YouVersion Logo
Search Icon

நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 14

14
1அபியா தன் முற்பிதாக்களோடு சேர்க்கப்பட்டான். ஜனங்கள் அவனை தாவீதின் நகரத்திலே அடக்கம் செய்தனர். பிறகு அபியாவின் குமாரனான ஆசா புதிய ராஜாவானான். ஆசாவின் காலத்தில் நாட்டில் பத்தாண்டு காலம் சமாதானம் இருந்தது.
யூத ராஜாவாகிய ஆசா
2ஆசா தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நல்லனவற்றையும், சரியானவற்றையும் செய்தான். 3ஆசா அந்நிய தெய்வங்களின் பலிபீடங்களையும், மேடைகளையும் அகற்றினான். சிலைகளை உடைத்தான். விக்கிரகத் தோப்புகளை அழித்தான். 4யூத ஜனங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றும்படி கட்டளையிட்டான். அவரே நம் முற்பிதாக்களால் ஆராதிக்கப்பட்ட தேவன். அவரது கட்டளைகளையும், சட்டங்களையும் கைக்கொள்ள வேண்டும் என்றான். 5ஆசா யூதா நாட்டிலுள்ள அனைத்து நகரங்களிலும் அமைக்கப்பட்ட மேடைகளையும், நறுமணப் பொருட்கள் எரிக்கப்படும் பலிபீடங்களையும் அகற்றினான். எனவே ஆசா ராஜாவாக இருந்த காலத்தில் அவனது அரசு சமாதானமாக இருந்தது. 6இந்த சமாதானமான காலத்தில் ஆசா யூதா நாட்டில் பலமிக்க நகரங்களை உருவாக்கினான். இக்கால கட்டத்தில் ஆசா எந்தவிதமான போரிலும் ஈடுபடவில்லை. ஏனென்றால் கர்த்தர் அவனுக்கு சமாதானத்தைக் கொடுத்தார்.
7ஆசா யூத ஜனங்களிடம், “இந்த நகரங்களை உருவாக்கி இவற்றைச் சுற்றி சுவர்களை எழுப்புவோம். கோபுரங்களையும், வாசல்களையும், வாசல்களுக்குத் தாழ்ப்பாள்களையும் அமைப்போம். இந்த நாட்டில் நாம் இன்னும் வாழ்ந்துக்கொண்டிருக்கின்ற காலத்தில் இதைச் செய்வோம். இந்நாடு நமக்குரியது. ஏனென்றால் நாம் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றுகிறோம். அவர் நம்மைச் சுற்றிலும் சமாதானத்தை உருவாக்கினார்” என்றான். எனவே அவர்கள் அவ்வாறே கட்டினார்கள். தம் செயல்களில் வெற்றி பெற்றனர்.
8ஆசாவின் படையில் 3,00,000 பேர் கொண்ட படை யூதா கோத்திரத்திலிருந்தும், 2,80,000 பேர் கொண்ட படைக்குழு பென்யமீனின் கோத்திரத்திலிருந்தும் சேர்ந்திருந்தனர். யூத வீரர்கள் பெரிய கேடயங்களையும் ஈட்டிகளையும் சுமந்துவந்தனர். பென்யமீன் வீரர்கள் சிறிய கேடயங்களையும் வில்லம்புகளையும் தாங்கினார்கள். இவர்கள் அனைவரும் தைரியமும் பலமும் மிக்க வீரர்கள்.
9அப்போது ஆசாவின் படைகளுக்கு எதிராகச் சேரா என்பவன் கிளம்பினான். சேரா எத்தியோப்பியன். அவனிடம் 10,00,000 வீரர்களும் 300 இரதங்களும் இருந்தன. அவனது படை மரேசாவரை வந்தது. 10ஆசா சேராவுக்கு எதிராகப் போரிடவந்தான். மரேசாவில் உள்ள செப்பத்தா என்னும் பள்ளத்தாக்கிலே ஆசாவின் படை வீரர்கள் போரிடத் தயாராக இருந்தனர்.
11ஆசா தனது தேவனாகிய கர்த்தரை அழைத்து, “கர்த்தாவே, பலமானவர்களை எதிர்க்கும் பலவீனர்களுக்கு உதவ உம்மால் தான் முடியும்! எங்களுக்கு உதவும்! எங்கள் தேவனாகிய கர்த்தாவே! நாங்கள் உம்மையேச் சார்ந்துள்ளோம். உமது பேரால் இப்பெரும் படையோடு போரிடப்போகிறோம். கர்த்தாவே, நீர் எங்கள் தேவன். உமக்கு எதிராக எவரையும் வெல்லும்படிவிடாதீர்!” என்றான்.
12பிறகு கர்த்தர் எத்தியோப்பியா படையை வெல்ல ஆசாவின் படையைப் பயன்படுத்தினார். எத்தியோப்பியா படையினர் ஓடிப்போயினர். 13ஆசாவின் படையினர் எத்தியோப்பியா படையினரைக் கேரார் வரை விரட்டிக்கொண்டு சென்றனர். எத்தியோப்பியா வீரர்கள் மீண்டும் கூடிப் போரிட முடியாதபடி கொல்லப்பட்டனர். கர்த்தராலும் அவரது படையினராலும் நசுக்கப்பட்டனர். பகைவரிடமிருந்து ஆசாவும், அவனது படையினரும் விலையுயர்ந்த பொருட்களைக் கைப்பற்றிக்கொண்டனர். 14ஆசாவும், அவனது படையினரும் கேரார் அருகிலுள்ள அனைத்து நகரங்களையும் தோற்கடித்தனர். அந்நகரங்களில் வாழ்ந்த ஜனங்கள் கர்த்தருக்கு பயந்தார்கள். அந்நகரங்களில் ஏராளமாக விலையுயர்ந்தப் பொருட்கள் இருந்தன. அவற்றிலிருந்து ஆசாவின் படையினர் அந்த விலையுயர்ந்த பொருட்களை அள்ளிக்கொண்டு வந்தார்கள். 15ஆசாவின் படை மேய்ப்பர்களின் கூடாரங்களையும் தாக்கியது. அவர்கள் அங்கிருந்த நிறைய வெள்ளாடுகளையும், ஒட்டகங்களையும் கவர்ந்தனர். பிறகு ஆசாவின் படையினர் எருசலேமிற்குத் திரும்பிச் சென்றனர்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 14