YouVersion Logo
Search Icon

நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 5

5
1பிறகு கர்த்தருடைய ஆலயத்திற்காக சாலொமோன் செய்யவேண்டிய வேலையெல்லாம் முடிக்கப்பட்டது. ஆலயத்திற்காக தாவீது தந்த பொருட்களையெல்லாம் சாலொமோன் கொண்டு வந்தான். பொன்னாலும் வெள்ளியாலும் செய்யப்பட்ட அனைத்துப் பொருட்களையும் மேஜை நாற்காலிகளையும் கொண்டுவந்து தேவனுடைய ஆலயத்தில் கருவூலத்தின் அறைகளில் வைத்தான்.
பரிசுத்தப் பெட்டி ஆலயத்திற்குள் கொண்டு வரப்படுகிறது
2இஸ்ரவேலில் இருக்கிற மூத்தவர்களையும், எல்லாக் கோத்திரங்களின் தலைவர்களையும், குடும்பத் தலைவர்களையும் சாலொமோன் எருசலேமில் ஒன்றாகக் கூட்டினான். தாவீதின் நகரிலிருந்து கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவரவே இவ்வாறு செய்தான். சீயோன் தாவீதின் நகரமாகும். 3இஸ்ரவேலின் அனைத்து ஆட்களும் சாலொமோனுடன் அடைக்கல கூடாரப் பண்டிகை விருந்தில் கூடினார்கள். இவ்விருந்து ஏழாவது மாதத்தில் (செப்டம்பர்) நடைபெற்றது.
4இஸ்ரவேலின் மூப்பர்கள் அனைவரும் கூடியதும் லேவியர்கள் உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கினார்கள். 5உடனே ஆசாரியர்களும் லேவியர்களும் எருசலேமுக்கு உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு வந்தனர். மேலும் ஆசாரியர்களும் லேவியர்களும் ஆசரிப்புக் கூடாரத்தையும், கூடாரத்திற்குள் இருந்த பரிசுத்தமானப் பொருட்களையும் கூட எருசலேமுக்குக் கொண்டுவந்தனர். 6சாலொமோன் ராஜாவும் இஸ்ரவேல் ஜனங்களும் உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக ஒன்றாகக் கூடினார்கள். அவர்கள் செம்மறியாட்டுக் கடாக்களையும் காளைகளையும் பலிகொடுத்தனர். எவராலும் எண்ணி கணக்கிட முடியாத செம்மறியாட்டுக் கடாக்கள், மற்றும் காளைகளின் எண்ணிக்கை மிகுதியாக இருந்தது. 7பிறகு ஆசாரியர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை அதனை வைப்பதற்காகச் செய்யப்பட்ட மகா பரிசுத்தமான இடத்திற்கு ஆலயத்திற்குள் கொண்டுவந்தார்கள். அவர்கள் அதனைக் கேருபீன்களின் சிறகுகளுக்கு அடியில் வைத்தனர். 8உடன்படிக்கைப் பெட்டிக்கு மேலே கேருபீன்கள் தமது சிறகுகளை விரித்து அதனை மூடியவண்ணம் இருந்தது. இச்சிறகுகள் அப்பெட்டியைத் தூக்கப் பயன்படும் தண்டுகளையும் மூடிக்கொண்டிருந்தன. 9மகா பரிசுத்த இடத்தின் முன்பிருந்து காணத்தக்கவையாகப் பெட்டியிலிருந்த தண்டுகள் மிகவும் நீளமானவையாக இருந்தன. அதனை எவராலும் ஆலயத்திற்கு வெளியே இருந்து காணமுடியவில்லை. ஆனால் அத்தண்டுகள் இன்றும் கூட அங்கேயே உள்ளன. 10அந்த உடன்படிக்கை பெட்டிக்குள் இரண்டு கற்பலகைகளைத் தவிர வேறு எதுவும் இல்லை. மோசே ஒரேப் மலையில் வைத்து இந்த இரண்டு கற்பலகைகளையும் பெட்டிக்குள் வைத்தான். ஒரேபில்தான் கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களோடு ஒரு உடன்படிக்கைச் செய்துகொண்டார். இது இஸ்ரவேலர்கள் எகிப்தை விட்டு வெளியே வந்த பிறகு நடந்தது.
11அங்கிருந்த ஆசாரியர்கள் எல்லாம் தங்களை பரிசுத்தமாக்கிக்கொள்ள சடங்குகளைச் செய்தார்கள். அவர்கள் அனைவரும் பரிசுத்த இடத்தை விட்டு வெளியே வந்ததும் தங்களுடைய விசேஷ குழுக்களின்படியில்லாமல் ஒன்றாக சேர்ந்து நின்றார்கள். 12லேவியப் பாடகர்கள் அனைவரும் பலிபீடத்தின் கிழக்குப்பகுதியில் நின்றுகொண்டனர். ஆசாப், எமான் மற்றும் எதுத்தூனிய பாடல் குழுவினர் அனைவரும் தமது குமாரர்களுடனும் உறவினர்களுடனும் அங்கு இருந்தார்கள். அவர்கள் வெண்ணிற மென்மையான ஆடையை அணிந்திருந்தனர். அவர்களிடம் கைத்தாளங்களும் சுரமண்டலங்களும் தம்புருக்களும் இருந்தன. லேவியப் பாடகர்களோடு 120 ஆசாரியர்களும் இருந்தனர். இந்த 120 ஆசாரியர்களும் எக்காளங்களை ஊதினார்கள். 13எக்காளங்களை ஊதியவர்களும் பாடல்களைப் பாடியவர்களும் ஒரே ஆளைப்போல இருந்தார்கள். அவர்கள் கர்த்தரைப் புகழ்ந்தும் கர்த்தருக்கு நன்றி சொல்லியும் ஒரே குரலில் ஒருமித்துப் பாடினார்கள். வாத்தியக்கருவிகளையும், இசைக்கருவிகளையும், தாளக் கருவிகளையும் ஒன்றாக மீட்டி பெருத்த ஓசையை அவர்கள் எழுப்பினார்கள். அவர்கள் பாடிய பாட்டு இதுதான்:
“கர்த்தரைத் துதியுங்கள் ஏனென்றால் கர்த்தர் நல்லவர்.
கர்த்தருடைய கருணை என்றென்றும் நிலைத்திருக்கிறது.”
பிறகு கர்த்தருடைய ஆலயமானது மேகங்களால் மூடப்பட்டது. 14மேகத்தின் இடையூறால் ஆசாரியர்களால் தொடர்ந்து பணிச்செய்ய முடியவில்லை. கர்த்தருடைய மகிமை தேவனுடைய ஆலயத்தை நிரப்பிற்று.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 5