வெளிப்படுத்தல் 2
2
எபேசு திருச்சபைக்கு
1“எபேசு பட்டணத்திலுள்ள திருச்சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியதாவது:
வலதுகையில் ஏழு நட்சத்திரங்களைக் கட்டுப்படுத்துகிறவரும், ஏழு தங்க குத்துவிளக்குகளின் நடுவே நடப்பவருமாகிய நான் சொல்லும் வார்த்தைகள் என்னவென்றால்:
2நான் உன்னுடைய செயல்களை அறிந்திருக்கிறேன், உனது கடின உழைப்பையும், விடாமுயற்சியையும் நான் அறிந்திருக்கிறேன். தீயவரை உன்னால் சகிக்க முடியாதிருக்கிறாய். அப்போஸ்தலர் அல்லாதிருந்தும் தங்களை அப்போஸ்தலர் என்று சொல்லிக்கொள்பவர்களை நீ சோதித்து, அவர்கள் பொய்யான அப்போஸ்தலர் என்பதை நீ கண்டு கொண்டாய் என்பதையும், நான் அறிந்திருக்கிறேன். 3நீ விடாமல் முயற்சித்து, என்னுடைய பெயருக்காக பாடுகளை அனுபவித்தாய். நீ சலித்துப்போகவே இல்லை என்பதையும் அறிந்திருக்கிறேன். 4ஆனால், நான் உன்னில் இந்தக் குறையைக் காண்கிறேன்: உனது ஆரம்பகால அன்பை நீ கைவிட்டு விட்டாய். 5நீ எப்பேற்பட்ட உயரத்திலிருந்து விழுந்துவிட்டாய் என்பதை நினைத்துப்பார். நீ மனந்திரும்பு. நீ ஆரம்பத்தில் செய்த செயல்களைத் திரும்பவும் செய். நீ மனந்திரும்பாவிட்டால், நான் உன்னிடத்தில் வந்து, உன்னுடைய விளக்குத்தாங்கியை அதன் இடத்திலிருந்து அகற்றிவிடுவேன். 6ஆனால் உன்னில் பாராட்டுதலுக்குரியது ஒன்று உண்டு: நிக்கொலாயரின் செயல்களை நீ வெறுக்கிறாய், அவர்களின் செயல்களை நானும் வெறுக்கிறேன். 7பரிசுத்த ஆவியானவர் திருச்சபைகளுக்குச் சொல்வதைக் காதுள்ளவர்கள் கேட்கட்டும். வெற்றி பெறுகிறவர்களுக்கு நான் ஜீவ மரத்திலிருந்து பழத்தைச் சாப்பிடும் உரிமையைக் கொடுப்பேன். இந்த மரம் இறைவனுடைய சொர்க்கத்தில் இருக்கிறது.
சிமிர்னா திருச்சபைக்கு
8“சிமிர்னா பட்டணத்திலிருக்கிற திருச்சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியதாவது:
தொடக்கமும் முடிவுமாயிருக்கிற, இறந்து மீண்டும் உயிர்பெற்றவருடைய வார்த்தைகள் என்னவென்றால்:
9உன்னுடைய துன்பங்களையும், வறுமையையும் நான் அறிந்திருக்கிறேன் ஆனால், நீ செல்வந்தனாய் இருக்கிறாய்! தாங்கள் யூதரல்லாதவராயிருந்தும் யூதரென்று சொல்லிக்கொள்கிறவர்கள் உனக்கு விரோதமாய் அவதூறு பேசுவதையும் நான் அறிவேன். ஆனால், அவர்கள் சாத்தானின் சபையைச் சேர்ந்தவர்கள். 10உனக்கு வரப்போகிற துன்பத்தைக் குறித்து பயப்படாதே. உங்களைச் சோதிப்பதற்காக, உங்களில் சிலரை சாத்தான் சிறையில் போடுவான். நீங்கள் பத்து நாட்கள் துன்பத்தை அனுபவிப்பீர்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். மரிக்கும்வரை உண்மையுள்ளவனாய் இரு. அப்போது நான் உனக்கு ஜீவகிரீடத்தைக் கொடுப்பேன். 11பரிசுத்த ஆவியானவர் திருச்சபைகளுக்குச் சொல்வதைக் காதுள்ளவர்கள் கேட்கட்டும். வெற்றி பெறுகிறவர்கள் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை.
