YouVersion Logo
Search Icon

பிரசங்கி 12

12
முதுமையின் பிரச்சனைகள்
1நீ இளமையாக இருக்கும்போது உன்னைப் படைத்தவரை நினைவுகூரு. முதுமையின் தீய நாட்கள் வருவதற்குமுன் நினைத்துக்கொள். “நான் என் வாழ்வைப் பயனற்றதாகக் கழித்துவிட்டேன்” என்று நீ சொல்லப்போகும் ஆண்டுகளுக்கு முன் நினைவுவை.
2நீ இளமையாக இருக்கும்போதே, சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும் உன் கண்களுக்கு இருண்டுபோகும் காலம் வருவதற்கு முன்னரே உன்னைப் படைத்தவரை நினைத்துக்கொள் ஒரு புயலுக்குப் பின் மீண்டும், மீண்டும் புயல் வருவதுபோன்று உனக்குத் துன்பங்கள் வந்துகொண்டிருக்கும்.
3அப்போது உனது கைகள் தம் பலத்தை இழக்கும். உனது கால்கள் பலவீனமாகி வளைந்துபோகும். உனது பற்கள் எல்லாம் விழுந்துபோய் உணவை நீ தின்னமுடியாத நிலைமை ஏற்படும். உன் கண்கள் தெளிவாகப் பார்க்காது. 4உன் காதுகள் கேட்க கஷ்டப்படும். வீதியில் உள்ள சப்தங்களை உன் காதுகள் கேட்காது. தானியங்களை அரைக்கிற கல் எந்திரம் கூட உனக்கு அமைதியுடன் இருப்பதாகத் தோன்றும். பெண்களின் பாடலை உன்னால் கேட்கமுடியாது. பறவைகளின் பாடல் ஒலிகூட உன்னை அதிகாலையில் எழுப்பிவிடும். ஏனென்றால் உன்னால் தூங்கமுடியாது.
5நீ மேடான இடங்களைக் கண்டு பயப்படுவாய். உன் வழியில் எதிர்ப்படும் சிறியவற்றுக்குக்கூடப் பயப்படுவாய். வாதுமை மரத்தின் பூக்களைப்போன்று உனது தலைமயிர் வெளுத்துப்போகும். வெட்டுக் கிளியைப் போன்று நீ உன்னையே இழுத்துக்கொண்டு திரிவாய். வாழ்வதற்கான ஆசையை நீ இழந்துவிடுவாய். பிறகு நீ நிரந்தரமான கல்லறை வீட்டிற்குச் செல்வாய். துக்கம் கொண்டாடுகிறவர்கள் தெருவில் கூடி உனது உடலை கல்லறைக்கு எடுத்துச் செல்வார்கள்.
மரணம்
6நீ இளமையாக இருக்கும்போதே வெள்ளிக் கயிறுகள் கட்டுவிட்டு, பொன் கிண்ணங்கள் நொறுங்கும் முன்னால் கிணற்றிலே சால் உடைவது போல் உன் வாழ்வு பயனற்றதாக போகும் முன்னால்,
கிணற்றிலே மூடப்பட்டிருக்கும் கல் உடைந்து நொறுங்கி விழுவது போல், உன் வாழ்வு பயனற்றுப் போகும் முன்னால், உன்னைப் படைத்தவரை நினைத்துக்கொள்.
7உன் உடல் பூமியிலிருந்து வந்தது.
நீ மரித்துப்போகும்போது, உன் உடல் திரும்பவும் மண்ணுக்குப் போகும்.
ஆனால் உனது ஆவி தேவனிடமிருந்து வந்தது.
நீ மரித்துப்போகும்போது உனது ஆவி திரும்பவும் தேவனிடமே போகும்.
8இவ்வாறு அனைத்தும் பொருளற்றுப் போகும். இவை அனைத்தும் காலம் வீணானதிற்குச் சமம் என்று பிரசங்கி கூறுகிறார்.
முடிவுரை
9பிரசங்கி ஞானமுடையவர். அவர் தனது ஞானத்தைப் பயன்படுத்தி ஜனங்களுக்குக் கற்றுக்கொடுத்தார். பிரசங்கி மிக கவனமாகப் படித்து தன் பாடங்களைக் கற்றுத்தர ஒழுங்குபடுத்தினார். 10சரியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுக்க பிரசங்கி மிகக் கடுமையாக முயற்சி செய்தார். அவர் உண்மையானதும் செம்மையானதுமான போதனைகளை எழுதி வைத்தார்.
11ஞானிகளின் வார்த்தைகள் மிருகங்களை வழி நடத்தப் பயன்படும் கூர்மையான கோல்களைப்போல இருக்கும். அவர்களின் போதனைகள் என்றும் உடைந்துபோகாத உறுதியான ஆப்புகளைப் போன்றிருக்கும். வாழ்க்கைக்கு வழிகாட்டும் இப்போதனைகள் நம்பிக்கைக்கு உரியவை. இந்த ஞானப் போதனைகள் எல்லாம், அதே மேய்ப்பனிடமிருந்து (தேவன்) வந்தவை. 12என் மகனே! அப்போதனைகளைக் கற்றுக்கொள். ஆனால் மற்ற புத்தகங்களைப்பற்றி ஜாக்கிரதையாக இரு. ஜனங்கள் எப்பொழுதும் புத்தகங்களை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அதிகமாக வாசிப்பதும் உன்னைச் சோர்வுக்குள்ளாக்கிவிடும்.
13-14இப்போது, இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளவற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய முக்கிய காரியம் என்ன? ஒரு மனிதனால் செய்யக் கூடிய மிக முக்கியமான செயல் என்னவென்றால், தேவனுக்கு மரியாதை செய்து, அவரது கட்டளைகளுக்கு அடிபணியவேண்டும். ஏனென்றால், தேவன் நாம் செய்யும் அனைத்தையும், இரகசியமான செயல்கள் உட்பட அறிந்திருக்கிறார். அவருக்கு அனைத்து நற்செயல்களைப் பற்றியும், அனைத்து தீய செயல்களைப்பற்றியும் தெரியும். ஜனங்கள் செய்யும் அனைத்தையும் அவர் நியாயம்தீர்ப்பார்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in