.
20சாரெபாத்வரை கானானியருக்குள்ளே சிறைப்பட்டுப்போன
இஸ்ரயேல் புத்திரராகிய இந்தச் சேனையும்,
சேப்பாராத்தில் சிறைப்பட்டுப்போன எருசலேம் நகரத்தாரும்
நெகேவின் பட்டணங்களைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.
21ஏசாவின் மலையை ஆள்வதற்காக
இரட்சகர்கள் சீயோன் மலையில் வந்தேறுவார்கள்;
அப்பொழுது அரசாட்சி யெகோவாவினுடையதாய் இருக்கும்.

Currently Selected:

ஒபதியா 1: TCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in