அப்போஸ்தலருடைய நடபடிகள் 14
14
இக்கோனியத்தில் ஊழியம்
1பவுலும் பர்னபாவும் இக்கோனியம் நகரத்திற்குச் சென்றனர். அவர்கள் யூத ஜெப ஆலயத்திற்குச் சென்றனர். (இதைத் தான் அவர்கள் ஒவ்வொரு நகரத்திலும் செய்தனர்) அவர்கள் அங்குள்ள மக்களிடம் பேசினர். பவுலும் பர்னபாவும் பேசின விதத்தில் பல யூதர்களும், கிரேக்கர்களும் அவர்கள் கூறியதை முழுமையாக நம்பினர். 2ஆனால் மனந்திரும்பாத யூதர்கள், யூதரல்லாத சகோதரரைக் குறித்துத் தீமையானவற்றை எண்ணும்படியாகச் செய்தனர்.
3எனவே பவுலும் பர்னபாவும் இக்கோனியத்தில் நீண்ட காலம் தங்கினர். கர்த்தருக்காகத் துணிவோடு பேசினர். தேவனுடைய கிருபையைக் குறித்து பவுலும், பர்னபாவும் பேசினர். அற்புதங்களையும் அதிசயங்களையும் நிகழ்த்துவதற்கு அப்போஸ்தலர்களுக்கு உதவி செய்து அவர்கள் கூறியதை உண்மையென்று தேவன் நிரூபித்தார். 4ஆனால் நகர மக்களில் சிலர் யூதர்கள் கூறியதை ஒப்புக்கொண்டனர். நகரத்தின் மற்ற மக்களோ பவுலையும் பர்னபாவையும் நம்பினர். எனவே நகரம் பிரிவுபட்டது.
5சில யூதரல்லாத மக்களும், சில யூதர்களும் அவர்களின் யூத அதிகாரிகளும் பவுலையும் பர்னபாவையும் துன்புறுத்த முயன்றனர். இந்த மக்கள் அவர்களைக் கற்களால் எறிந்துகொல்ல எண்ணினர். 6பவுலும் பர்னபாவும் இதை அறிந்தபோது, நகரிலிருந்து சென்றனர். அவர்கள் லிஸ்தீராவுக்கும், தெர்பைக்கும் லிக்கோனியாவின் நகரங்களுக்கும், அந்த நகரங்களைச் சூழ்ந்த கிராமப்புறப் பகுதிகளுக்கும் சென்றனர். 7அவர்கள் அங்கும் கூட நற்செய்தியைக் கூறினர்.
லிஸ்திரா, தெர்பை நகர ஊழியம்
8பாதங்களில் ஊனமுற்ற மனிதன் ஒருவன் லிஸ்தீராவில் இருந்தான். அவன் பிறவியிலேயே ஊனமுற்றவன். 9அவன் அங்கு உட்கார்ந்துகொண்டு பவுல் பேசுவதைக் கேட்டுக்கொண்டேயிருந்தான். பவுல் அவனைப் பார்த்தான். தேவன் அவனைக் குணப்படுத்த முடியும் என்பதை அம்மனிதன் நம்பியதைப் பவுல் கண்டான். 10எனவே பவுல் உரக்க, “எழுந்து உன் கால்களால் நில்” என்றான். அம்மனிதன் குதித்தெழுந்து சுற்றிலும் நடக்க ஆரம்பித்தான்.
11பவுல் செய்ததை மக்கள் கூட்டத்தினர் கண்டபோது, அவர்கள் லிக்கோனிய மொழியில் சத்தமிட்டனர். அவர்கள், “தேவர்கள் மனிதரைப்போன்று மாறியுள்ளனர்! அவர்கள் நம்மிடம் இறங்கி வந்துள்ளனர்!” என்றனர். 12மக்கள் பர்னபாவை “சீயெஸ்” என அழைக்கத் தொடங்கினர். பவுல் முக்கிய பேச்சாளராக இருந்ததால், அவர்கள் பவுலை “ஹெர்ம்ஸ்” என்றழைத்தனர். 13சீயஸின் தேவாலயம் நகரத்தினருகில் இருந்தது. தேவாலயத்தின் பூசாரி சில காளைகளையும் மாலைகளையும் நகரக் கதவுகளுக்கருகே கொண்டுவந்தான். பவுலையும் பர்னபாவையும் வழிபடுவதற்கு பூசாரிகளும் மக்களும் பலி செலுத்த விரும்பினர்.
14அப்போஸ்தலராகிய பர்னபாவும் பவுலும் மக்கள் செய்துகொண்டிருப்பதைப் புரிந்துகொண்டதும் அவர்கள் தங்கள் ஆடைகளைக் கிழித்தனர்.#14:14 தங்கள் ஆடைகளைக் கிழித்தனர் அவர்கள் கோபத்துடன் உள்ளனர் என்பதற்கான அடையாளம். பின் அவர்கள் கூட்டத்தினர் மத்தியில் ஓடி, அவர்களிடம் உரத்த குரலில், 15“மனிதரே ஏன் இவற்றையெல்லாம் செய்கிறீர்கள்? நாங்கள் தேவர்கள் அல்ல. உங்களைப்போன்ற மனிதர்கள்தான். எங்களுக்கும் உணர்வுகள் உங்களைப்போலவே உண்டு. உங்களுக்கு நற்செய்தியைச் சொல்ல நாங்கள் வந்தோம். பயனற்ற இந்தக் காரியங்களை விட்டுவிலகும்படியாக நாங்கள் உங்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். உண்மையான ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்புங்கள். அவரே வானம், பூமி, கடல், அவற்றிலுள்ள பொருட்கள் அனைத்தையும் உண்டாக்கியவர்.
