YouVersion Logo
Search Icon

அப்போஸ்தலருடைய நடபடிகள் 22

22
பவுல் மக்களோடு பேசுகிறான்
1பவுல், “எனது சகோதரர்களே! தந்தையரே! நான் கூறுவதைக் கேளுங்கள், நான் என் சார்பான நியாயங்களை உங்கள் முன்வைக்கிறேன்” என்றான்.
2பவுல் யூத மொழியில் பேசுவதை யூதர்கள் கேட்டார்கள். எனவே அவர்கள் மேலும் அமைதியாயினர். பவுல்,
3“நான் ஒரு யூதன், நான் சிலிசியா நாட்டிலுள்ள தர்சுவில் பிறந்தவன். இந்நகரில் வளர்ந்தவன். நான் கமாலியேலின்#22:3 கமாலியேல் பரிசேயர்களின் மிக முக்கியமான ஆசிரியர். யூதமத குரு அப்போ. 5:34. மாணவன். நமது முன்னோரின் சட்டங்களை அவர் எனக்கு மிக நம்பிக்கையுடன் போதித்தார். நான் தேவனுடைய சேவையில், நீங்கள் எல்லோரும் இப்போது இருப்பதைப் போல், முனைந்து நின்றேன். 4இயேசுவின் வழியைப் பின்பற்றிய மக்களைத் தண்டித்தேன். அவர்களில் சிலர் என் நிமித்தமாகக் கொல்லப்பட்டனர். நான் ஆண்களையும் பெண்களையும் கைது செய்தேன். அவர்களை சிறையில் வைத்தேன்.
5“தலைமை ஆசாரியரும் முதிய யூதர்களின் சங்கமும் இது உண்மை என்பதை உங்களுக்குக் கூறமுடியும்! ஒருமுறை இந்த அதிகாரிகள் என்னிடம் சில கடிதங்களைக் கொடுத்தனர். அக்கடிதங்கள் தமஸ்குவிலுள்ள யூத சகோதரர்களுக்கு முகவரி இடப்பட்டிருந்தன. நான் அங்கு இயேசுவின் சீஷர்களைக் கைது செய்வதற்கும் தண்டனைக்காக அவர்களை எருசலேமுக்குக் கொண்டுவரவும் போய்க் கொண்டிருந்தேன்.
பவுலின் சாட்சி
6“ஆனால் தமஸ்குவிற்கு நான் செல்லும் வழியில் ஏதோ ஒன்று எனக்கு நிகழ்ந்தது. நான் தமஸ்குவை நெருங்கிக்கொண்டிருந்தபோது அது நண் பகல் நேரம். தீடீரென்று என்னைச் சுற்றிலும் வானிலிருந்து மிகுந்த ஒளி பிரகாசித்தது. 7நான் தரையில் வீழ்ந்தேன். ஒரு குரல் என்னிடம், ‘சவுலே, சவுலே, நீ ஏன் எனக்கு இத்தீய காரியங்களைச் செய்கின்றாய்?’ என்றது.
8“நான், ‘ஆண்டவரே நீர் யார்?’ என்று கேட்டேன், அக்குரல், ‘நான் நாசரேத்தின் இயேசு. நீ கொடுமைப்படுத்துகிறவன் நானே’ என்றது. 9என்னோடிருந்த மனிதர்கள் அக்குரலைக் கேட்கவில்லை. ஆனால் அம்மனிதர்கள் ஒளியைக் கண்டார்கள்.
10“நான், ‘ஆண்டவரே, நான் என்ன செய்யட்டும்?’ என்றேன். கர்த்தராகிய இயேசு பதிலாக, ‘எழுந்து தமஸ்குவுக்குள் போ, நீ செய்ய வேண்டுமென நான் திட்டமிட்டுள்ள அனைத்தையும் குறித்து அங்கே உனக்கு அறிவிக்கப்படும்’ என்றார். 11என்னால் பார்க்கமுடியாதபடிக்கு, அப்பிரகாசமான ஒளி என்னைக் குருடாக்கிற்று. எனவே என் மனிதர்கள் என்னைத் தமஸ்குவுக்கு வழி நடத்தினார்கள்.
12“தமஸ்குவில் அனனியா#22:12 அனனியா அப்போஸ்தலர் நடபடிகளில் மூன்று பேர் இதே பெயரில் உள்ளனர். அப்போ. 5:1; 23:2. என்னும் பெயருள்ள மனிதன் என்னிடம் வந்தான். அனனியா பக்திமான். அவன் மோசேயின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தவன். அங்கு வாழ்ந்த யூதர்கள் அனைவரும் அவனை மதித்தனர். 13அனனியா என் அருகில் வந்து, ‘சகோதரனாகிய சவுலே, மீண்டும் பார்ப்பாயாக’ என்றான். உடனே என்னால் பார்க்க முடிந்தது.
14“அனனியா என்னிடம், ‘நமது முன்னோர்களின் தேவன் அவரது திட்டத்தைத் தெரிந்துகொள்வதற்கு உன்னைத் தேர்ந்தெடுத்தார். நேர்மையானவரைக் கண்டு அவரது வார்த்தைகளை அவரிடமிருந்து கேட்பதற்காக அவர் உன்னைத் தெரிந்துகொண்டார். 15எல்லா மக்களுக்கும் நீ அவரது சாட்சியாக இருப்பாய். நீ பார்த்ததையும் கேட்டதையும் மனிதருக்குக் கூறுவாய். 16இப்போது இன்னும் காத்திராமல் எழுந்திரு. ஞானஸ்நானம் பெற்றுக்கொள். உன் பாவங்கள் நீங்கக் கழுவப்படு. உன்னை இரட்சிப்பதற்காக இயேசுவின் மீது விசுவாசம் கொண்டு இதனைச் செய்’ என்றான்.