பெர்கமு திருச்சபைக்கு
12“பெர்கமு பட்டணத்திலுள்ள திருச்சபையின் தூதனுக்கு, நீ எழுத வேண்டியதாவது:
இரண்டு பக்கமும் கூர்மையான வாளை வைத்திருக்கிறவரின் வார்த்தைகள் இவையே:
13நீ வாழுகின்ற இடத்தை நான் அறிந்திருக்கிறேன். அங்குதான் சாத்தானின் அரியணை இருக்கிறது. ஆனால், நீ என்னுடைய பெயருக்கு உண்மையுள்ளவனாய் நிலைத்திருக்கிறாய். நீ என்னில் வைத்த விசுவாசத்தைக் கைவிட்டுவிடவில்லை. என்னுடைய உண்மையுள்ள சாட்சியாகிய அந்திப்பா உங்களுடைய பட்டணத்தில், தான் கொல்லப்பட்ட நாட்களிலும், விசுவாசத்தைக் கைவிடவில்லை. அங்குதான் சாத்தான் குடியிருக்கிறான். 14ஆனால், நான் உன்னில் சில குறைகளைக் காண்கிறேன்: இஸ்ரயேலரை விக்கிரகங்களுக்குப் பலியிடப்பட்ட உணவை சாப்பிடச் செய்து, அவர்களை முறைகேடான பாலுறவுகளில் ஈடுபடச்செய்து பாவத்திற்குள் விழசெய்த பாலாக் அரசனுக்குப் புத்தி சொன்ன பிலேயாமுடைய போதனைகளைக் கைக்கொள்கிறவர்கள் உன் நடுவே இருக்கிறார்கள். 15அவ்விதமாகவே, நிக்கொலாயரின் போதனையைக் கைக்கொள்கிறவர்கள் சிலரும் உன் நடுவே இருக்கிறார்கள். 16ஆகவே, நீ மனந்திரும்பு! இல்லாவிட்டால், நான் விரைவில் உன்னிடத்தில் வந்து, என்னுடைய வாயின் வாளினாலே அவர்களுக்கு எதிராய் போராடுவேன். 17பரிசுத்த ஆவியானவர் திருச்சபைகளுக்குச் சொல்வதைக் காதுள்ளவன் கேட்கட்டும். வெற்றி பெறுகிறவர்களுக்கு நான் மறைக்கப்பட்ட மன்னாவைக் கொடுப்பேன். அத்துடன் நான் அவர்களுக்கு புதுப்பெயர் எழுதப்பட்டிருக்கும் ஒரு வெள்ளைக் கல்லைக் கொடுப்பேன். அந்தக் கல்லைப் பெற்றுக்கொள்கிறவர்கள் மாத்திரமே அந்தப் பெயரை அறிவார்கள்.
