YouVersion Logo
Search Icon

நீதிமொழி 12

12
1அறிவுரையை விரும்புகிறவர் அறிவை விரும்புகிறார்கள்,
ஆனால் கண்டித்துத் திருத்தப்படுவதை வெறுப்பவர்களோ மூடர்கள்.
2நல்ல மனிதன் யெகோவாவிடமிருந்து தயவு பெறுகிறார்,
ஆனால் தீயதை திட்டமிடுபவர்களையோ அவர் கண்டிக்கிறார்.
3தீமையினால் ஒருவரும் நிலைக்கமாட்டார்கள்,
நீதிமான்களுடைய வேரையோ பிடுங்க முடியாது.
4நற்குணமுள்ள மனைவி தன் கணவனுக்கு மகுடமாயிருப்பாள்;
ஆனால் அவமானத்தைக் கொண்டுவரும் மனைவியோ, அவனுக்கு எலும்புருக்கி போலிருக்கிறாள்.
5நீதிமான்களின் திட்டங்கள் நியாயமானவை,
ஆனால் கொடியவர்களின் ஆலோசனைகளோ வஞ்சனையானவை.
6கொடியவர்களின் வார்த்தைகள் இரத்தம் சிந்துவதற்கு பதுங்கிக் காத்திருக்கின்றன,
ஆனால் நீதிமான்களின் சொற்களோ அவர்களைத் தப்புவிக்கும்.
7கொடியவர்கள் வீழ்த்தப்பட்டு இல்லாமல் போவார்கள்,
ஆனால் நீதிமான்களின் குடும்பமோ உறுதியாய் நிலைத்திருக்கும்.
8ஒரு மனிதர் அவருடைய விவேகத்திற்குத் தக்கதாகப் புகழப்படுவார்,
ஆனால் சீர்கெட்ட சிந்தையுள்ளவரோ அலட்சியம் செய்யப்படுவார்.
9உணவு இல்லாமல் இருந்தும் வெளியே தன்னைப் பெரிய ஆளாக காட்டுவதைவிட,
வேலைக்காரனாக உழைத்து சாதாரணமான நபராக இருப்பதே மேல்.
10நீதிமான்கள் தங்கள் மிருகங்களின் தேவையிலும் கரிசனையாய் இருக்கிறார்கள்;
ஆனால் கொடியவர்களின் தயவான செயல்களும் கொடூரமானவை.
11தங்கள் நிலத்தைப் பண்படுத்தி பயிரிடுகிறவர்களுக்கு நிறைவான உணவு கிடைக்கும்,
ஆனால் பகற்கனவு காண்பதில் நேரத்தை செலவிடுபவர்கள் மதியீனர்கள்.
12தீயவர்களின் கொள்ளைப்பொருளுக்கு கொடியவர்கள் ஆசைப்படுகிறார்கள்;
ஆனால் நீதிமான்களின் வேரோ நிலைநிற்கும்.
13தீயவர் தங்களுடைய பாவப் பேச்சுக்களினால் அகப்பட்டுக் கொள்கிறார்கள்,
ஆனால் நீதிமான்கள் துன்பத்திற்குத் தப்புகிறார்கள்.
14ஒருவருடைய பேச்சினால் அவருக்கு நன்மையும்,
அவருடைய கைவேலையினால் பலனும் பெறுகிறார்.
15மூடருடைய வழி அவர்களுக்கு சரியானதாகவே காணப்படும்,
ஆனால் ஞானமுள்ளவர்கள் ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறார்கள்.
16மூடர்கள் கோபத்தை உடனடியாக வெளிக்காட்டுவார்கள்,
ஆனால் விவேகிகள் ஏளனத்தைப் பொருட்படுத்தமாட்டார்கள்.
17நேர்மையான சாட்சி உண்மையை சொல்கிறார்கள்;
ஆனால் பொய்ச்சாட்சி பொய்களையே சொல்கிறார்கள்.
18முன்யோசனையற்ற வார்த்தைகள் வாளைப்போல் குத்தும்,
ஆனால் ஞானமுள்ளவர்களின் நாவு சுகப்படுத்தும்.
19உண்மைபேசும் உதடுகள் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்,
ஆனால் பொய்பேசும் நாவு சொற்ப நேரமே நிலைக்கும்.
20தீமையான சூழ்ச்சி செய்வோரின் இருதயங்களில் வஞ்சனை உண்டு,
ஆனால் சமாதானத்திற்காக முயற்சிப்பவர்களுக்கு மகிழ்ச்சி உண்டு.
21நீதிமான்களுக்கு ஒரு தீங்கும் நேரிடாது,
ஆனால் கொடியவர்கள் தொல்லையினால் நிரப்பப்படுவார்கள்.
22பொய்பேசும் உதடுகளை யெகோவா அருவருக்கிறார்,
ஆனால் உண்மையானவர்களில் அவர் மகிழ்வார்.
23விவேகமுள்ள மனிதர்கள் தன் அறிவைத் தனக்குள்ளே வைத்திருக்கிறார்கள்;
ஆனால் மூடர்களின் இருதயமோ மூடத்தனத்தை வெளிப்படுத்தும்.
24சுறுசுறுப்பான கைகள் ஆட்சிசெய்யும்;
ஆனால் சோம்பற்தனமோ அடிமை வேலையிலேயே முடியும்.
25கவலை ஒருவருடைய உள்ளத்தை சோர்வடையச் செய்யும்,
ஆனால் தயவான வார்த்தை உற்சாகப்படுத்தும்.
26நீதிமான்கள் தங்கள் நட்பில் எச்சரிக்கையாக இருக்கிறார்கள்;
ஆனால் கொடியவர்களின் வழியோ அவர்களை வழிதவறச் செய்யும்.
27சோம்பேறிகள் தாங்கள் வேட்டையாடிய இறைச்சியை சமைக்காமல் இருக்கிறார்கள்;
ஆனால் சுறுசுறுப்பான மனிதர்கள் தங்களுடைய பொருளை அருமையாய் மதிக்கிறார்கள்.
28நீதியின் பாதையில் வாழ்வு உண்டு;
அப்பாதையில் மரணம் இல்லை.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for நீதிமொழி 12