YouVersion Logo
Search Icon

நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 31

31
எசேக்கியா ராஜா செய்த முன்னேற்றங்கள்
1பஸ்கா பண்டிகை முடிவடைந்தது. இஸ்ரவேல் ஜனங்கள் எருசலேமிலிருந்து பஸ்கா முடிந்ததும் யூதாவின் ஊர்களுக்கு வெளியேறினார்கள். அந்த நகரங்களில் இருந்த பொய்த் தெய்வங்களின் விக்கிரகங்களை நொறுக்கினார்கள். அவை பொய்த் தெய்வங்களை தொழுதுகொள்வதற்கான இடங்களாயிருந்தன. அவர்கள் விக்கிரகத் தோப்புகளை அழித்தனர். அதோடு மேடைகளையும் பலிபீடங்களையும் அழித்தனர். யூதா மற்றும் பென்யமீன் நாட்டில் தொழுகை இடங்களையும் பலி பீடங்களையும் அழித்தனர். ஜனங்கள் இல்லத்திலேயே எப்பிராயீம் மற்றும் மனாசே நாடுகளிலும் பொய்யான தெய்வங்களை தொழுதுகொள்வதற்கு பயன்படுத்தப்பட்ட எல்லாப் பொருட்களையும் அழிக்கும்வரைக்கும் ஜனங்கள் இவற்றைச் செய்தார்கள். பின்னர் எல்லா இஸ்ரவேலர்களும் தங்கள் ஊர்களிலுள்ள வீடுகளுக்குத் திரும்பிச் சென்றனர்.
2ஆசாரியர்களும், லேவியர்களும் குழுக்களாகப் பிரிக்கப்பட்டார்கள். ஒவ்வொரு குழுவுக்கும் சிறப்பான பணி இருந்தது. எனவே எசேக்கியா ராஜா இக்குழுவினர்களிடம் தம் வேலைகளை மீண்டும் செய்யுமாறு கூறினான். எனவே லேவியர்களும், ஆசாரியர்களும் தகனபலிகள் மற்றும் சமாதானப் பலிகள் கொடுக்கும் வேலையைச் செய்தனர். கர்த்தருடைய ஆலயத்தின் வாசலில் தேவனைத் துதித்துப் பாடுவது என்றும் ஆலயத்தில் சேவைசெய்வது என்றும் நியமித்தான் ராஜா. 3எசேக்கியா தனது சொந்த மிருகங்களையும் தகனபலி இடுவதற்காகத் தந்தான். இம்மிருகங்கள் தினந்தோறும் காலை, மாலை வேளைகளில் செலுத்தப்படும் தகன பலிகளுக்குப் பயன்பட்டன. இம்மிருகங்கள் ஓய்வு நாட்களிலும் பிறைச் சந்திரநாள் பண்டிகைகளிலும் மற்ற சிறப்புக் கூட்டங்களிலும் சர்வாங்க தகன பலிகள் செலுத்த பயன்பட்டன. இவை கர்த்தருடைய சட்டத்தில் எழுதப்பட்டபடியே நடந்தேறின.
4ஜனங்கள் தம் அறுவடையிலும் மற்ற பொருட்களிலும் ஒரு பகுதியை ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று இருந்தது. எனவே எசேக்கியா ராஜா எருசலேம் நகர ஜனங்களிடம் தம் பங்கை அளிக்குமாறு கட்டளையிட்டான். இவ்வாறு ஆசாரியர்களும், லேவியர்களும் தங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று சட்ட நெறிகளின்படி விதிக்கப்பட்டுள்ளதோ அவ்வாறு செய்வதிலேயே தன் வாழ்நாளைச் செலவு செய்தனர். 5நாடு முழுவதிலும் உள்ள ஜனங்கள் இந்த கட்டளையைக் கேள்விப்பட்டார்கள். எனவே இஸ்ரவேல் ஜனங்கள் முதல் பஸ்காவுக்காக தமது அறுவடை, திராட்சை, எண்ணெய், தேன், வயலில் விளைந்த மற்றபொருட்கள் ஆகியவற்றில் பத்தில் ஒரு பங்கைக் கொடுத்தனர். 6யூதாவின் ஊர்களில் வசித்த இஸ்ரவேல் மற்றும் யூதாவின் ஆண்கள் தமது கால் நடைகளிலும் செம்மறி ஆடுகளிலும் பத்தில் ஒரு பங்கைக் கொண்டு வந்தனர். மேலும் கர்த்தருக்காக மட்டும் என்று ஒரு சிறப்பான இடத்தில் வைத்திருந்த பொருட்களில் பத்தில் ஒரு பங்கையும் அவர்கள் கொண்டுவந்தார்கள். இவை அனைத்தையும் இவர்கள் தமது தேவனாகிய கர்த்தருக்குக் கொடுத்தனர். அவர்கள் இவற்றைக் குவியலாக வைத்தனர்.
