YouVersion Logo
Search Icon

ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 14

14
யூதாவில் அமத்சியா ஆட்சி செய்தல்
1இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாகாசின் குமாரன் யோவாசின் இரண்டாம் ஆட்சி ஆண்டில் யூதாவின் ராஜாவாகிய யோவாசின் குமாரன் அமத்சியா ராஜா ஆனான். 2அவன் தனது 25வது வயதில் ராஜா ஆனான். எருசலேமில் 29 ஆண்டுகள் அரசாண்டான். அவனது தாய் எருசலேம் நகரத்தைச் சேர்ந்த யொவதானாள். 3அவன் கர்த்தரால் சரியானவை என்று சொல்லப்பட்ட காரியங்களைச் செய்தான். ஆனால் தனது முற்பிதா தாவீதைப் போன்று முழுமையாக தேவனைப் பின்பற்றவில்லை. தந்தை யோவாஸ் செய்த பல செயல்களை இவனும் செய்தான். 4இவனும் பொய் தெய்வங்களின் கோவில்களை அழிக்கவில்லை. ஜனங்கள் அங்கு தொழுதுக் கொள்ள பலிகள் இடுவதும் நறுமணப் பொருட்களை எரிப்பதுமாக இருந்தனர்.
5அமத்சியா கையில் ஆட்சி உறுதியான போது, தனது தந்தையைக் கொன்ற வேலைக்காரர்களை (அதிகாரிகளைக்) கொன்றான். 6ஆனால் அவன் மோசேயின் சட்டங்களின் புத்தகத்தில் எழுதியுள்ளபடி, கொலையாளிகளின் குழந்தைகளைக் கொல்லவில்லை. கர்த்தர் தன் ஆணைகளையே அந்த புத்தகத்தில் மோசே மூலம் எழுதியுள்ளார். மோசே, “குழந்தைகள் செய்த தவறுக்காகப் பெற்றோர்கள் கொல்லப்படக்கூடாது. பெற்றோர்கள் செய்த தவறுக்காகப் பிள்ளைகள் கொல்லப்படக் கூடாது. ஒருவன் தான் செய்த தவறுகளுக்கு மாத்திரமே மரணத்தை அடையவேண்டும்” என்று எழுதியுள்ளான்.
7அவன் 10,000 ஏதோமியர்களை உப்புப் பள்ளத்தாக்கில் கொன்றுபோட்டான். சேலாவைப் போர் மூலம் பிடித்து அவனை “யொக்தியேல்” என்று அழைத்தான். அந்த இடம் இன்றும் “யொக்தியேல்” என்று அழைக்கப்படுகிறது.
அமத்சியா யோவாசுக்கு எதிராகப் போர்செய்ய விரும்பியது
8அமத்சியா தூதுவர்களை யெகூவின் குமாரனும் யோவாகாசின் குமாரனும், இஸ்ரவேலின் அரசனுமான யோவாசிடம் அனுப்பினான். அவன், “வா, நேரில் ஒருவரையொருவர் சந்தித்து போரிட்டுப் பார்ப்போம்” என்று சொல்லிவிட்டான்.
9இஸ்ரவேலரின் ராஜாவாகிய யோவாஸ் அதற்குப் பதிலாக யூத ராஜா அமத்சியாவிற்கு, “லீபனோனிலுள்ள முட்செடியானது கேதுரு மரத்தை நோக்கி, ‘நீ உன் குமாரத்தியை என் குமாரனுக்கு மணமுடித்துக் கொடு’ என்று சொல்லச்சொன்னது. ஆனாலும் லீபனோனிலுள்ள ஒரு காட்டு மிருகம் அந்த வழியாகப் போகும்போது அந்த முட்செடியை மிதித்துப்போட்டது. 10நீ ஏதோமியரைத் தோற்கடித்ததால் உன் மனம் உன்னைக் கர்வம் கொள்ளச்செய்தது. நீ பெருமை பாராட்டிக்கொண்டு உன் வீட்டிலேயே இரு! நீ இதனைச் செய்தால், நீ விழுவாய், யூதாவும் உன்னோடு விழும்” என்றான்.
11ஆனாலும் அமத்சியா காதுகொடுத்து கேட்கவில்லை. ஆகையால் இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் வந்தான். யூதாவிலுள்ள பெத்ஷிமேஸ் என்னும் இடத்தில் அவனும் யூதாவின் அரசனுமான அமத்சியாவும் மோதிக்கொண்டனர். 12இஸ்ரவேல் யூதாவைத் தோற்கடித்தது. யூதவீரர்கள் வீட்டிற்கு ஓடிப்போனார்கள். 13பெத்ஷிமேஸ், என்னும் இடத்தில் இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ், அகசியாவின் குமாரன் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவைச் சிறை பிடித்தான். அவனை எருசலேமுக்குக் கொண்டுபோய், எருசலேமிலுள்ள சுவரை, 600 அடி நீளத்திற்கு எப்பிராயீம் வாசல் தொடங்கி மூலை வாசல்மட்டும் இடித்துப்போட்டான். 14பிறகு யோவாஸ் அங்கு பொன்னையும் வெள்ளியையும் கர்த்தருடைய ஆலயத்தில் உள்ள சகல பணிமூட்டுகளையும், அரண்மனையின் காசாளர்களையும் கைப்பற்றினான். ஜனங்களையும் சிறை பிடித்து சமாரியாவிற்குப் போனான்.
