தெசலோனிக்கேயருக்கு எழுதிய முதலாம் கடிதம் 5
5
கர்த்தரின் வருகைக்காகத் தயாராகுங்கள்
1சகோதர சகோதரிகளே, இப்பொழுது இவை நடக்கும் காலத்தையும் தேதியையும் எழுதத் தேவை இல்லை. 2கர்த்தர் வரும் நாள் இரவில் திருடன் திடீரென்று வருவது போல் ஆச்சரியமாக இருக்கும் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். 3“நாங்கள் சமாதானத்தோடும், பாதுகாப்போடும் இருக்கிறோம்” என்று மக்கள் சொல்வார்கள். அப்பொழுது அவர்களுக்கு அழிவு திடீரென வரும். அவ்வழிவு கர்ப்பவதியின் பிரசவ வேதனை போன்று திடீரென வரும். அவர்கள் தப்பமுடியாது.
4ஆனால் நீங்கள் இருட்டில் வாழவில்லை. எனவே திருடனைப்போல அந்த நாள் உங்களுக்கு ஆச்சரியத்தைத் தராது. 5நீங்கள் யாவரும் வெளிச்சத்தைச் சேர்ந்தவர்கள், நீங்கள் பகலுக்குரியவர்கள். நாம் இருளைச் சேர்ந்தவர்கள் இல்லை. நாம் இரவுக்குரியவர்களும் இல்லை. 6எனவே நாம் ஏனைய மக்களைப்போன்று இருக்கக் கூடாது. நாம் தூங்கிக்கொண்டிருக்கக் கூடாது. விழிப்புடனும், சுயகட்டுப்பாட்டுடனும் இருக்கவேண்டும். 7தூங்கும் மக்கள் இரவுப்பொழுதில் தூங்குவார்கள். குடித்து வெறிகொள்பவர்கள் இரவுப் பொழுதில் குடிப்பார்கள். 8ஆனால் நாம் பகலுக்குரியவர்கள். எனவே நம்மை நாமே கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். நம்மைக் காத்துக்கொள்வதற்காக விசுவாசம், அன்பு என்னும் மார்புக் கவசத்தை அணிந்துகொள்வோம். நம் தலைக்கவசமாய் இட்சிப்பின் நம்பிக்கை அமையும்.
9தேவன் தம் கோபத்தை நம்மேல் காட்டுவதற்காக நம்மைத் தேர்ந்தெடுக்கவில்லை. நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் இட்சிப்பு அடையவே தேர்ந்தெடுத்தார். 10அவரோடு நாம் அனைவரும் இணைந்து வாழும்பொருட்டு, நமக்காக அவர் இறந்தார். எனவே, இயேசு வரும்போது, நாம் உயிருடன் இருக்கிறோமோ அல்லது இறந்துபோவோமா என்பது முக்கியமில்லை. 11எனவே ஒருவருக்கொருவர் ஆறுதலாய் இருங்கள். மேலும் நீங்கள் செய்துகொண்டிருப்பது போல ஒருவரையொருவர் பலப்படுத்துங்கள்.
இறுதி அறிவிப்புகளும், வாழ்த்துக்களும்
12சகோதர சகோதரிகளே! உங்களோடு கடுமையாய் உழைப்பவர்களுக்கு மதிப்பளியுங்கள். கர்த்தருக்குள் அவர்களே உங்கள் தலைவர்கள். ஆத்தும அளவில் அவர்களே உங்களுக்கு வழிகாட்டுகிறார்கள். 13அவர்கள் செய்துகொண்டிருக்கிற செயலுக்காக அவர்களை அன்போடு மதியுங்கள்.
ஒருவருக்கொருவர் சமாதானமாய் வாழுங்கள். 14சகோதர சகோதரிகளே! உழைக்காத மக்களை எச்சரிக்கை செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்கிறோம். அஞ்சுகிறவர்களை உற்சாகப்படுத்துங்கள். பலவீனமானவர்களுக்கு உதவுங்கள். எல்லாரிடமும் பொறுமையாய் இருங்கள். 15ஒருவரும் தீமைக்குத் தீமை செய்யாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். ஒருவருக்கொருவர் எப்பொழுதும் நன்மை செய்துகொள்ளவும் எல்லாருக்கும் நன்மை செய்யவும் முயலுங்கள்.
16எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருங்கள். 17பிரார்த்தனை செய்வதை நிறுத்தாதீர்கள். 18தேவனுக்கு எப்பொழுதும் நன்றி செலுத்துங்கள். இயேசு கிறிஸ்துவில் இதையே உங்களிடம் தேவன் விரும்புகிறார்.
19பரிசுத்தாவியானவருக்கான வேலையை நிறுத்தாதீர்கள். 20தீர்க்கதரிசனங்களை முக்கியமற்ற ஒன்றாக எண்ணாதீர்கள். 21ஆனால் எல்லாவற்றையும் சோதித்து அறியுங்கள். நல்லவற்றை வைத்துக்கொள்ளுங்கள். 22எல்லா வகையான தீமைகளில் இருந்தும் விலகி இருங்கள்.
23சமாதானத்தின் தேவன்தாமே உங்களை முழுமையாகப் பரிசுத்தமாக்கும் பொருட்டு தேவனிடம் பிரார்த்தனை செய்கிறோம். நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரும்போது உங்கள் ஆவி, ஆன்மா, சரீரம் முழுவதும் குற்றமில்லாததாய் இருக்கும்படி காக்கப்படுவதாக. 24உங்களை அழைக்கிற தேவன் இவற்றை உங்களுக்குச் செய்வார். அவரை நம்புங்கள்.
25சகோதர சகோதரிகளே! எங்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். 26நீங்கள் சந்திக்கும்போது ஒருவரையொருவர் பரிசுத்தமாக முத்தமிட்டுக்கொள்ளுங்கள் 27அனைத்து சகோதர சகோதரிகளிடமும் இந்த நிருபம் வாசிக்கப்பட வேண்டும் என்று உங்களுக்கு கர்த்தரின் அதிகாரத்தால் ஆணையிட்டுக் கூறுகிறேன். 28நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களுடன் இருப்பதாக!
Currently Selected:
தெசலோனிக்கேயருக்கு எழுதிய முதலாம் கடிதம் 5: TAERV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International