YouVersion Logo
Search Icon

நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 6

6
லேவியின் சந்ததியார்
1கெர்சோன், கோகாத், மெராரி ஆகியோர் லேவியின் குமாரர்கள்.
2அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் ஆகியோர் கோகாத்தின் குமாரர்கள்,
3அம்ராம், மோசே, மிரியாம் ஆகியோர் அம்ராமின் குமாரர்கள்.
நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் ஆகியோர் அம்ராமின் பிள்ளைகள் 4எலெயாசார் பினெகாசின் தந்தை, பினெகாஸ் அபிசுவாவின் தந்தை. 5அபிசுவா புக்கியின் தந்தை, புக்கி ஊசியின் தந்தை. 6ஊசி செராகியாவின் தந்தை, செராகியா மெராயோதின் தந்தை. 7மெராயோத் அமரியாவின் தந்தை, அமரியா அகிதூபின் தந்தை. 8அகிதூப் சாதோக்கின் தந்தை, சாதோக் அகிமாசின் தந்தை. 9அகிமாஸ் அசரியாவின் தந்தை, அசரியா யோகானானின் தந்தை. 10யோகானான் அசரியாவின் தந்தை. (இவன்தான் சாலொமோன் எருசலேமில் ஆலயத்தைக் கட்டியபோது ஆசாரிய பணியைச் செய்தவன்.) 11அசரியா அமரியாவின் தந்தை, அமரியா அகிதூபின் தந்தை. 12அகிதூப் சாதோக்கின் தந்தை, சாதோக் சல்லூமின் தந்தை. 13சல்லூம் இல்க்கியாவின் தந்தை, இல்க்கியா அசரியாவின் தந்தை. 14அசரியா செராயாவின் தந்தை, செராயா யோசதாக்கின் தந்தை.
15யூதர்களையும், எருசலேம் ஜனங்களையும் கர்த்தர் வெளியேற்றியபோது யோசதாக்கினையும் கட்டாயமாக வெளியேற்றினார். இவர்கள் இன்னொரு நாட்டில் அடிமைகளானார்கள். நேபுகாத்நேசரைப் பயன்படுத்தி கர்த்தர் இவர்களைச் சிறை பிடித்தார்.
லேவியின் மற்ற சந்ததியினர்
16கெர்சோம், கோகாத், மெராரி ஆகியோர் லேவியின் குமாரர்கள்.
17லிப்னி, சிமேயி ஆகியோர் கெர்சோமின் குமாரர்கள்.
18கோகாத்தின் குமாரர்கள் அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் ஆகியோர்.
19மெராரியின் குமாரர்கள் மகேலி, மூசி ஆகியோர். இதுதான் லேவியின் கோத்திரத்தில் உள்ள குடும்பங்களின் விபரமாகும். அவர்கள் தம் தந்தை பெயர்களோடு சேர்க்கப்பட்டனர்.
20இது கெர்சோமின் சந்ததியினரின் விபரம்: கெர்சோமின் குமாரன் லிப்னி, லிப்னியின் குமாரன் யாகாத், யாகாத்தின் குமாரன் சிம்மா. 21சிம்மாவின் குமாரன் யோவா, யோவாவின் குமாரன் இத்தோ, இத்தோவின் குமாரன் சேரா, சேராவின் குமாரன் யாத்திராயி.
22இது கோகாத்தின் சந்ததியினரின் விபரம்: கோகாத்தின் குமாரன் அம்மினதாப், அம்மினதாபின் குமாரன் கோராகு, கோராகுவின் குமாரன் ஆசீர். 23ஆசீரின் குமாரன் எல்க்கானா, எல்க்கானாவின் குமாரன் அபியாசாப், அபியாசாப்பின் குமாரன் ஆசிர். 24ஆசிரின் குமாரன் தாகாத், தாகாத்தின் குமாரன் ஊரியேல், ஊரியேலின் குமாரன் ஊசியா, ஊசியாவின் குமாரன் சவுல்.
25அமாசாயியும், ஆகிமோத்தும் எல்க்கானாவின் குமாரர்கள். 26எல்க்கானாவின் இன்னொரு குமாரன் சோபாய், சோபாயின் குமாரன் நாகாத். 27நாகாத்தின் குமாரன் எலியாப், எலியாப்பின் குமாரன் எரோகாம், எரோகாமின் குமாரன் எல்க்கானா. 28சாமுவேலின் மூத்த குமாரன் யோவேல், இரண்டாவது குமாரன் அபியா.