7இக்குவியல்களை அவர்கள் மூன்றாம் மாதத்தில் (மே/ஜுன்) தொடங்கி ஏழாவது மாதத்தில் (செப்டம்பர்/அக்டோபர்) முடித்தனர். 8எசேக்கியாவும் தலைவர்களும் வந்த போது தொகுக்கப்பட்ட குவியல்களைக் கண்டனர். அவர்கள் கர்த்தரையும் அவரது ஜனங்களாகிய இஸ்ரவேல் ஜனங்களையும் போற்றினார்கள்.
9பிறகு எசேக்கியா ஆசாரியர்களிடமும் லேவியர்களிடமும் குவியல்களைப்பற்றி விசாரித்தான். 10சாதோக்கின் குடும்பத்தை சேர்ந்த தலைமை ஆசாரியனாகிய அசரியா என்பவன் எசேக்கியா ராஜாவிடம், “ஜனங்கள் கர்த்தருடைய ஆலயத்திற்குக் காணிக்கை பொருட்களைக் கொண்டுவரத் தொடங்கிய நாள் முதல் எங்களுக்கு உணவு ஏராளமாய் உள்ளது. நாங்கள் எவ்வளவுதான் அதிகமாக தின்றாலும் ஏராளமாக மிகுதியாக உள்ளது. கர்த்தர் உண்மையாகவே தம் ஜனங்களை ஆசீர்வதித்துள்ளார். அதனால் தான் இவ்வளவு மீதியாக உள்ளது.” என்று பதில் சொன்னான்.
11பின்னர் எசேக்கியா கர்த்தருடைய ஆலயத்திற்காக பண்டகச்சாலைகளை அமைக்க கட்டளையிட்டான். அவ்வாறே ஆயிற்று. 12பிறகு ஆசாரியர்கள் காணிக்கைகளையும், பத்தில் ஒரு பாகத்தையும் கர்த்தருக்கு மட்டுமே கொடுப்பதற்கென்று இருந்த மற்றப் பொருட்களையும் எடுத்து வைத்தார்கள். இவ்வாறு சேகரிக்கப்பட்ட அனைத்தும் ஆலயத்தின் சேமிப்பு அறையில் வைக்கப்பட்டது. இவற்றிற்கு பொறுப்பாளனாக கொனனியா என்ற லேவியன் இருந்தான். அவனது தம்பியாகிய சிமேயு இரண்டாவது நிலை பொறுப்பாளனாக இருந்தான். 13கொனனியாவும் அவனது தம்பி சிமேயியும் யெகியேல், அசசியா, நாகாத், ஆசகேல், யெரிமோத், யோசபாத், ஏலியேல், இஸ்மகியா, மாகாத், பெனாயா ஆகியோர் மேற்பார்வை செய்தனர். எசேக்கியா ராஜாவும் அசரியா எனும் தேவனுடைய ஆலய அதிகாரியும் இவர்களைத் தேர்ந்தெடுத்தனர்.
14தேவனுக்கு ஜனங்கள் தாராளமாய்க் கொடுக்கப்பட்ட காணிக்கைகளுக்குக் கோரே பொறுப்பாளியாக இருந்தான். கர்த்தருக்குப் பரிசுத்தமாக்கப்பட்ட காணிக்கைகளைத் திருப்பி விநியோகிக்கும் பொறுப்பும் அவனுக்கு இருந்தது. கோரே கிழக்கு வாசலுக்குக் காவல்காரனாக இருந்தான். லேவியனாகிய இம்னா என்பவன் அவனது தந்தை ஆவான். 15ஏதோன், மின்யமீன், யெசுவா, செமாயா, அமரியா, செக்கனியா ஆகியோர் கோரேவுக்கு உதவியாக இருந்தனர். ஆசாரியர்கள் வாழ்ந்துக்கொண்டிருக்கும் நகரங்களில் இவர்கள் உண்மையுடன் சேவைசெய்தனர். இவர்கள் வசூலித்த பொருட்களைத் தம் உறவினர்களுக்கும், ஒவ்வொரு ஆசாரியர் குழுவுக்கும் கொடுத்தார்கள். அதே அளவு பொருட்களை அவன் முக்கியம் உள்ளவர்களுக்கும், முக்கியம் இல்லாதவர்களுக்கும் கொடுத்தான்.
