YouVersion Logo
Search Icon

அப்போஸ்தலருடைய நடபடிகள் 25

25
பவுலின் வாதம்
1பெஸ்து ஆளுநரானான். மூன்று நாட்களுக்குப் பிறகு அவன் செசரியாவிலிருந்து எருசலேமுக்குச் சென்றான். 2தலைமை ஆசாரியரும் முக்கியமான யூதத் தலைவர்களும் பெஸ்துவுக்கு முன் பவுலுக்கு எதிராக வழக்குகளைத் தொடுத்தனர். 3தங்களுக்கு ஓர் உதவி செய்யும்படியாக பெஸ்துவை வேண்டினர். பவுலை எருசலேமுக்கு மீண்டும் அனுப்பும்படியாக பெஸ்துவைக் கேட்டார்கள். வழியில் பவுலைக் கொல்வதற்குத் திட்டம் வகுத்தனர்.
4ஆனால் பெஸ்து, “இல்லை! பவுல் செசரியாவில் வைக்கப்படுவான். நானே செசரியாவுக்குச் சீக்கிரம் போவேன். 5உங்கள் தலைவர்கள் சிலரும் என்னோடு வரலாம். அவன் உண்மையாகவே குற்றம் செய்திருந்தால் செசரியாவில் அவர்கள் அம்மனிதன் மீது வழக்கு தொடரலாம்” என்றான்.
6எட்டு அல்லது பத்து நாட்கள் பெஸ்து எருசலேமில் தங்கினான். பின் அவன் செசரியாவுக்குத் திரும்பினான். மறுநாள் பெஸ்து பவுலைத் தனக்கு முன்னால் அழைத்து வருமாறு வீரர்களுக்குக் கூறினான். பெஸ்து நீதிபதியின் இருக்கையில் அமர்ந்திருந்தான். 7பவுல் அறைக்குள் வந்தான். எருசலேமிலிருந்து வந்த யூதர்கள் அவனைச் சுற்றிலும் நின்று கொண்டனர். பவுல் பல குற்றங்களைச் செய்தான் என்று யூதர்கள் கூறினார்கள். ஆனால் இக்காரியங்கள் எதையும் நிரூபிக்க முடியவில்லை. 8பவுல் தன்னைக் காத்துக்கொள்வதற்குக் கூறியதாவது, “யூத சட்டத்துக்கு மாறாகவோ, தேவாலயத்துக்கு எதிராகவோ, இராயருக்கு விரோதமாகவோ, நான் எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை” என்றான்.
9ஆனால் பெஸ்து யூதர்களைத் திருப்திப்படுத்த நினைத்தான். எனவே அவன் பவுலை நோக்கி, “நீ எருசலேமுக்குப் போக விரும்புகிறாயா? இக்குற்றங்களுக்காக நான் அங்கு நீதி வழங்கவேண்டுமென்று விரும்புகிறாயா?” என்று கேட்டான்.
10பவுல், “இராயனின் நியாயஸ்தலத்திற்கு முன்பாக நான் நின்று கொண்டிருக்கிறேன். இங்கு நான் நியாயந்தீர்க்கப்படவேண்டும்! நான் யூதர்களுக்கு எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை. இது உண்மையென்பது உங்களுக்குத் தெரியும். 11நான் ஏதேனும் தவறு செய்து, சட்டமும் நான் அதற்காக இறக்க வேண்டுமெனக் கூறினால், நான் இறப்பதற்குச் சம்மதிக்கிறேன். நான் மரணத்தினின்று தப்பவேண்டுமென்று கேட்கவில்லை. ஆனால் இப்பழிகள் பொய்யெனில் யாரும் என்னை யூதரிடம் ஒப்படைக்கக் கூடாது. நான் இராயரால் நியாயந்தீர்க்கப்பட விரும்புகிறேன்!” என்றான்.
12பெஸ்து தனது ஆலோசகர்களிடம் இதைக் குறித்துக் கலந்தாலோசித்தான். பின்பு அவன், “நீ இராயரைப் பார்க்க வேண்டுமெனக் கேட்டாய், எனவே நீ இராயரிடம் போவாய்” என்றான்.
ஏரோது அகிரிப்பாவின் முன் பவுல்
13சில நாட்களுக்குப் பிறகு அகிரிப்பா மன்னரும் பெர்னிசும் பெஸ்துவை சந்திக்குமாறு செசரியாவுக்கு வந்தனர். 14அங்குப் பல நாட்கள் தங்கியிருந்தனர். பவுலின் வழக்கைக் குறித்து பெஸ்து மன்னருக்குக் கூறினான். பெஸ்து, “பெலிக்ஸ் சிறையில் விட்டுச் சென்ற ஒரு மனிதன் இருக்கிறான். 15நான் எருசலேமுக்குப் போனபோது தலைமை ஆசாரியரும், முதிய யூத அதிகாரிகளும் அவன் மீது வழக்குத் தொடுத்தனர். அவனுக்கு நான் மரண தண்டனை அளிக்க வேண்டுமென யூதர்கள் விரும்பினர். 16ஆனால் நான், ‘ஒரு மனிதன் குற்றம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டால், ரோமர் அவனைப் பிறரிடம் நியாயம் வழங்குவதன் பொருட்டு ஒப்படைப்பதில்லை. முதலில் அம்மனிதன் அவனைப் பழியிடும் மக்களை எதிர்கொள்ளவேண்டும். அவர்கள் இட்ட வழக்குகளுக்கு எதிரான தனது கருத்துக்களைச் சொல்லவேண்டும்’ என்று பதில் அளித்தேன்.
