YouVersion Logo
Search Icon

நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 17

17
யூதாவின் ராஜாவாகிய யோசபாத்
1யூதாவின் புதிய ராஜாவாக ஆசாவின் இடத்திலே அவனது குமாரனான யோசபாத் ஆனான். இவன் யூதாவை பலமுள்ளதாக ஆக்கினான். இஸ்ரவேலை எதிர்த்துப் போரிடும் அளவுக்கு அவன் யூதாவை பலப்படுத்தினான். 2அவன் யூதாவின் அனைத்து நகரங்களிலும் படை வீரர்கள் அடங்கிய குழுக்களை நிறுத்தினான். அந்நகரங்கள் எல்லாம் யூதாவிலும், அவன் தந்தையால் கைப்பற்றப்பட்ட எப்பிராயீம் நகரங்களிலும் யோசபாத் கோட்டைகளைக் கட்டினான்.
3கர்த்தர் யோசாபாத்தோடு இருந்தார். ஏனென்றால் இவனது சிறுவயதில் இவன் தன் முற்பிதாவான தாவீதைப்போன்று நற்செயல்களைச் செய்தான். இவன் பாகால் விக்கிரகங்களைப் பின்பற்றவில்லை. 4யோசபாத் தன் முற்பிதாக்களைப்போன்றே தேவனைப் பின்பற்றினான். அவன் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தான். இவன் இஸ்ரவேல் ஜனங்களைப்போன்று வாழ்க்கை நடத்தவில்லை. 5யோசபாத்தை யூதாவின் பலம் பொருந்திய ராஜாவாக கர்த்தர் ஆக்கினார். யூதாவிலுள்ள அனைத்து ஜனங்களும் அவனுக்கு அன்பளிப்புக்களைக் கொண்டு வந்தனர். இதனால் யோசபாத் பெருஞ் செல்வமும் பெருமையும் அடைந்தான். 6யோசபாத்தின் மனம் கர்த்தருடைய வழியில் மகிழ்ச்சியைக் கண்டது. அவன் யூதா நாட்டில் மேடைகளை அகற்றினான். விக்கிரகங்களையும் அழித்தான்.
7யோசபாத் தன் தலைவர்களை யூத நகரங்களில் கற்பிக்கச் செய்தான். இவை இவனது மூன்றாவது ஆட்சியாண்டில் நடந்தது. பென்னாயில், ஒபதியா, சகரியா, நெதனெயேல், மிகாயா, ஆகியோர் இவனால் அனுப்பப்பட்ட தலைவர்கள். 8இவர்களோடு லேவியர்களையும் அனுப்பினான். லேவியர்களில் செமாயா, நெதனியா, செபதியா, ஆசகேல், செமிராமோத், யோனத்தான், அதோனியா, தொபியா, தோபத்தோனியா ஆகியோர் இருந்தனர். இவர்களோடு ஆசாரியர்களில் எலிஷாமா, யோராம் ஆகியோரையும் அனுப்பினான். 9இவர்கள் யூதாவிலுள்ள ஜனங்களுக்குப் போதித்தனர். அவர்களிடம் கர்த்தருடைய சட்டபுத்தகம் இருந்தது. அவர்கள் யூதாவின் அனைத்து நகரங்களுக்கும் சென்று அதனைப் போதித்தனர்.
10யூதாவின் அருகிலுள்ள மற்ற நாட்டினரும் கர்த்தருக்குப் பயந்தனர். எனவே அவர்கள் யோசபாத்துக்கு எதிராகப் போரைத் தொடங்காமல் இருந்தனர். 11சில பெலிஸ்திய ஜனங்களும் யோசபாத்துக்கு அன்பளிப்புகளைக் கொண்டுவந்தார்கள். அவர்கள் யோசபாத்துக்கு வெள்ளியையும் கொண்டுவந்தார்கள். ஏனென்றால், அவன் ஒரு வலிமைமிக்க அரசனென்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். சில அரபியர்கள் ஆடுகளைக் கொடுத்தனர். அவர்கள் 7,700 ஆட்டுக் கடாக்களையும், 7,700 வெள்ளாட்டுக் கடாக்களையும் கொடுத்தனர்.
12யோசபாத் மிக பலமுள்ளவனாக ஆனான். அவன் கோட்டைகளையும், பொருட்கள் வைப்பதற்கான கருவூலங்களையும் யூதாவில் கட்டினான். 13யூதா நகரங்களில் பொருட்களை விநியோகம் செய்தான். எருசலேமில் யோசபாத் பயிற்சி மிக்க படைவீரர்களை வைத்திருந்தான். 14இவ்வீரர்கள் தம் கோத்திரங்களின்படி பட்டியலிடப்பட்டனர். இதுதான் அவர்கள் விபரம்:
யூதாவிலே ஆயிரத்துக்கு அதிபதிகளில் அத்னா தலைவனாக இருந்தான். 3,00,000 வீரர்களுக்கு அவன் தளபதியாக இருந்தான்.
15யோகனான் எனும் தளபதியிடம் 2,80,000 வீரர்கள் இருந்தனர்.
16அமசியா எனும் தளபதியிடம் 2,00,000 வீரர்கள் இருந்தனர். அமசியா சிக்ரியின் குமாரன். அமசியா, தன்னை கர்த்தருடைய சேவையில் ஈடுபடுத்துவதில் மகிழ்ச்சியடைந்தான்.
17பென்யமீனின் கோத்திரத்தில் இருந்து பின்வரும் சேனாதிபதிகள் இருந்தனர். எலியாதாவிடம் 2,00,000 வீரர்கள் இருந்தனர். இவர்கள் வில், அம்பு, கேடயம் ஆகியவற்றைப் பயன்படுத்தினார்கள். எலியாதா மிகப் பலம் பொருந்திய வீரன்.
18யோசபாத்திடம் 1,80,000 வீரர்கள் போருக்குத் தயாரானவர்களாக இருந்தனர்.
19அனைவரும் யோசபாத் ராஜாவுக்குச் சேவைச் செய்துவந்தனர். ராஜாவுக்கு யூத நாட்டு கோட்டைகளில் பணிசெய்ய வேறு வீரர்களும் இருந்தனர்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 17