15யோவாஸ் செய்த மற்ற அருஞ்செயல்களும் அவன், அமத்சியாவிற்கு எதிராக எவ்வாறு போரிட்டான் என்ற விளக்கமும் இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. 16யோவாஸ் மரித்ததும் அவனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். அவன் இஸ்ரவேல் ராஜாக்களோடு கூடவே சமாரியாவில் அடக்கமானான். யோவாசின் குமாரனான யெரொபெயாம் புதிய ராஜா ஆனான்.
அமத்சியாவின் மரணம்
17இஸ்ரவேல் ராஜாவாகிய யோவாசின் குமாரனான அமத்சியா, இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாகாசின் குமாரனான யோவாஸ் மரித்தபின், 15 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தான். 18அமத்சியாவின் மற்ற அருஞ்செயல்கள் எல்லாம் யூத ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. 19எருசலேமில் அமத்சியாவிற்கு எதிராக ஜனங்கள் திட்டமிட்டனர். அமத்சியா லாகீசுக்கு ஓடிப்போனான். ஆனால் ஜனங்கள் லாகீசுக்கு ஆட்களை அனுப்பினார்கள். அவர்கள் அவனை அங்கே கொன்றனர். 20ஜனங்கள் அமத்சியாவின் உடலைக் குதிரையில் வைத்துக் கொண்டுவந்தனர். அவனை தாவீதின் நகரத்தில் எருசலேமில் அவனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்தனர்.
யூதாவில் அசரியா தனது ஆட்சியைத் தொடங்குதல்
21பிறகு யூதாவிலுள்ள அனைத்து ஜனங்கள், அமத்சியாவின் குமாரன் அசரியாவைப் புதிய ராஜாவாக்கினர். அப்போது அவனுக்கு 16 வயது. 22ஆகையால் அமத்சியா ராஜா மரித்து அவனது முற்பிதாக்களோடு அடக்கமான பிறகு அசரியா மீண்டும் ஏலாதைக்கட்டி, அதனை யூதாவிற்குத் திரும்பக் கொடுத்தான்.
இஸ்ரவேலில் இரண்டாம் யெரொபெயாமின் ஆட்சி தொடங்கியது
23யோவாசின் குமாரனான பெரொபெயாம் இஸ்ரவேல் ராஜாவாக சமாரியாவில் ஆட்சியைத் தொடங்கி 41 ஆண்டுகள் ஆட்சி செய்தான். அப்போது யூதாவின் ராஜாவாகிய யோவாசின் குமாரன் அமத்சியா பதினைந்தாம் ஆட்சியாண்டில் இருந்தான். 24தவறென்று கர்த்தர் சொன்னவற்றையே யெரொபெயாம் செய்துவந்தான். இஸ்ரவேலுக்கு பாவத்தைக் கொண்டுவந்த நேபாத்தின் குமாரனான யெரொபெயாமின் பாவச்செயல்களை இவன் நிறுத்தவில்லை. 25யெரொபெயாம் லெபொ ஆமாத்தின் எல்லை முதல் அரபா கடல் மட்டுமுள்ள இஸ்ரவேல் பகுதிகளைத் திரும்ப சேர்த்துக்கொண்டான். இது, இஸ்ரவேலின் கர்த்தர் தமது ஊழியக்காரனான அமித்தாயின் குமாரனான யோனாவான காத்தேப்பேரிலிருந்து வந்த தீர்க்கதரிசி மூலம் சொன்னபடி நிகழ்ந்தது. 26இஸ்ரவேலில் ஒவ்வொருவரும், அவர்கள் அடிமைகளாகவோ அல்லது சுதந்திரமானவர்களாகவோ இருந்தாலும் அவர்கள் துன்பப்படுவதைக் கர்த்தர் கண்டார். இஸ்ரவேலர்களுக்கு உதவ ஒருவர் கூட மீதியாக இருக்கவில்லை 27உலகத்திலிருந்து இஸ்ரவேலர்களின் பெயரை எடுத்து விடவேண்டுமென்று கர்த்தர் என்றும் சொன்னதில்லை. எனவே கர்த்தர் யோவாசின் குமாரனான யெரொபெயாம் மூலம் இஸ்ரவேல் ஜனங்களைக் காப்பாற்றினார்.
28யெரொபெயாம் செய்த மற்ற அருஞ்செயல்களும் அவரது வலிமையும் இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. இதில் யெரொபெயாம் தமஸ்குவையையும் ஆமாத்தையும் போரிட்டு இஸ்ரவேலோடு சேர்த்துக் கொண்டதும் உள்ளது. (இந்நகரங்கள் யூதாவோடு சேர்ந்திருந்தது) 29யெரொபெயாம் மரித்ததும் இஸ்ரவேல் ராஜாக்களான முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். யெரொபெயாமின் குமாரனான சகரியா அடுத்த புதிய ராஜா ஆனான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 14