தியத்தீரா திருச்சபைக்கு
18“தியத்தீரா பட்டணத்திலுள்ள திருச்சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியதாவது:
கொழுந்து விட்டெரியும் நெருப்பைப்போல் கண்கள் இருக்கிறவரும், துலக்கப்பட்ட வெண்கலத்தைப்போல் பாதங்கள் இருக்கிற இறைவனுடைய மகனின் வார்த்தைகள் இவையே:
19உன்னுடைய செயல்கள், அன்பு, விசுவாசம், நீ எனக்குச் செய்யும் ஊழியம், உன்னுடைய விடாமுயற்சி, எல்லாவற்றையும் நான் அறிந்திருக்கிறேன். நீ ஆரம்பத்தில் செய்ததைவிட இப்போது அதிகமாய் ஊழியம் செய்கிறதையும் நான் அறிந்திருக்கிறேன். 20ஆனால், நான் உன்னில் இந்தக் குறையைக் காண்கிறேன்: தன்னுடைய போதனையினாலே என்னுடைய ஊழியர்களைத் தவறாய் வழிநடத்தி, அவர்களை முறைகேடான பாலுறவுகளில் ஈடுபடச்செய்து, விக்கிரகங்களுக்குப் பலியிடப்பட்ட உணவைச் சாப்பிடும்படியும் செய்து தன்னை ஒரு தீர்க்கதரிசி என்று சொல்லிக்கொள்கிற யேசபேல் என்ற அந்தப் பெண்ணை நீ அனுமதிக்கிறாய். 21அவள் தன்னுடைய முறைகேடான பாலுறவுகளிலிருந்து மனந்திரும்புகிறதற்கு அவளுக்குக் கால அவகாசம் கொடுத்தேன். ஆனால் அவளோ மனந்திரும்ப விரும்பவில்லை. 22ஆகவே நான் அவளை நோயுடன் படுக்கையில் கிடக்கச் செய்வேன். அவளோடு விபசாரம் செய்கிறவர்கள், அவளுடைய வழிகளைவிட்டு மனந்திரும்பாவிட்டால், அவர்களையும் மகா உபத்திரவம் அடையச் செய்வேன். 23நான் அவளுடைய பிள்ளைகளை மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பேன். அப்பொழுது இருதயங்களையும், மனங்களையும் ஆராய்கிறவர் நானே என்றும், உங்கள் ஒவ்வொருவருடைய செயல்களுக்கும் ஏற்றவிதமாக, நான் உங்களுக்குப் பதில் செய்கிறவர் என்றும் எல்லா திருச்சபைகளும் அறிந்துகொள்ளும். 24அவளுடைய போதனைகளைக் கைக்கொள்ளாமல், சாத்தானுடைய ஆழமான இரகசியங்கள் என்று அவர்கள் சொல்லிக்கொள்கிற காரியங்களை கற்றுக்கொள்ளமல் தியத்தீரா பட்டணத்திலிருக்கிற மற்றவர்களாகிய ‘உங்களுக்கு நான் கட்டளையிடுவதாவது நான் வரும்வரை, உங்களிடமிருப்பதை பற்றிப்பிடித்துக் கொண்டவர்களாய் மாத்திரம் இருங்கள். 25உங்கள்மேல் இதைத்தவிர நான் வேறு எந்தப் பாரத்தையும் சுமத்தமாட்டேன்.’ 26வெற்றி பெறுகிறவர்களாய் முடிவுவரை என்னுடைய சித்தத்தைச் செய்கிறவர்களுக்கு நான் என் பிதாவினிடமிருந்து அதிகாரம் பெற்றதுபோலவே, நான் நாடுகளின்மேல் அதிகாரம் கொடுப்பேன். 27‘அவர் நாடுகளை இரும்புச் செங்கோலால் ஆளுகை செய்வார். அவர்களை மண்பாண்டங்களைப்போல நொறுக்கிப்போடுவார்’#2:27 சங். 2:9 என்ற வாக்குத்தத்தத்தின்படி, 28நான் அவர்களுக்கு விடிவெள்ளி நட்சத்திரத்தையும் கொடுப்பேன். 29பரிசுத்த ஆவியானவர் திருச்சபைகளுக்குச் சொல்கிறதைக் காதுள்ளவன் கேட்கட்டும்.
Currently Selected:
வெளிப்படுத்தல் 2: TCV
Highlight
Share
Copy
![None](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapistaging.com%2F58%2Fhttps%3A%2F%2Fweb-assets.youversion.com%2Fapp-icons%2Fen.png&w=128&q=75)
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.