29இவர்கள் மெராரியின் பிள்ளைகள், மெராரியின் குமாரர்களில் ஒருவன் மகேலி. மகேலியின் குமாரன் லிப்னி, லிப்னியின் குமாரன் சிமேயி, சிமேயியின் குமாரன் ஊசா. 30ஊசாவின் குமாரன் சிமெயா, சிமெயாவின் குமாரன் அகியா, அகியாவின் குமாரன் அசாயா.
ஆலயத்தின் இசைக் கலைஞர்கள்
31கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை கூடாரத்திற்குள் வைத்தபோது, அதைப் பாதுகாக்கவென தாவீதால் இசை சேவை செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர்கள் பின்வருமாறு. 32இவர்கள் பரிசுத்தக் கூடாரத்தில் பாடி சேவை செய்தனர். இப்பரிசுத்தக் கூடாரம் ஆசரிப்புக் கூடாரமென்றும் அழைக்கப்பட்டது. எருசலேமில் சாலோமோன் கர்த்தருடைய ஆலயத்தை கட்டும்வரை இவர்கள் சேவை செய்தனர். இவர்களது வேலைக்கான சட்டங்களைப் பின்பற்றி சேவை செய்து வந்தனர்.
33கீழ்க்கண்ட பெயர்கள் இசை மூலம் சேவை செய்த ஆண்கள் மற்றும் அவர்களது குமாரர்களுக்குடையவை:
கோகாத் குடும்பத்தின் சந்ததியினர்: ஏமான் என்பவன் ஒரு பாடகன். இவன் யோவேலின் குமாரன், யோவேல் சாமுவேலின் குமாரன். 34சாமுவேல் எல்க்கானாவின் குமாரன், எல்க்கானா யெரொகாமின் குமாரன், யெரொகாம் எலியேலின் குமாரன், எலியேல் தோவாகின் குமாரன். 35தோவாக் சூப்பின் குமாரன், சூப் இல்க்கானாவின் குமாரன், இல்க்கானா மாகாத்தின் குமாரன், மாகாத் அமாசாயின் குமாரன், 36அமாசாய் எல்க்கானாவின் குமாரன், எல்க்கானா யோவேலின் குமாரன், யோவேல் அசரியாவின் குமாரன், அசரியா செப்பனியாவின் குமாரன். 37செப்பனியா தாகாதின் குமாரன், தாகாத் ஆசீரின் குமாரன், ஆசீர் எபியாசாப்பின் குமாரன், எபியாசாப் கோராகின் குமாரன், 38கோராக் இத்சாரின் குமாரன், இத்சார் கோகாத்தின் குமாரன், கோகாத் லேவியின் குமாரன், லேவி இஸ்ரவேலின் குமாரன்.
39ஏமானின் உறவினன் ஆசாப். இவன் ஏமானின் வலதுபுறத்தில் பணிசெய்வான். ஆசாப் பெரகியாவின் குமாரன், பெரகியா சிமேயாவின் குமாரன். 40சிமேயா மிகாவேலின் குமாரன், மிகாவேல் பாசெயாவின் குமாரன், பாசெயா மல்கியாவின் குமாரன். 41மல்கியா எத்னியின் குமாரன், எத்னி சேராவின் குமாரன், சேரா அதாயாவின் குமாரன். 42அதாயா ஏத்தானின் குமாரன், ஏத்தான் சிம்மாவின் குமாரன், சிம்மா சீமேயின் குமாரன். 43சீமேயி யாகாதின் குமாரன், யாகாத் கெர்சோமின் குமாரன், கெர்சோம் லேவியின் குமாரன்.
44இவர்களுடைய சகோதரர்கள் மெராரியின் சந்ததியினர். இவர்கள் ஏமானின் இடது பக்கத்தில் நின்று பாடினார்கள். ஏதான் கிஷியின் குமாரன். கிஷி அப்தியின் குமாரன், அப்தி மல்லூகின் குமாரன். 45மல்லூக் அஸபியாவின் குமாரன், அஸபியா அமத்சியாவின் குமாரன், அமத்சியா இல்க்கியாவின் குமாரன். 46இல்க்கியா அம்சியின் குமாரன், அம்சி பானியின் குமாரன், பானி சாமேரின் குமாரன். 47சாமேர் மகேலியின் குமாரன், மகேலி மூசியின் குமாரன், மூசி மெராரியின் குமாரன், மெராரி லேவியின் குமாரன்.