17“எனவே இந்த யூதர்கள் வழக்காடுவதற்காக செசரியாவுக்கு வந்தனர். நான் காலத்தை வீணாக்கவில்லை. மறுநாளே நீதிபதியின் இருக்கையில் அமர்ந்து, அம்மனிதனை அழைத்து வருமாறு கட்டளையிட்டேன். 18யூதர்கள் எழுந்து நின்று அவனைப் பழித்தனர். ஆனால் எந்தப் பயங்கரக் குற்றத்தையும் அவன் செய்ததாக யூதர்கள் கூறவில்லை. அவர்கள் சொல்வார்கள் என்று நான் எண்ணியிருந்தேன். 19அவர்கள் தங்கள் மதத்தைக் குறித்தும் இயேசு என்கிற மனிதனைப் பற்றியும் மட்டுமே கூறினார்கள். இயேசு இறந்தார், ஆனால் பவுல் அவர் இன்னும் உயிரோடிருக்கிறார். என்று கூறுகிறான். 20எனக்கு இவற்றைக் குறித்து விவரமாகத் தெரியவில்லை. எனவே நான் கேள்விகள் கேட்கவில்லை. நான் பவுலை நோக்கி, ‘நீ எருசலேமுக்குப் போய் அங்கு இவை குறித்து நியாயந்தீர்க்கப்பட விரும்புகிறாயா?’ என்று கேட்டேன். 21ஆனால் பவுல் செசரியாவிலேயே வைக்கப்பட வேண்டுமென்று கேட்டான். அவன் இராயர் முடிவெடுக்க வேண்டுமென விரும்புகிறான். ரோமில் இராயரிடம் அவனை அனுப்பும் மட்டும் அவன் இங்கேயே வைக்கப்பட நான் கட்டளையிட்டுள்ளேன்” என்று கூறினான்.
22அகிரிப்பா பெஸ்துவை நோக்கி, “நானும் நாளை இந்த மனிதன் கூறுவதைக் கேட்க விரும்புகிறேன்” என்றான்.
பெஸ்து, “நீங்கள் கேட்பீர்கள்” என்றான்.
23மறுநாள் அகிரிப்பாவும் பெர்னிசும் அங்கு வந்தார்கள். மிக முக்கியமான மனிதர்களுக்குரிய ஆடைகளை உடுத்தி, அதற்கேற்றவாறு நடந்துகொண்டனர். அகிரிப்பாவும் பெர்னிசும் படை அதிகாரிகளும், செசரியாவின் முக்கிய மனிதர்களும் நியாயத்தீர்ப்பு அறைக்குள் சென்றனர். பெஸ்து பவுலை உள்ளே அழைத்து வருமாறு வீரர்களுக்குக் கட்டளையிட்டான்.
24பெஸ்து, “அகிரிப்பா மன்னரும் இங்குள்ள எல்லோரும் இப்போது இம்மனிதனைப் பார்க்கிறீர்கள். இங்கும், எருசலேமிலுள்ள எல்லா யூத மக்களும் இவனுக்கெதிராக என்னிடம் குற்றம் சாட்டியுள்ளனர். அவர்கள் குற்றங்களைக் கூறியபோது, அவனை இனிமேலும் உயிரோடு விட்டு வைக்கக்கூடாதென்று கூக்குரலிட்டனர். 25நான் நியாயங்கேட்டபோது அவனிடம் எந்தத் தவறையும் காணவில்லை. அவனுக்கு மரண தண்டனை விதிக்குமளவிற்கு எந்தக் காரணமும் இருக்கவில்லை. அவன் இராயரிடம் நியாயம் பெற விரும்புகிறான். எனவே அவனை ரோமுக்கு அனுப்பத் தீர்மானித்துள்ளேன். 26இம்மனிதன் செய்த தவறாக இராயருக்கு எழுதுவதற்குத் தீர்மானமாக எதுவும் இல்லை. எனவே உங்களுக்கு முன்பாக, விசேஷமாக அகிரிப்பா மன்னரே, உங்களுக்கு முன்பாக அவனைக் கொண்டு வந்துள்ளேன். நீங்கள் அவனை வினவலாம். இராயருக்கு ஏதாவது எழுதுமாறு கூறலாம். 27ஒரு கைதிக்கு எதிராக எந்தக் குற்றத்தையும் குறிப்பிடாமல் அவனை இராயரிடம் அனுப்புவது மூடத்தனமானது என்று நினைக்கிறேன்” என்றான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for அப்போஸ்தலருடைய நடபடிகள் 25