YouVersion Logo
Search Icon

உபாகமம் 9

9
கர்த்தர் இஸ்ரவேலருடன் இருப்பார்
1“இஸ்ரவேல் ஜனங்களே கவனியுங்கள்! நீங்கள் இன்று யோர்தான் நதியைக் கடந்து செல்லப் போகிறீர்கள். அந்த நிலத்தில் உங்களைவிடப் பெரிய பலம் வாய்ந்த உங்களின் எதிரிகளை வெளியே துரத்துவீர்கள். அவர்களது நகரங்கள் வானத்தைத் தொடும் உயர்ந்த மதில்களைக் கொண்ட பெரிய நகரங்களாகும்! 2அங்குள்ள ஜனங்கள் உயரமாகவும் பருமனாகவும் இருக்கிறார்கள். அவர்கள் ஏனாக்கின் வம்சத்தினர். நீங்கள் அவர்களைப்பற்றி அறிந்திருக்கிறீர்கள். ‘ஏனாக்கியர்களை எவராலும் எதிர்த்து வெல்லமுடியாது’ என்று நம் ஒற்றர்கள் கூறியதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். 3ஆனால் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு முன்பாக இந்த ஆற்றினைக் கடந்து செல்பவராயிருக்கிறார் என்பதை அறிந்துகொள்ளுங்கள். எனவே உங்களால் ஏனாக்கியர்களை எதிர்க்க முடியும். தேவன் அக்கினியைப் போல் அவர்களை அழித்துவிடுவார்! கர்த்தர் அந்த ஜனங்களை அழித்துவிடுவார். அவர்களை உங்கள் முன்னால் வீழச்சியடையச் செய்வார். அவர்களை நீங்கள் வெளியே துரத்திவிடுவீர்கள். நீங்கள் அவர்களை விரைவில் அழித்துவிடுவீர்கள். தேவன் உங்களுக்குச் சொன்னபடியே இது விரைவில் நிகழும்.
4“உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களிடமிருந்து அவர்களை உங்களுக்கு முன்பாகவே துரத்திடுவார். ஆனால், ‘நாம் நல்லவர்கள் என்பதால் கர்த்தர் நம்மை இந்த தேசத்திற்கு சுதந்திரமாக வாழும்படி அழைத்து வந்தார்’ என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ளாதீர்கள். அந்த ஜனங்களை கர்த்தர் வெளியே துரத்தியதற்கு நீங்கள் நல்லவர்களாக இருந்தீர்கள் என்பதால் அல்ல, அவர்கள் தீயவர்களாக இருந்தனர் என்பதே காரணமாகும், 5நீங்கள் நல்லவர்களாயும் நேர்மையாயும் வாழ்ந்ததால் அவர்களது தேசத்தில் சுதந்திரமாக வாழப் போகிறீர்கள் என்பதல்ல. தீயவழிகளில் அவர்கள் வாழ்வதினால் உங்கள் தேவனாகிய கர்த்தர் அவர்களை வெளியே துரத்தினார். அதனாலேயே நீங்கள் அங்கே போகின்றீர்கள். அதுமட்டுமின்றி, தேவன் உங்கள் முற்பிதாக்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியவர்களுடன் செய்த வாக்கினை நிறைவேற்ற விரும்பினார். 6உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் சுதந்திரமாக வசிக்க உங்களுக்கு இந்த நல்ல தேசத்தை தருகின்றார். ஆனால் நீங்கள் நல்லவர்கள் அல்ல, மிகவும் பிடிவாதமுள்ள ஜனங்கள் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
கர்த்தரின் கோபத்தை நினைத்துப்பார்
7“பாலைவனத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு நீங்கள் ஏற்படுத்திய கோபத்தினை நினைத்துப் பாருங்கள், மறந்துவிடாதீர்கள்! நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட நாள் முதல் இவ்விடத்தில் வந்து சேரும்வரை கர்த்தருக்குக் கீழ்ப்படிய மறுத்தீர்கள். 8ஒரேப் மலையிலும் நீங்கள் கர்த்தருக்குக் கடுங்கோபத்தை உண்டாக்கினீக்கள்! கர்த்தர் உங்களை அழித்துவிட நினைக்கும் அளவிற்கு கோபத்தை உண்டாக்கினீர்கள். 9கர்த்தர் உங்களுக்காக உடன்படிக்கையை எழுதிய கற்பலகைகளைப் பெற்றுக்கொள்வதற்கு நான் மலைமீது ஏறிச்சென்றேன். மலை மீதே 40 நாட்கள் இரவும், பகலும் தங்கினேன். நான் உணவு உண்ணாமலும், தண்ணீர் குடிக்காமலும் இருந்தேன். 10அப்போது கர்த்தர் என்னிடம் அந்தக் கற்பலகைகளைத் தந்தார். தேவன் அவரது கட்டளைகளை அந்த இரண்டு கற்பலகைகளில் தமது விரல்களால் எழுதியிருந்தார். தேவன் எழுதிய ஒவ்வொன்றும் நீங்கள் மலையருகில் கூடியபோது அக்கினியின் நடுவிலிருந்து பேசிய வார்த்தைகளின்படியே இருந்தன.