17“பிற்பாடு நான் எருசலேமுக்குத் திரும்பி வந்தேன். நான் தேவாலய முற்றத்தில் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தபோது ஒரு காட்சியைக் கண்டேன். 18நான் இயேசுவைக் கண்டேன். இயேசு என்னிடம், ‘விரைவாகச் செயல்படு. இப்போதே எருசலேமை விட்டுச் செல். இங்குள்ள மக்கள் என்னைப்பற்றிய உனது சாட்சியை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்’ என்றார்.
19“நான், ‘ஆனால் கர்த்தாவே, நான் விசுவாசிகளைச் சிறையில் அடைத்தும் அவர்களை அடித்துத் துன்புறுத்தியவனுமாயிருந்தேன் என்பதை மக்கள் அறிவர். உங்களிடம் நம்பிக்கை வைத்த மக்களைத் தேடி யூத ஜெப ஆலயங்களுக்கெல்லாம் சென்றேன். 20உங்கள் சாட்சியாக ஸ்தேவான் கொல்லப்பட்டபோது நான் அங்கிருந்ததையும் மக்கள் அறிவர். நான் அங்கு நின்று ஸ்தேவான் கொல்லப்பட வேண்டுமென ஆமோதித்தேன். அவனைக் கொன்று கொண்டிருந்த மனிதர்களின் அங்கிகளையும் வைத்திருந்தேன்!’ என்றேன்.
21“ஆனால் பின்னர் இயேசு என்னை நோக்கி, ‘இப்போது புறப்பட்டுச் செல். நான் உன்னைத் தூர இடங்களுக்கு யூதரல்லாத மக்களிடம் அனுப்புவேன்’ என்றார்” என்றான்.
22யூதரல்லாத மக்களிடம் செல்வதைப் பற்றிய இக்கடைசி வார்த்தைகளைப் பவுல் கூறியபோது, மக்கள் கவனிப்பதை நிறுத்தினர். அவர்கள் எல்லோரும் உரக்க, “அவனைக் கொல்லுங்கள். உலகத்திலிருந்து அவனை ஒழித்துக்கட்டுங்கள். இப்படிப்பட்ட ஒரு மனிதனை உயிர்வாழ விடக்கூடாது” என்றனர். 23அவர்கள் கூக்குரலிட்டு தங்கள் அங்கிகளைக் கழற்றி வீசினர். அவர்கள் புழுதியை அள்ளி வானத்தில் வீசினர்.#22:23 புழுதியை அள்ளி வானத்தில் வீசினர் இம்முறையில் அவர்கள் தமது கோபத்தைக் காட்டினர். 24அப்போது அதிகாரி பவுலைப் படைக்கூடத்திற்கு அழைத்துச் செல்லுமாறு கட்டளையிட்டான். பவுலை அடிக்குமாறு வீரர்களுக்கு கூறினான். அவனுக்கு எதிராக மக்கள் கூக்குரலிடுவதன் காரணத்தைப் பவுல் கூறவேண்டுமென்று விரும்பினான். 25எனவே வீரர்கள் பவுலை அடிப்பதற்கு முயலத் துவங்கினர். ஆனால் பவுல் அங்கிருந்த படை அதிகாரியை நோக்கி, “தவறு செய்ததாக நிரூபிக்கப்படாத ஒரு ரோமக் குடிமகனை அடிக்கும் உரிமை உங்களுக்கு உண்டா?” என்று கேட்டான்.
26அதிகாரி இதைக் கேட்டபோது, கட்டளையிடுபவனிடம் சென்று இதைக் குறித்துப் பேசினான். அவன், “நீர் செய்வது என்னவென்று உமக்குத் தெரியுமா? இம்மனிதன் ஒரு ரோமக் குடிமகன்!” என்றான்.
27அதிகாரி பவுலிடம் வந்து, “சொல், நீ உண்மையாகவே ரோமக் குடிமகனா?” என்று கேட்டான்.
பவுல் “ஆம்” என்றான்.
28அதிகாரி, “நான் ரோமக் குடிமகன் ஆவதற்கு மிகுந்த பணம் செலுத்த வேண்டியதா யிற்று” என்றான்.
ஆனால் பவுல், “நான் பிறப்பால் குடிமகன்” என்றான்.
29பவுலைக் கேள்வி கேட்பதற்கு அவனைத் தயார் செய்துகொண்டிருந்த மனிதர்கள் உடனே அவனை விட்டு விலகினர். ரோமக் குடிமகனான பவுலைக் கட்டியதால் அதிகாரி பயந்தான்.
பவுலும்-யூதத்தலைவர்களும்
30மறுநாள் யூதர்கள் பவுலுக்கு எதிராகப் பேசும் உறுதியான காரணத்தைக் கண்டறிய அந்த அதிகாரி முடிவு செய்தான். எனவே தலைமை ஆசாரியரையும் யூதர்களையும் அழைத்து பவுலின் விலங்குகளைக் கழற்றக் கட்டளையிட்டான். பின் பவுலை வெளியே அழைத்து வந்து, அக்கூட்டத்தின் முன்பாக நிறுத்தினான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for அப்போஸ்தலருடைய நடபடிகள் 22