YouVersion Logo
Search Icon

நீதிமொழி 9

9
ஞானம் மற்றும் முட்டாள்தனத்தின் அழைப்பு
1ஞானம் தனக்கென ஒரு வீட்டைக் கட்டி,
அதின் ஏழு தூண்களையும் செதுக்கி அமைத்திருக்கிறது.
2ஞானம் இறைச்சியைத் தயாரித்து திராட்சை இரசத்தையும் கலந்திருக்கிறது;
அது தனது பந்தியையும் ஆயத்தப்படுத்தியிருக்கிறது.
3தன் பணிப்பெண்களை வெளியே அனுப்பிவிட்டு,
பட்டணத்தில் உயரமான இடங்களில் நின்று இப்படி அழைத்தது,
4“அறிவற்றவர்களே நீங்கள் எல்லோரும் இங்கே வாருங்கள்!”
பின்பு மதிகேடர்களுக்கு இப்படிச் சொன்னது,
5“வாருங்கள், எனது உணவைச் சாப்பிட்டு
நான் கலந்த திராட்சை இரசத்தையும் குடியுங்கள்.
6நீங்கள் உங்கள் மூடவழிகளை விட்டுவிடுங்கள், அப்பொழுது வாழ்வடைவீர்கள்;
மெய்யறிவின் வழியில் நடங்கள்.”
7ஏளனம் செய்பவர்களைத் திருத்துகிறவர்கள் தங்களுக்கு அவமதிப்பைத் தேடிக்கொள்கிறார்கள்;
கொடியவர்களைக் கடிந்துகொள்கிறவர்கள் பழிச்சொல்லுக்கு ஆளாகிறார்கள்.
8ஏளனம் செய்பவர்களை கடிந்துகொள்ளாதே, அவர்கள் உன்னை வெறுப்பார்கள்;
ஞானமுள்ளவர்களைக் கடிந்துகொள், அவர்கள் உன்னை நேசிப்பார்கள்.
9ஞானமுள்ளவர்களுக்கு அறிவுரை கூறு, அவர்கள் இன்னும் ஞானத்தில் வளருவார்கள்;
நீதிமான்களுக்குக் கற்றுக்கொடு, அவர்கள் அறிவில் இன்னும் வளருவார்கள்.
10யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்,
பரிசுத்தரைப் பற்றிய அறிவே புரிந்துகொள்ளுதல்.
11ஏனெனில் ஞானத்தினாலே உன் வாழ்நாட்கள் அதிகரிக்கும்,
உன் ஆயுளுடன் பல வருடங்கள் கூட்டப்படும்.
12நீ ஞானியாய் இருந்தால், உன் ஞானம் உனக்கு வெகுமதியைக் கொடுக்கும்;
நீ ஏளனம் செய்பவனாய் இருந்தால், தனிமையாகவே துன்பத்தை அனுபவிப்பாய்.
13மூடத்தனம் ஒரு முட்டாள் பெண்போல் இருக்கிறது;
அவள் அறிவற்றவளாயும் ஒன்றும் அறியாதவளுமாய் இருக்கிறாள்.
14அவள் தனது வீட்டின் வாசற்படியில் உட்கார்ந்திருக்கிறாள்,
பட்டணத்தின் உயர்ந்த இடத்திலுள்ள இருக்கையில் உட்கார்ந்திருக்கிறாள்.
15அவள் தன்னைக் கடந்து தங்கள் வழியில்
நேராய் செல்பவர்களைக் கூப்பிட்டு,
16“அறிவற்றவர்களே, நீங்கள் எல்லோரும் இங்கே வாருங்கள்!”
பின்பு அவள் மதிகேடர்களுக்கு இப்படிச் சொன்னாள்,
17“திருட்டுத்தண்ணீர் இனிமையானது;
இரகசியமாகச் சாப்பிடும் உணவு சுவையானது!”
18ஆனால் அங்கு செத்தவர்கள் இருக்கிறார்கள் என்றும்,
அவளின் விருந்தாளிகள் பாதாளத்தின் ஆழங்களில் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் அறியாதிருக்கிறார்கள்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for நீதிமொழி 9