11“இரவும் பகலுமாய் 40 நாட்கள் முடிந்த பின்பு, கர்த்தர் அந்த உடன்படிக்கையின்படி எழுதிய இரண்டு கற்பலகைகளையும் என்னிடம் கொடுத்தார். 12பின் கர்த்தர் என்னிடம், ‘நீ எழுந்து இங்கிருந்து விரைவாக இறங்கிப்போ. நீ எகிப்திலிருந்து அழைத்துவந்த ஜனங்கள் தங்களைத் தாங்களே கெடுத்துக்கொண்டார்கள், என்னுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதை இவ்வளவு விரைவாக நிறுத்திவிட்டார்கள். அவர்கள் பொன்னை வார்த்து தங்களுக்கென்று ஒரு விக்கிரகத்தை உருவாக்கினார்கள்’ என்று கூறினார்.
13“மேலும் கர்த்தர் என்னிடம், ‘நான் இந்த ஜனங்களைக் கவனித்தேன். இவர்கள் மிகவும் பிடிவாதமுள்ளவர்கள்! 14என்னைவிட்டு விடு! இவர்கள் எல்லோரையும் அழித்து விடுகிறேன். இவர்களில் ஒருவரது பெயரைக்கூட தங்கவிடமாட்டேன்! உன்னிடமிருந்து இவர்களைவிட மிகப் பெரிய பலம் வாய்ந்த ஜனங்கள் இனத்தை உருவாக்குவேன்’ என்று கூறினார்.
தங்கக் கன்றுக்குட்டி
15“பின் மலையிலிருந்து திரும்பி கீழே இறங்கி வந்தேன். மலையானது அக்கினியால் எரிந்தது. உடன்படிக்கையை எழுதிய இரண்டு கற்பலகைகளும் என் கைகளில் இருந்தன. 16நான் உங்களைக் கவனித்தபோது உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு எதிராக நீங்கள் பாவம் செய்ததைப் பார்த்தேன். தங்கத்தில் வார்க்கப்பட்ட கன்றுக்குட்டியை உருவாக்கியதை நான் பார்த்தேன்! கர்த்தர் உங்களுக்கு இட்ட வழியை விட்டு நீங்கள் வேகமாக விலகிச் சென்றதைக் கண்டேன்! 17எனவே நான் எடுத்துவந்த இரண்டு கற்பலகைகளையும் ஓங்கி கீழே எறிந்தேன். உங்களின் கண்கள் முன்னாலேயே கற்பலகைகளை துண்டுத் துண்டுகளாகப் போட்டு உடைத்தேன். 18பின் உங்களுடைய பாவங்களுக்காக கர்த்தருக்கு முன்பாக முன்போல் மீண்டும் 40 நாட்கள் இரவு பகலாக விழுந்து கிடந்தேன். எவ்வகை உணவும் உண்ணவில்லை. தண்ணீரும் குடிக்கவில்லை. எதற்காக இதனைச் செய்தேன் என்றால் நீங்கள் செய்த பாவங்கள் மிகக் கொடுமையானவை. நீங்கள் செய்த இந்த செயல்கள் கர்த்தருக்குச் செய்த தீமைகள் ஆகும். கர்த்தருக்குக் கடுங்கோபம் உண்டாக்கினீர்கள். 19கர்த்தருக்கு இருந்த கடுமையான கோபத்தைக் கண்டு நான் பயந்தேன். உங்களை அழிக்கின்ற அளவுக்கு அவர் கோபம் கொண்டிருந்தார். ஆனால், மீண்டும் நான் மன்றாடியதைக் கேட்டார். 20ஆரோன் மீதும் கர்த்தர் கடுங்கோபம் கொண்டு அவனை அழிக்க வேண்டும் என்றிருந்தார்! ஆனால் ஆரோனுக்காகவும் நான் மன்றாடினேன். 21நீங்கள் உருவாக்கிய எரிச்சலூட்டும் அந்தக் கன்றுக்குட்டியை எடுத்து தீயிலிட்டுக் கொளுத்தி தூள் தூளாக்கும்படி செய்தேன். அவற்றைப் புழுதியாகும்படிச் செய்தேன். பின் அந்தச் சாம்பலை மலையிலிருந்து வரும் ஆற்றில் போட்டுவிட்டேன்.
