YouVersion Logo
Search Icon

நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 8

8
சாலொமோன் கட்டிய நகரங்கள்
1சாலொமோன் கர்த்தருக்கான ஆலயத்தையும் தனது அரண்மனையையும் கட்டி முடிக்க 20 ஆண்டு காலமாயிற்று. 2ஈராம் தனக்குக் கொடுத்த நகரங்களைப் பிறகு சாலொமோன் கட்டத்தொடங்கினான். அந்நகரங்களில் சாலொமோன் இஸ்ரவேல் ஜனங்களில் சிலரை வாழ அனுமதித்தான். 3இதற்கு பிறகு சாலொமோன் ஆமாத் சோபாவிற்குச் சென்று அதனைக் கைப்பற்றினான். 4சாலொமோன் வனாந்தரத்திலே தத்மோர் என்ற நகரத்தையும் கட்டினான். சாலொமோன் ஆமாத் நாட்டிலே பொருட்களைச் சேமித்து வைப்பதற்கான நகரங்களைக் கட்டினான். 5சாலொமோன் மீண்டும் மேல்பெத்தொரோனையும் கீழ்ப்பெத்தோரோனையும் கட்டினான். அந்த ஊர்களைப் பலமான கோட்டைகளாக்கினான். இந்நகரங்களுக்கு பலமான கதவுகளையும் வாசல்களையும் தாழ்ப்பாள்களையும் அமைத்தான். 6சாலொமோன் மீண்டும் பாலாத்தையும் தனது பொருட்களைச் சேமித்துவைத்த வேறு சில ஊர்களையும் மீண்டும் கட்டினான். இரதங்களை நிறுத்திவைப்பதற்கான எல்லா நகரங்களையும், குதிரையோட்டிகள் வாழ்வதற்கான எல்லா நகரங்களையும் நிர்மாணித்தான். எருசலேம், லீபனோன் மற்றும் தான் ராஜாவாயிருந்த நாடு முழுவதும் தான் விரும்பியவற்றை எல்லாம் கட்டிமுடித்தான்.
7-8இஸ்ரவேலர் அல்லாத வேறு இனத்தினரும் அங்கு வாழ்ந்தனர். ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என அவர்கள் பலவகையினர். சாலொமோன் இவர்களை அடிமை வேலைச் செய்யுமாறு கட்டாயப்படுத்தினான். இவர்கள் இஸ்ரவேல் அல்லாதவர்கள். அவர்கள் இஸ்ரவேலர்களால் அழிக்கப்படாத இந்நிலப்பகுதியை விட்டுப் போனவர்களின் சந்ததியினர். இது இன்றைக்கும் அங்கே தொடர்ந்திருக்கிறது. 9சாலொமோன் இஸ்ரவேலர் எவரையும் அடிமை வேலைச்செய்யுமாறு பலவந்தப்படுத்தவில்லை. இஸ்ரவேலர்கள் சாலொமோனின் போர் வீரர்களாக பணியாற்றினார்கள். இவர்கள் சாலொமோனின் படையில் தளபதிகளாகவும் அதிகாரிகளாகவும் இருந்தனர். இவர்கள் சாலொமோனின் தேர்ப்படை அதிகாரிகளாகவும், குதிரை வீரர்களின் அதிகாரிகளாகவும் இருந்தனர். 10இஸ்ரவேலரில் சிலர் சாலொமோனின் முக்கியமான அதிகாரிகளுக்கான தலைவர்களாக இருந்தனர். இவ்வாறு 250 பேர் ஜனங்களை மேற்பார்வை செய்யும் தலைவர்களாக இருந்தார்கள்.
11சாலொமோன் பார்வோனின் குமாரத்தியை தாவீதின் நகரத்திலிருந்து அழைத்துவந்து, அவளுக்காகக் கட்டியிருந்த மாளிகையில் குடிவைத்தான். சாலொமோன், “என் மனைவி தாவீதின் வீட்டிலே இருக்கக் கூடாது. ஏனென்றால் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி இருந்ததால் அவ்விடங்கள் பரிசுத்தமானவை” என்றான்.
12பிறகு சாலொமோன் கர்த்தருக்காக தகன பலிகளை கர்த்தருடைய பலிபீடத்தில் அளித்தான். இந்தப் பலிபீடத்தை சாலொமோன் ஆலய மண்டபத்திற்கு முன்பு அமைத்திருந்தான். 13மோசே கட்டளையிட்டபடி ஒவ்வொரு நாளும் சாலொமோன் பலிகளைச் செலுத்தி வந்தான். ஓய்வுநாட்களிலும், மாதப் பிறப்பு நாட்களின் கொண்டாட்டங்களிலும், ஆண்டின் மூன்று விடுமுறை நாட்களிலும் பலிகள் செலுத்தப்பட வேண்டியிருந்தன. புளிப்பில்லாத அப்பப் பண்டிகை, வாரங்களின் பண்டிகை மற்றும் அடைக்கலக் கூடாரப் பண்டிகை ஆகியவை ஆண்டின் மூன்று விடுமுறை நாட்கள். 14சாலொமோன் தனது தந்தை தாவீதின் அறிவுரைகளைப் பின்பற்றினான். மேலும் சாலொமோன் ஆசாரியர்கள் குழுவினரை அவர்களது சேவைகளுக்காகத் தேர்ந்தெடுத்தான். தம் பணிகளைச் செய்யுமாறு லேவியர்களையும் நியமித்தான். ஆலயப் பணிகளில் ஒவ்வொரு நாளும் லேவியர்கள் துதிப்பாடல் இசைப்பதில் முதன்மையாக இருந்தும் ஆசாரியர்ளுக்கு உதவியும் வந்தார்கள். அவன் வாசல் காவல் குழுவில் இருந்து பலரை வாயிலைக் காப்பதற்காகத் தேர்ந்தெடுத்தான். இவ்வாறுதான் தேவமனிதனான தாவீது அறிவுறுத்தியிருந்தான். 15ஆசாரியர்களுக்கும், லேவியர்களுக்கும் சாலொமோன் இட்ட கட்டளைகளில் எதனையும் இஸ்ரவேல் ஜனங்கள் மாற்றவோ மீறவோ இல்லை. மதிப்பு வாய்ந்த பொருட்களைக் காக்கும் வழிமுறையிலும் அவர்கள் சாலொமோனின் கட்டளைகளை மீறவில்லை. கருவூலங்ளையும் இவ்வாறே காத்துவந்தனர்.
16சாலொமோனின் அனைத்து வேலைகளும் முடிந்தன. கர்த்தருடைய ஆலயப்பணி தொடங்கிய நாள் முதல் முடியும்வரை திட்டமிட்டபடியே மிகச் சிறப்பாக நடந்தன. எனவே காத்தருடைய ஆலய வேலையும் முடிந்தது.
17பிறகு சாலொமோன் எசியோன் கேபர், ஏலோத் ஊர்களுக்குச் சென்றான். இவ்வூர்கள் ஏதோம் நாட்டில் செங்கடல் ஓரத்தில் உள்ளன. 18ஈராம் என்பவன் தனது கப்பல்களை சாலொமோனுக்கு அனுப்பினான். ஈராமின் ஆட்களே கப்பலை ஓட்டினார்கள். அவர்கள் கடலில் கப்பல் ஓட்டுவதில் வல்லவர்கள். இவர்களோடு சாலொமோனின் வேலையாட்களும் சேர்ந்து ஓபிர் என்னும் நகருக்குச் சென்றனர். அங்கிருந்து சாலொமோன் ராஜாவுக்கு 450 தாலந்து பொன்னைக் கொண்டு வந்தனர்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 8