YouVersion Logo
Search Icon

நீதிமொழி 21

21
1அரசனுடைய இருதயம் யெகோவாவின் கரத்தில் நீரோடைகளைப் போலிருக்கின்றது;
அவர் அதைத் தாம் விரும்பியவர்களிடம் நடத்துகிறார்.
2மனிதனுடைய வழியெல்லாம் அவனுக்குச் சரியானதாகவே தோன்றும்,
ஆனால் யெகோவா இருதயத்தின் சிந்தனைகளை சோதித்து அறிகிறார்.
3பலி செலுத்துவதைப் பார்க்கிலும்,
நியாயத்தையும் நீதியையும் செய்வதே யெகோவாவுக்கு விருப்பம்.
4கொடியவர்களின் உழாத நிலம் என்பது,
அவர்களின் பாவத்தை உண்டாக்கும் அகந்தையான பார்வையும் பெருமையான இருதயமுமே.
5அவசரச்செயல் வறுமையைக் கொடுப்பது நிச்சயம்,
அதுபோலவே கடின உழைப்புள்ளவர்களின் திட்டங்கள் இலாபத்தைக் கொடுப்பதும் நிச்சயம்.
6பொய் சொல்லி சம்பாதிக்கும் செல்வம்,
பறந்து செல்லும் நீராவியாயும் மரணக் கண்ணியாயும் இருக்கும்.
7கொடியவர்கள் நியாயஞ்செய்ய மறுப்பதால்,
அவர்களின் வன்முறை அவர்களையே வாரிச்செல்லும்.
8குற்றவாளிகளின் வழி கோணலானது,
ஆனால் குற்றமற்றவர்களின் நடத்தையோ நேர்மையானது.
9சண்டைக்கார மனைவியுடன் வீட்டில் ஒன்றாய் வாழ்வதைவிட,
கூரையின் மூலையில் தனித்து வாழ்வது சிறந்தது.
10கொடியவர்கள் தீமையை விரும்புகிறார்கள்;
தமக்கு அடுத்திருப்போரை இரக்கத்தோடு பார்க்கமாட்டார்கள்.
11ஏளனம் செய்பவர்கள் தண்டிக்கப்படும்போது, அறிவற்றவர்கள் ஞானத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள்;
ஞானமுள்ளவர்களுக்குப் போதிக்கும்போது, அவர்கள் அறிவைப் பெற்றுக்கொள்கிறார்கள்.
12நீதிபரரான இறைவன் கொடியவர்களின் வீட்டைக் கவனித்துப் பார்த்து,
கொடியவர்களை தண்டிக்கிறார்.
13ஏழைகளின் அழுகைக்குச் செவிகொடுக்காதவர்களுக்கு
தாங்கள் அழும்பொழுது பதில் கிடைக்காது.
14இரகசியமாய் கொடுக்கும் அன்பளிப்பு கோபத்தைத் தணிக்கும்;
அங்கியில் மறைத்துக் கொடுக்கும் இலஞ்சம் கடுஞ்சீற்றத்தைக் குறைக்கும்.
15நீதி செய்யப்படும்போது, அது நீதிமான்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது,
ஆனால் தீயவர்களுக்கு பயமுண்டாக்கும்.
16விவேகத்தின் பாதையைவிட்டு விலகிச்செல்பவர்கள்,
முடிவில் இறந்தவர்களின் கூட்டத்தில் சேருவார்கள்.
17சிற்றின்பத்தை தேடுகிறவர்கள் ஏழையாவார்கள்;
திராட்சைரசத்தையும் ஆடம்பரத்தையும் விரும்புகிறவர்கள் ஒருபோதும் செல்வந்தராவதில்லை.
18கொடியவர்கள் நீதிமான்களையும்,
துரோகிகள் நேர்மையுள்ளவர்களையும் மீட்கும் பணயப் பொருளாவார்கள்.
19சண்டைக்காரியும் கோபக்காரியுமான மனைவியுடன் வாழ்வதைவிட,
பாலைவனத்தில் வாழ்வது சிறந்தது.
20சிறந்த உணவும் எண்ணெயும் ஞானமுள்ளோர் வீட்டில் இருக்கும்;
மூடர்களோ எல்லாவற்றையும் தின்று குடித்து அழித்துவிடுவார்கள்.
21நீதியாகவும் அன்பாகவும் இருக்க விரும்புகிறவர்கள்,
வாழ்வையும் செழிப்பையும், மதிப்பையும் பெறுவார்கள்.
22ஞானமுள்ளவர்கள் பலவான்களின் பட்டணத்தைத் தாக்கி,
அவர்கள் நம்பியிருக்கும் கோட்டையையும் இடித்துப் போடுவார்கள்.
23தங்கள் வாயையும் நாவையும் காத்துக்கொள்கிறவர்கள்
பேரழிவிலிருந்து தங்களைக் காத்துக்கொள்கிறார்கள்.
24அகந்தையும் இறுமாப்பும் உள்ளவர்களுக்கு, “ஏளனக்காரர்கள்” என்று பெயர்,
அவர்கள் எல்லையற்ற ஆணவத்துடன் நடந்துகொள்கிறார்கள்.
25சோம்பேறியின் கைகள் வேலைசெய்ய மறுப்பதால்,
அவர்களின் ஆசையினால் அவர்கள் அழிவார்கள்.
26அவர்களுடைய பேராசை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது;
ஆனால் நீதிமான்களோ, தாராளமாய்க் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள்.
27கொடியவர்கள் செலுத்தும் பலி அருவருப்பானது;
அது தீயநோக்கத்துடன் செலுத்தப்படுமானால், அது இன்னும் எவ்வளவு அதிக அருவருப்பாயிருக்கும்!
28பொய்ச்சாட்சி கூறுபவர்கள் அழிந்துபோவார்கள்;
ஆனால் கவனமாய்க் கேட்பவர்கள் வெற்றிகரமாக சாட்சியளிப்பார்.
29கொடியவர்கள் தங்களைத் துணிச்சல்காரர்களாய் காண்பிக்கிறார்கள்;
ஆனால் நேர்மையுள்ளவர்கள் தங்கள் வழிகளைச் சிந்தித்துப் பார்க்கிறார்கள்.
30யெகோவாவுக்கு எதிராக வெற்றியளிக்கக்கூடிய
ஞானமோ, நுண்ணறிவோ, திட்டமோ எதுவும் இல்லை.
31போரின் நாளுக்காக குதிரை ஆயத்தமாக்கப்பட்டிருக்கிறது,
ஆனால் வெற்றியோ யெகோவாவினுடையது.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for நீதிமொழி 21