இஸ்ரவேலரை மன்னிக்கும்படி மோசே தேவனிடம் மன்றாடியது
22“தபேராவிலும், மாசாவிலும், கிப்ரோத் அத்தாவாவிலும் கர்த்தருக்குக் கடுங்கோபத்தை உண்டாக்கினீர்கள். 23காதேஸ்பர்னேயாவிலிருந்து விலகி வரச் செய்யும்போது கர்த்தர் உங்களிடம் சொன்னதைக் கேட்காமல் அவருக்குக் கீழ்ப்படியாமல் இருந்தீர்கள். கர்த்தர் உங்களிடம், ‘நீங்கள் போய், நான் உங்களுக்குக் கொடுத்த தேசத்தை சுதந்திரமாக வாழ எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று கூறினார். ஆனால், உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு கீழ்ப்படிய நீங்கள் மறுத்தீர்கள். நீங்கள் கர்த்தரை விசுவாசிக்கவில்லை. கர்த்தருடைய கட்டளைகளையும் கவனிக்கவில்லை. 24நான் உங்களைப்பற்றி அறிந்த நாள் முதற்கொண்டு நீங்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிய மறுத்து வருகிறீர்கள்.
25“ஆகவே கர்த்தருக்கு முன், இரவு பகலாக 40 நாட்கள் விழுந்து கிடந்தேன். ஏனென்றால், கர்த்தர் உங்களை அழித்துவிடுவதாகச் சொன்னார். 26நான் கர்த்தரிடம் இவ்வாறு வேண்டினேன்: கர்த்தாவே! எங்கள் ஆண்டவரே! உமது ஜனங்களை அழித்துவிடாதிரும். அவர்கள் உமக்கு உரியவர்கள். எகிப்திலிருந்து உமது பேராற்றலினாலும், பலத்தினாலும் அவர்களை விடுவித்து அழைத்து வந்தீர். 27உமது சேவகர்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியவர்களிடம் நீர் சொன்ன வாக்கினை நினைத்துப் பாரும். உமக்கு இணங்காமல் போன இவர்களை மன்னியும். இவர்கள் சென்ற தீய வழிகளையும், செய்த பாவங்களையும் பாராது இருப்பீராக. 28அப்படியும் உமது ஜனங்களாகிய இவர்களைத் தண்டிக்க விரும்பினால், அதைக் காணும் எகிப்தியர்கள், ‘கர்த்தர் அவர்களுக்குக் கொடுத்த வாக்கின்படி, இந்த ஜனங்களை அந்த தேசத்திற்கு அழைத்துச்சென்று சுதங்திரமாக்க முடியவில்லை. கர்த்தர் இவர்களை வெறுத்தார். எனவே, அவர் இவர்களை பாலைவனத்திற்குக் கொல்வதற்கென்று அழைத்துச் சென்றார்’ என்றும் கூறுவார்கள். 29ஆனால், அவர்கள் உமது ஜனங்களே! கர்த்தாவே! இவர்கள் எகிப்திலிருந்து உமது பேராற்றலினாலும் பலத்தினாலும் உம்மால் அழைத்து வரப்பட்ட உமது ஜனங்களாவார்கள்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in