48ஏமானும் ஆசாப்பின் சகோதரர்களும் லேவியின் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். லேவியின் கோத்திரத்தில் வந்தவர்கள் லேவியர்கள் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் பரிசுத்தக் கூடாரத்தில் சேவைசெய்ய தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இப்பரிசுத்தக் கூடாரமே தேவனுடைய ஆலயம். 49ஆனால் ஆரோனின் சந்ததியினர் மட்டுமே நறு மணப் பொருட்களை தகனபலிக்காக பலிபீடத்தில் எரிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனை ஆரோனின் சந்ததியினர் தேவனுடைய ஆலயத்திலுள்ள மகா பரிசுத்தமான இடத்தில் செய்துவந்தனர். அவர்கள் இஸ்ரவேலரைச் சுத்தமாக்கும் சடங்குகளையும் செய்துவந்தனர். மோசே கட்டளையிட்ட சட்டங்களையும், அவர்கள் பின்பற்றி வந்தனர். மோசே தேவனுடைய ஊழியன்.
ஆரோனின் சந்ததியினர்
50கீழ்க்கண்டவர்கள் ஆரோனின் குமாரர்கள்: ஆரோனின் குமாரன் எலெயாசார், எலெயாசாரின் குமாரன் பினெகாஸ், பினெகாஸின் குமாரன் அபிசுவா. 51அபிசுவாவின் குமாரன் புக்கி, புக்கியின் குமாரன் ஊசி, ஊசியின் குமாரன் செராகியா. 52செராகியாவின் குமாரன் மெராயோத், மெராயோத்தின் குமாரன் அமரியா, அமரியாவின் குமாரன் அகித்தூப். 53அகித்தூப்பின் குமாரன் சாதோக், சாதோக்கின் குமாரன் அகிமாஸ்.
லேவியர் குடும்பங்களுக்கான வீடுகள்
54ஆரோனின் சந்ததியினர் வாழ்ந்த இடங்கள் பின் வருவன: இவர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலங்களில் அமைக்கப்பட்ட முகாம்களில் வாழ்ந்தார்கள். கோகாத் குடும்பத்தினர் லேவியர்களுக்குக் கொடுக்கப்பட்ட முதல் பங்கைப்பெற்றனர். 55அவர்களுக்கு எப்ரோன் நகரமும் அதைச் சுற்றியுள்ள வயல்வெளிகளும் கொடுக்கப்பட்டன. இவ்விடங்கள் யூதாவின் ஒரு பகுதியாக உள்ளது. 56ஆனால் அந்நகரத்தின் வயல்களையும் கிராமங்களையும் எப்புன்னேயின் குமாரனாகிய காலேபுக்குக் கொடுத்தார்கள். 57ஆரோனின் சந்ததியினருக்கு எப்ரோன் எனும் நகரம் கொடுக்கப்பட்டது. இது அடைக்கலம் தேடுபவர்களுக்கான நகரமாக#6:57 அடைக்கலம் தேடுபவர்களுக்கான நகரம் இது ஒரு சிறப்பான நகரம். இதில் ஒரு இஸ்ரவேலன் யாராவது ஒருவரை விபத்தில் கொன்றுவிட்டால், அவரது கோபமிக்க உறவினர்களிடமிருந்து தப்பித்து ஓடிவிடமுடியும். பார்க்க: யோசு. 20:1-9. விளங்கியது. அதோடு அவர்களுக்கு லிப்னா, யாத்தீர், எஸ்தெ மோவா, 58ஈலேன், தெபீர், 59ஆசான், பெத்சேமே சஸ், ஆகிய நகரங்களையும் அதைச் சுற்றியுள்ள வெளி நிலங்களையும் கொடுத்தனர். 60பென்யமீன் கோத்திரத்தினர் கேபா, அலெமேத், ஆனதோத், ஆகிய நகரங்களையும் அதன் வெளிநிலங்களையும் பெற்றனர்.
கோகாத் கோத்திரத்தினருக்கு 13 நகரங்கள் கொடுக்கப்பட்டன.
61மற்ற கோகாத்தின் சந்ததியினர் 10 நகரங்களைப் பெற்றனர். இவை மனாசே கோத்திரத்தின் பாதி பேர்களிடம் இருந்து பெறப்பட்டன.
62கெர்சோமின் கோத்திரத்தினர் 13 நகரங்களைப் பெற்றனர். அவர்கள் அவற்றை, இசக்கார், ஆசேர், நப்தலி, பாசானில் உள்ள மனாசேயின் ஒரு பகுதி, கோத்திரத்தினரிடமிருந்தும் பெற்றுக்கொண்டனர்.
63மெராரி கோத்திரத்தினர் 12 நகரங்களைப் பெற்றனர். அவர்கள் அவற்றை ரூபன், காத், செபுலோன் ஆகிய கோத்திரங்களில் இருந்து பெற்றுக்கொண்டனர். அவர்கள் அவற்றைச் சீட்டுக் குலுக்கல் முறையில் பெற்றுக்கொண்டனர்.