16“முன்பு எல்லா தேசங்களும் அவை விரும்பியவற்றைச் செய்வதற்கு தேவன் அனுமதித்தார். 17ஆனால் அதே சமயம் தேவன் உண்மையானவர் என்பதை நிறுவும் காரியங்களையே தேவன் செய்தார். அவர் உங்களுக்கு நல்லவற்றையே செய்கிறார். அவர் வானிலிருந்து உங்களுக்கு மழையைத் தருகிறார். அவர் தக்க காலங்களில் உங்களுக்கு நல்ல அறுவடையைக் கொடுக்கிறார். அவர் மிகுதியான உணவை உங்களுக்குத் தருகிறார். அவர் உங்கள் இருதயங்களை மகிழ்ச்சியால் நிரப்புகிறார்” என்றனர்.
18பவுலும் பர்னபாவும் மக்களுக்கு இவற்றைக் கூறினர். ஆனாலும் அவர்களை வழிபடுவதற்காக அவர்கள் இட்ட பலியை அநேகமாக பவுலும் பர்னபாவும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
19பின் அந்தியோகியாவிலிருந்தும், இக்கோனியத்திலிருந்தும் சில யூதர்கள் வந்தனர். அவர்கள் பவுலை எதிர்க்கும்படியாக மக்களை ஏவினர். எனவே மக்கள் பவுலின்மீது கற்களை வீசி, அவன் இறந்துவிட்டானென்று நினைத்து அவனை ஊருக்குப் புறம்பே இழுத்து வந்தனர். 20இயேசுவின் சீஷர்கள் பவுலைச் சுற்றிலும் கூடினர். பின் அவன் எழுந்து ஊருக்குள் மீண்டும் சென்றான். மறுநாள் அவனும் பர்னபாவும் புறப்பட்டு தெர்பை நகரத்துக்குச் சென்றனர்.
அந்தியோகியாவுக்குத் திரும்புதல்
21பவுலும் பர்னபாவும் தெர்பை நகரத்திலும் நற்செய்தியைக் கூறினர். பல மக்கள் இயேசுவின் சீஷராயினர். லிஸ்திரா, இக்கோனியம், அந்தியோகியா நகரங்களுக்குப் பவுலும் பர்னபாவும் திரும்பினர். 22அந்நகரங்களில் இயேசுவின் சீஷர்களை பவுலும் பர்னபாவும் வலிமைமிக்கவர்களாக ஆக்கினர். நம்பிக்கையில் நிலைத்திருப்பதற்கு அவர்கள் உதவினர். பவுலும் பர்னபாவும், “தேவனுடைய இராஜ்யத்துக்குள் செல்லும் நம் பாதையில் நாம் பல துன்பங்களை அனுபவிக்க வேண்டும்” என்றனர். 23பவுலும் பர்னபாவும் ஒவ்வொரு சபைக்கும் மூப்பர்களை அமர்த்தினார்கள். அவர்கள் உபவாசமிருந்து அம்மூப்பர்களுக்காகப் பிரார்த்தனை செய்தனர். அம்மூப்பர்கள் கர்த்தராகிய இயேசுவில் நம்பிக்கை வைத்த மனிதராயிருந்தார்கள். எனவே பவுலும் பர்னபாவும் கர்த்தரின் பாதுகாப்பில் அவர்களை விட்டனர்.
24பவுலும் பர்னபாவும் பிசிதியா நாட்டின் வழியாகச் சென்றனர். பின் அவர்கள் பம்பிலியா நாட்டிற்கு வந்தனர். 25அவர்கள் பெர்காவில் தேவனுடைய செய்தியைக் கூறினார்கள். பின் அவர்கள் அத்தாலியா நகரத்திற்குச் சென்றனர்.
26அங்கிருந்து பவுலும் பர்னபாவும் சிரியாவிலுள்ள அந்தியோகியாவிற்குக் கடல் வழியாகப் பயணமாயினர். இந்நகரில்தான் விசுவாசிகள் அவர்களை தேவனுடைய கண்காணிப்பில் ஆட்படுத்தி இவ்வேலை செய்ய அனுப்பியிருந்தனர். இப்போது அவர்கள் தங்கள் வேலையை முடித்திருந்தனர்.
27பவுலும் பர்னபாவும் வந்துசேர்ந்தபோது அவர்கள் சபையைக் கூட்டினர். தேவன் அவர்களோடு செய்த எல்லாக் காரியங்களையும் குறித்துப் பவுலும் பர்னபாவும் அவர்களுக்குக் கூறினர். அவர்கள், “வேறு தேசங்களின் மக்களும் நம்பும்படிக்கு தேவன் ஒரு வாசலைத் திறந்தார்” என்றார்கள். 28கிறிஸ்துவின் சீஷர்களோடு பவுலும் பர்னபாவும் நீண்டகாலம் அங்கேயே தங்கினர்.
Currently Selected:
அப்போஸ்தலருடைய நடபடிகள் 14: TAERV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International