YouVersion Logo
Search Icon

சங்கீதம் 42

42
பகுதி ii
சங்கீதம் 42–72
சங்கீதம் 42
கோராகின் மகன்களிலுள்ள பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட மஸ்கீல் என்னும் தாவீதின் சங்கீதம்.
1மான் நீரோடைகளைத் தேடி ஏங்குவது போல்,
இறைவனே என் ஆத்துமா உம்மைத் தேடி ஏங்குகிறது.
2என் ஆத்துமா இறைவனுக்காக, உயிருள்ள இறைவனுக்காக தாகம் கொள்கிறது;
நான் எப்பொழுது இறைவனுடைய சமுகத்தில் வந்து நிற்பேன்?
3மனிதர்களோ நாள்முழுதும் என்னைப் பார்த்து,
“உன் இறைவன் எங்கே?” என்று கேட்பதால்,
இரவும் பகலும்
என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று.
4என் ஆத்துமா எனக்குள் உருகுகையில்
இவைகள் என் நினைவுக்கு வருகின்றன:
முந்திய நாட்களில் நான் மக்கள் கூட்டத்துடன் சேர்ந்து,
இறைவனின் வீட்டிற்கு அவர்களோடு ஊர்வலமாய் நடந்து சென்றேன்;
பண்டிகை கொண்டாடும் மக்கள் கூட்டத்தின் நடுவே,
மகிழ்ச்சியின் சத்தத்தோடும் துதியின் சத்தத்தோடும் நடந்து சென்றேன்.
5என் ஆத்துமாவே, நீ ஏன் சோர்ந்து போகிறாய்?
ஏன் இவ்விதமாய் எனக்குள் கலங்கியிருக்கிறாய்?
இறைவனில் உன் எதிர்பார்ப்பை வைத்திரு;
நான் என் இறைவனின் இரட்சிப்பிற்காக
இன்னும் அவரைத் துதிப்பேன்.
6என் இறைவனே, என் ஆத்துமா எனக்குள் சோர்ந்துபோகிறது;
அதினால் நான் எர்மோன் மலைகள் இருக்கும்
யோர்தான் நதி தொடங்கும் நாட்டிலிருந்தும்,
மீசார் மலையிலிருந்தும் உம்மை நினைவுகூருவேன்.
7உமது அருவிகளின் இரைச்சலினால்
ஆழம் ஆழத்தைக் கூப்பிடுகிறது;
உம்முடைய எல்லா அலைகளும்,
பேரலைகளும் எனக்கு மேலாக மோதிச் செல்கின்றன.
8பகலில் யெகோவா தமது உடன்படிக்கையின் அன்பை எனக்குக் கொடுக்கிறார்;
இரவிலோ, அவருடைய பாடல் என்னோடு இருக்கிறது;
என் வாழ்வின் இறைவனை நோக்கிய மன்றாட்டாகவே அது இருக்கிறது.
9நான் என் கன்மலையாகிய இறைவனிடம்,
“நீர் ஏன் என்னை மறந்து விட்டீர்?
பகைவனால் ஒடுக்கப்பட்டு
நான் ஏன் துக்கத்துடன் திரியவேண்டும்?” என்கிறேன்.
10நாளெல்லாம் என் பகைவர்கள் என்னைப் பார்த்து,
“உன் இறைவன் எங்கே?”
என்று என்னைப் நிந்திப்பதால்,
என் எலும்புகள் சாவுக்கேதுவான வேதனையை அடைகின்றன.
11என் ஆத்துமாவே, நீ ஏன் சோர்ந்து போகிறாய்?
நீ ஏன் இவ்விதமாய் எனக்குள் கலங்கியிருக்கிறாய்?
இறைவனில் உன் எதிர்பார்ப்பை வைத்திரு;
நான் என் இறைவனின் இரட்சிப்பிற்காக
இன்னும் அவரைத் துதிப்பேன்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for சங்கீதம் 42