64எனவே, இஸ்ரவேல் ஜனங்கள் அந்த நகரங்களையும் வயல்களையும் லேவியர்களுக்குக் கொடுத்தனர். 65அந்நகரங்கள் எல்லாம் யூதா, சிமியோன், பென்யமீன் ஆகியோர்களிடமிருந்து வந்தன. அவர்கள் இதனைச் சீட்டு குலுக்கல் மூலமே தீர்மானம் செய்தனர்.
66சில நகரங்களை எப்பிராயீம் கோத்திரத்தினர் கோகாத் ஜனங்களுக்குக் கொடுத்தனர். அந்நகரங்கள் சீட்டு குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டன. 67அவர்களுக்குச் சீகேம் எனும் நகரமும் கொடுக்கப்பட்டது. இது பாதுகாப்பான நகரம். அவர்களுக்கு கேசேரும் அதைச் சுற்றிய வெளிநிலங்களும் கொடுக்கப்பட்டன. 68அதோடு யோக்மேயாம், பேத் ஓரோன். 69ஆயலோன், காத்ரிம்மோன் ஆகிய நகரங்களையும் வெளிநிலங்களையும் பெற்றனர். அந்நகரங்கள் எப்பிராயீம் மலைநாட்டிற்குள் இருந்தன. 70மனாசே கோத்திரத்தினரின் பாதி குடும்பங்களுடைய ஆனேர் மற்றும் பீலியாம் நகரங்களை இஸ்ரவேல் ஜனங்கள் கோகாத் கோத்திரத்தினருக்கு கொடுத்தனர். அந்நகரங்களைச் சுற்றியுள்ள வெளிநிலங்களையும் கோகாத் கோத்திரத்தினர் பெற்றனர்.
மற்ற லேவிய குடும்பத்தினர் வீடுகள் பெற்றது
71கெர்சோம் குடும்பங்கள் மனாசே கோத்திரத்தின் பாதி குடும்பங்களிடமிருந்து பாசான் மற்றும் அஸ்தரோத் ஆகிய பகுதிகளிலிருந்த கோலானின் நகரங்களைப் பெற்றன. இந்நகரங்களின் சுற்று வட்டாரத்தில் உள்ள நிலங்களையும் அவர்கள் பெற்றார்கள்.
72-73கெர்சோம் கோத்திரத்தினர் கேதேஸ், தாபிராத், ராமோத், ஆனேம் ஆகிய நகரங்களையும் அவற்றின் சுற்றுப்புறத்தில் உள்ள நிலங்களையும் பெற்றனர். இவை இசக்கார் கோத்திரத்தினருக்குரியவை.
74-75கெர்சோம் கோத்திரத்தினர் மாஷால், அப்தோன், உக்கோக், ரேகோப் ஆகிய நகரங்களையும் அவற்றின் சுற்றுப்புறத்தில் உள்ள நிலங்களையும் பெற்றுக்கொண்டனர். இவை ஆசேர் கோத்திரத்தைச் சேர்ந்தது.
76கெர்சோம் கோத்திரத்தினர் கலிலேயாவிலுள்ள கேதேஸ், அம்மோன், கீரியாத்தாயீம் ஆகிய நகரங்களையும், அவற்றின் சுற்றிலுமுள்ள நிலங்களையும் பெற்றுக்கொண்டனர். இவை நப்தலி கோத்திரத்தினருக்கு உரியவை.
77மெராரியின் மற்ற ஜனங்களுக்கு ரிம்மோன், தாபோர் ஆகிய நகரங்களையும் அவற்றின் சுற்றுப்புற நிலங்களையும் பெற்றனர். இவை செபுலோன் கோத்திரத்தினருக்குரியவை.
78-79மெராரி கோத்திரத்தினர் மேலும் வனாந்திரத்திலிருந்த பேசேர் யாத்சா, கேதேமோத், மேப்பாத் ஆகிய நகரங்களையும், அவற்றைச் சுற்றியுள்ள நிலங்களையும் பெற்றனர். இவை ரூபன் கோத்திரத்தினருக்குரியவை. ரூபன் கோத்திரத்தினர், எரிகோவுக்கப் புறமுள்ள யோர்தான் ஆற்றுக்குக் கிழக்கே வாழ்ந்தனர்.
80-81மெராரி கோத்திரத்தினர் மேலும் கீலேயாத்திலுள்ள ராமோத், மக்னாயீம், எஸ்போன், யாசேர் ஆகிய நகரங்களையும், அவற்றைச் சுற்றியும் உள்ள நிலங்களையும் பெற்றனர். இவை காத் கோத்திரத்தினருக்குரியவை.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in