YouVersion Logo
Search Icon

கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 4

4
ஆன்மாவுக்குரிய பொக்கிஷம்
1தேவன் தன் கிருபையால் இந்தப் பணியை எங்களுக்குக்கொடுத்தார். ஆகையால் இதனை விட்டுவிடமாட்டோம். 2ஆனால் இரகசியமானதும் வெட்கப்படத்தக்கதுமான வழிகளில் இருந்து விலகி இருக்கிறோம். நாங்கள் தந்திரங்களைப் பயன்படுத்துவதில்லை. தேவனுடைய போதனைகளையும் இழிவாக்குவதில்லை. நாங்கள் உண்மையைத் தெளிவாகப் போதிக்கிறோம். நாங்கள் யார் என்பதை இப்படித்தான் மக்களுக்குப் புலப்படுத்துகிறோம். இது, நாம் தேவனுக்கு முன் எத்தகைய மக்கள் என்பதையும் அவர்கள் மனதிற்குக் காட்டுகிறது. 3நாம் பரப்புகிற நற்செய்தி மறை பொருளாக இருக்கலாம். ஆனால் அது கெட்டுப்போகிறவர்கட்கே மறை பொருளாய் இருக்கும். 4இந்த உலகத்தை ஆள்பவனாகிய#4:4 ஆள்பவன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன். சாத்தான் விசுவாசம் இல்லாதவர்களின் மனதைக் குருடாக்கினான். அவர்களால் கிறிஸ்துவின் நற்செய்தியின் ஒளியைப் பார்க்க இயலாது. கிறிஸ்துவின் மகிமைக்குரிய நற்செய்தியையும் அறியார்கள். கிறிஸ்து மட்டுமே தேவன் போன்று இருப்பவர். 5நாங்கள் எங்களைப் பற்றிப் பிரச்சாரம் செய்வதில்லை. ஆனால், இயேசு கிறிஸ்துவே நமது கர்த்தர் என்றும் நாங்கள் இயேசுவுக்காக உங்களுடைய ஊழியக்காரர்கள் என்றும் பிரச்சாரம் செய்கிறோம். 6“இருளிலிருந்து வெளிச்சம் பிரகாசிக்கும்” என்று தேவன் ஒருமுறை சொன்னார். எங்கள் இதயங்களில் வெளிச்சத்தை ஏற்படுத்திய தேவனும் இவரே ஆவார். தேவனுடைய மகிமையை கிறிஸ்துவின் முகத்தில் தெரியச் செய்வதன் மூலம் அவர் எங்களுக்கு ஒளியைத் தந்தார்.
7இப்பொக்கிஷத்தை நாம் தேவனிடமிருந்து பெற்றுள்ளோம். ஆனால் நாங்களோ பொக்கிஷத்தைத் தாங்கியுள்ள மண் ஜாடிகளைப் போன்றே இருக்கிறோம். இப்பேராற்றலானது எங்களிடமிருந்து அல்ல, தேவனிடம் இருந்தே வருகிறது என்பதை இது காட்டும். 8எங்களைச் சுற்றிலும் தொல்லைகள் உள்ளன. ஆனால் அவற்றால் நாங்கள் தோல்வி அடையவில்லை. அவ்வப்போது செய்வது தெரியாமல் திகைக்கிறோம். ஆனால் முயற்சி செய்வதை ஒருபோதும் கைவிடவில்லை. 9நாங்கள் தண்டிக்கப்படுகிறோம். ஆனால் தேவன் எங்களைக் கைவிடவில்லை. சில நேரங்களில் நாங்கள் தூக்கியெறியப்படுகிறோம். ஆனால் அழிந்துபோகவில்லை. 10எங்கள் சொந்த சரீரங்களில் இயேசுவின் மரணத்தைச் சுமந்து திரிகிறோம். அதனால் எங்கள் சரீரங்களில் இயேசுவின் வாழ்வும் புலப்படவேண்டும் என்பதற்காகவே மரணத்தைச் சுமந்து திரிகிறோம். 11நாங்கள் உயிரோடு இருக்கிறோம் என்றாலும் இயேசுவுக்காக எப்போதும் மரண ஆபத்தில் உள்ளோம். அழியும் நம் சரீரங்களில் இயேசுவின் வாழ்வைக் காணமுடியும் என்பதற்காகவே இது எங்களுக்கு நேர்ந்திருக்கிறது. 12ஆகையால் மரணம் எங்களுக்குள் பணிபுரிகிறது; வாழ்வு உங்களுக்குள் பணிபுரிகிறது.
13“நான் விசுவாசித்தேன், அதனால் பேசுகிறேன்”#சங்கீ. 116:10 என்று எழுதப்பட்டுள்ளது. எங்கள் விசுவாசமும் அத்தகையது தான். நாங்கள் விசுவாசிக்கிறோம், அதனால் பேசுகிறோம். 14தேவன் இயேசுவை மரணத்திலிருந்து எழுப்பினார். அதோடு இயேசுவுடன் தேவன் எங்களையும் எழுப்புவார் என்று அறிவோம். தேவன் உங்களோடு எங்களையும் ஒன்று சேர்ப்பார். நாம் அவருக்கு முன் நிற்போம். 15இவை எல்லாம் உங்களுக்காகத்தான். ஆகையால் தேவனுடைய கிருபை, மென்மேலும் மிகுதியான மக்களுக்கு வழங்கப்படுகிறது. இது, மேலும் தேவனுடைய மகிமைக்காக அதிக அளவில் நன்றிகளைக் குவிக்கும்.
விசுவாசத்தால் வாழ்தல்
16அதனால் நாங்கள் ஒருபோதும் பலவீனர்களாக ஆவதில்லை. எங்களது சரீரம் வேண்டுமானால் முதுமையாலும் பலவீனத்தாலும் சோர்வடையலாம். ஆனால் எங்களுக்குள் இருக்கிற ஆவி ஒவ்வொரு நாளும் புதிதாக்கப்படுகிறது. 17தற்சமயத்திற்கு சிற்சில தொந்தரவுகள் எங்களுக்கு உண்டு. எனினும் அவை, முடிவற்ற மகிமையைப் பெறவே எங்களுக்கு உதவும். அந்த முடிவற்ற மகிமையானது இந்தத் தொல்லைகளைவிட மிகப் பெரியது. 18ஆகையால் நம்மால் காணமுடிந்தவற்றைப் பற்றியல்ல, காணமுடியாதவற்றைப் பற்றியே நாங்கள் சிந்திக்கிறோம். காணப்படுகிறவை தற்காலிகமானவை. காணப்படாதவையோ நிரந்தரமானவை.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 4