16இவர்கள் வசூலிக்கப்பட்ட பொருட்களை, லேவியர் குடும்ப வரலாறுகளில் தம் பெயர்களைக் கொண்டுள்ள மூன்றும் அதற்கு மேற்பட்ட வயதும் கொண்ட ஆண்களுக்குக் கொடுத்தான். இந்த ஆடவர்கள் அனைவரும் தங்கள் பொறுப்பிலுள்ள வேலைகளைச் செய்வதற்காக தினசரி சேவைக்காகக் கர்த்தருடைய ஆலயத்திற்குள் நுழையவேண்டியிருந்தது. ஒவ்வொரு லேவியக் குழுவினருக்கும் அவர்களுக்கென்று பொறுப்புகள் இருந்தன. 17வசூலில் ஒரு குறிப்பிட்டப் பங்கானது ஆசாரியர்களுக்கும் கொடுக்கப்பட்டது. குடும்ப வரலாறுகளில் பட்டியலின்படி வரிசைக்கிரமமாக ஒவ்வொரு குடும்பமும் இப்படி கொடுத்தது. இருபதும் அதற்கு மேற்பட்ட வயதும் கொண்ட லேவியர்களுக்கு பங்கு கொடுக்கப்பட்டது. இவை அனைத்தும் அவரவரது குழுவின் படியும் பொறுப்பின்படியும் கொடுக்கப்பட்டது. 18லேவியர்களின் குழந்தைகள், மனைவியர், குமாரர்கள், குமாரத்திகள் ஆகியோரும் தங்கள் பங்கினைப் பெற்றனர். இது அனைத்து லேவியர்களுக்கும் அவர் தம் குடும்ப வரலாற்று பட்டியலின்படியே கொடுக்கப்பட்டது. ஏனென்றால் லேவியர்கள் நம்பிக்கை உள்ளவர்களாகவும் எப்பொழுதும் தம்மை பரிசுத்தமாக வைத்துக்கொள்பவர்களாகவும் சேவைக்குத் தயாரானவர்களாகவும் இருந்தனர்.
19ஆசாரியர்களாகிய ஆரோனின் சந்ததியினர்களில் சிலர் லேவியர்கள் குடியிருக்கிற நகரங்களின் அருகில் வயல்களை வைத்திருந்தனர். நகரங்களில் ஆரோனின் சந்ததியினர் மேலும் சிலர் வாழ்ந்தனர். இவர்களின் பெயர்களைத் தேர்ந்தெடுத்து இந்த ஆரோனின் சந்ததியினருக்கும் அவர்களுக்குரிய பங்குப் பொருள்கள் கொடுக்கப்பட்டது. லேவியர்களில் அனைத்து ஆண்பிள்ளைகளுக்கும் அட்டவணையில் எழுதப்பட்டவர்களுக்கும் பங்கு கொடுக்கப்பட்டது.
20யூதா முழுவதிலும் இத்தகைய நல்லச் செயல்களை எசேக்கியா ராஜா செய்தான். அவன் தனது தேவனாகிய கர்த்தருக்கு முன் எது நல்லதோ, எது சரியானதோ, எது உண்மையுள்ளதோ அவற்றைச் செய்தான். 21அவன் தொடங்கிய அனைத்து வேலைகளிலும் வெற்றிகரமாய்த் திகழ்ந்தான். தேவனுடைய ஆலய சேவையிலும் சட்டத்திற்கும் கட்டளைகளுக்கும் அடிபணிகிற செயலிலும் தேவனைப் பின்பற்றும் முறையிலும் வெற்றிகரமாய்த் திகழ்ந்தான். எசேக்கியா இவற்றையெல்லாம் தன் முழு இருதயத்தோடு செய்தான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 31