யோவான் எழுதிய முதலாம் கடிதம் 4
4
தவறான போதகர்களைக் குறித்து யோவானின் எச்சரிக்கை
1எனது அன்பான நண்பர்களே, இவ்வுலகில் பல தவறான போதகர்கள் இப்போது வாழ்கிறார்கள். எனவே எல்லா ஆவிகளையும் நம்பாதீர்கள். தேவனிடமிருந்து வந்தவையா எனப் பார்ப்பதற்கு அந்த ஆவிகளை சோதித்துப் பாருங்கள். 2தேவனின் ஆவியை அறியும் வகை இதுவே ஆகும். ஓர் ஆவி, “இயேசு பூமிக்கு வந்து மனிதனான கிறிஸ்து என்பதை நான் நம்புகிறேன்” என்று கூறும். அந்த ஆவி தேவனிடமிருந்து வந்தது. 3இன்னோர் ஆவி இயேசுவைக் குறித்து இவ்வாறு கூற மறுக்கிறது, இது தேவனிடமிருந்து வந்த ஆவி அல்ல. போலி கிறிஸ்து வந்துகொண்டிருப்பதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். இப்போது போலி கிறிஸ்து ஏற்கெனவே உலகில் வந்திருக்கிறான்.
4எனது அன்பான பிள்ளைகளே, நீங்கள் தேவனுக்குச் சொந்தமானவர்கள். எனவே நீங்கள் அவர்களை வெற்றிகொண்டிருக்கிறீர்கள். ஏன்? உங்களில் இருப்பவர் உலகத்து மக்களில் இருப்பவனைக் காட்டிலும் பெரியவர். 5அம்மக்களோ உலகத்தைச் சேர்ந்தவர்கள். எனவே அவர்கள் கூறுபவை உலகத்திற்குரியவை. அவர்கள் கூறுவதை உலகம் கேட்கிறது. 6ஆனால் நாம் தேவனுக்குரியவர்கள். எனவே தேவனை அறிந்த மக்கள் நம் பேச்சைக் கேட்கிறார்கள். ஆனால் தேவனிடமிருந்து வராத மக்கள் நம் பேச்சைக் கேட்பதில்லை. இப்படித் தான் உண்மையான ஆவியானவரையும், பொய்யான பிற ஆவிகளையும் தெரிந்துகொள்கிறோம்.
அன்பு தேவனிடமிருந்து வருகிறது
7அன்பான நண்பர்களே, தேவனிடமிருந்து அன்பு வருவதால் நாம் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும். பிறரை நேசிக்கிறவன் தேவனின் பிள்ளையாயிருக்கிறான். எனவே பிறரை நேசிக்கிறவன் தேவனை அறிகிறான். 8பிறரை நேசிக்காதவன் தேவனை அறியமாட்டான். ஏனெனில் தேவன் அன்பாயிருக்கிறார். 9தேவன் அவரது ஒரே குமாரனை அவர் மூலமாக நமக்கு வாழ்வளிக்கும் பொருட்டு இவ்வுலகத்திற்கு அனுப்பினார். தேவன் தன் அன்பை இவ்விதம் நமக்குப் புலப்படுத்தினார். 10தேவன் நம்மிடம் காட்டும் அன்பே உண்மையான அன்பாகும். நாம் தேவனிடம் காட்டும் அன்பல்ல. தேவன் நமது பாவங்களை நீக்கும் வழியாக அவரது குமாரனை அனுப்பினார்.
11அன்பான நண்பர்களே, தேவன் நம்மை இவ்வளவு அதிகமாக நேசித்தார்! எனவே நாமும் ஒருவரையொருவர் நேசிக்கவேண்டும். 12எந்த மனிதனும் தேவனைக் கண்டதில்லை. ஆனால் நாம் ஒருவரையொருவர் நேசித்தால், அப்போது தேவன் நம்மில் வசிப்பார். நாம் ஒருவரையொருவர் நேசித்தால் அப்போது தேவனின் அன்பு அதன் குறிக்கோளை அடைகிறது. அது நம்மில் முழுமை பெறுகிறது.
13நாம் தேவனிலும் தேவன் நம்மிலும் வாழ்வதை அறிந்திருக்கிறோம். தேவன் நமக்கு அவரது ஆவியானவரைக் கொடுத்ததால் நாம் இதனை அறிகிறோம். 14தேவன் குமாரனை இவ்வுலகின் மீட்பராக அனுப்பினார் என்பதை நாம் கண்டிருக்கிறோம். இப்போது மக்களுக்கு அதையே நாம் கூறுகிறோம். 15ஒரு மனிதன், “இயேசு தேவனின் குமாரன் என்பதை நம்புகிறேன்” என்று சொன்னால் அப்போது தேவன் அம்மனிதனில் வாழ்கிறார். அம்மனிதனும் தேவனில் வாழ்கிறான். 16தேவன் நமக்காகக் கொண்டுள்ள அன்பை அதனால் அறிகிறோம். அந்த அன்பை நாம் நம்புகிறோம்.
தேவன் அன்பாக இருக்கிறார். அன்பில் வாழ்கிற மனிதன் தேவனில் வாழ்கிறான். தேவனும் அம்மனிதனில் வாழ்கிறார். 17தேவனின் அன்பு நம்மில் முழுமையடைந்தால், தேவன் நம்மை நியாயந்தீர்க்கும் நாளில் நாம் அச்சமின்றி இருக்க முடியும். இவ்வுலகில் நாம் அவரைப்போல இருப்பதால், நாம் அச்சமில்லாமல் இருப்போம். 18தேவனின் அன்பு எங்கே இருக்கிறதோ, அங்கே அச்சம் இருக்காது. ஏன்? தேவனின் முழுமையான அன்பு அச்சத்தை அகற்றுகிறது. தேவன் தரும் தண்டனையே ஒருவனை அச்சுறுத்துகிறது. எனவே அச்சமுள்ள மனிதனிடம் தேவனின் அன்பு முழுமை பெறவில்லை.
19முதலில் தேவன் நம்மை நேசித்ததால், நாம் நேசிக்கிறோம். 20ஒருவன், “நான் தேவனை நேசிக்கிறேன்” என்று கூறியும், அம்மனிதன் கிறிஸ்துவில் அவனது சகோதரனையோ, சகோதரியையோ வெறுத்தால் அப்போது அம்மனிதன் பொய்யன் ஆகிறான். அம்மனிதன் தான் காண்கிற சகோதரனை நேசிப்பதில்லை. எனவே அவன் ஒருபோதும் கண்டிராத தேவனை நேசிக்க இயலாது. 21தேவனை நேசிக்கிற ஒருவன் அவனது சகோதரனையும் நேசிக்க வேண்டும் என்பதே அவர் நமக்கு வழங்கிய கட்டளை ஆகும்.
Currently Selected:
யோவான் எழுதிய முதலாம் கடிதம் 4: TAERV
Highlight
Share
Copy
![None](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapistaging.com%2F58%2Fhttps%3A%2F%2Fweb-assets.youversion.com%2Fapp-icons%2Fen.png&w=128&q=75)
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International