YouVersion Logo
Search Icon

யாத்திராகமம் 36

36
1“எனவே பெசலேயேல், அகோலியாப், மற்றும் திறமைவாய்ந்த கலைவல்லுநர்கள் அனைவரும் சேர்ந்து கர்த்தர் கட்டளையிட்ட வேலைகளைச் செய்ய வேண்டும். அவர்கள் இந்த பரிசுத்த இடத்தை எழுப்புவதற்கான கைதேர்ந்த வேலையை செய்யத் தேவையான ஞானத்தையும், அறிவையும் கர்த்தர் அந்த மனிதருக்குக் கொடுத்திருக்கிறார்” என்றான்.
2பின் மோசே பெசலெயேலையும், அகோலியாபையும் கர்த்தரால் திறமை வழங்கப்பட்ட பிற கலைவல்லுநர்களையும் அழைத்தான். வேலையில் உதவ விரும்பியதால் அவர்களும் ஒன்றாகக் கூடினார்கள். 3இஸ்ரவேல் ஜனங்கள் காணிக்கையாகக் கொண்டு வந்த எல்லாப் பொருட்களையும் மோசே இந்த ஜனங்களுக்குக் கொடுத்தான். தேவனின் பரிசுத்த இடத்தை எழுப்புவதற்கு அவர்கள் அந்தப் பொருட்களைப் பயன்படுத்தினார்கள். காலைதோறும் ஜனங்கள் தங்கள் விருப்பதின்படி காணிக்கைகளை கொண்டு வந்தனர். 4பின்னர் கலை வல்லுநர்கள் பரிசுத்த இடத்தில் தாங்கள் செய்யும் வேலையை விட்டு மோசேயிடம் பேசுவதற்குச் சென்றார்கள். அவர்கள், 5“ஜனங்கள் மிகுதியாகப் பொருட்களைக் கொண்டு வந்துள்ளனர்! கூடார வேலையை முடிப்பதற்குத் தேவையான பொருளைக் காட்டிலும் அதிகமான பொருள்கள் உள்ளன!” என்றார்கள்.
6மோசே இந்தச் செய்தியை பாளையத்தைச் சுற்றிலும் அறிவித்து: “பரிசுத்த இடத்தின் வேலைக்கு இனிமேல் எவரும் எதையும் காணிக்கையாக தரவேண்டாம்” என்றான். இவ்வாறு ஜனங்கள் அளவுக்கதிகமாகக் கொடுப்பதைக் கட்டாயமாக நிறுத்த வேண்டியதாயிற்று. 7தேவனின் பரிசுத்த இடத்தை எழுப்புவதற்கு ஜனங்கள் தேவைக்கு அதிகமான பொருட்களைக் கொண்டு வந்திருந்தார்கள்.
பரிசுத்தக் கூடாரம்
8பரிசுத்தக் கூடாரத்தை திறமையுள்ளவர்கள் அமைக்கத் தொடங்கினார்கள். மெல்லிய துகில், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்பு நூல்களாலும் அவர்கள் பத்துத் திரைகளை உண்டாக்கினார்கள். திரைகளில் சிறகுகளுள்ள கேரூப் தூதர்களின் சித்திரங்களைத் தைத்தனர். 9ஒவ்வொரு திரையும் 28 முழ நீளமும் 4 முழ அகலமுமாக ஒரே அளவுடையதாய் அமைந்தன. 10பணி செய்வோர் இரண்டு வெவ்வேறு திரைகளாக அத்திரைகளை இணைத்தனர். ஐந்து திரைகளை ஒரே திரையாகவும், மற்றும் ஐந்து திரைகளை இன்னொரு திரையாகவும் இணைத்தனர். 11ஒரு திரையின் கடைசிப் பகுதியில் நீலத்துணியால் துளைகளைச் செய்தனர். மற்றொரு திரையின் கடைசிப் பகுதியிலும் அவ்வாறே செய்தனர். 12ஒரு திரையின் இறுதிப் பகுதியில் 50 கண்ணிகளும் மற்றொரு திரையின் இறுதிப் பகுதியில் 50 கண்ணிகளும் இருந்தன. அவ்வளையங்கள் எதிரெதிராக அமைந்தன. 13பின் அவர்கள் அத்திரைகளை இணைப்பதற்கு 50 பொன் வளையங்களைச் செய்தனர். எனவே பரிசுத்தக் கூடாரம் ஒரே துண்டாக இணைக்கப்பட்டது.
14பரிசுத்தக் கூடாரத்தை மூடி மறைத்து நிற்குமாறு அந்தத் திறமைச்சாலிகள் மற்றொரு கூடாரத்தை அமைத்தனர். வெள்ளாட்டின் மயிரால் பதினொரு திரைகளைச் செய்தனர். 15எல்லாத் திரைகளும் 30 முழ நீளமும் 4 முழ அகலமும் கொண்ட ஓரே அளவுடையனவாய் இருந்தன. 16பணியாட்கள் ஐந்து திரைகளை ஒன்றாகவும், பிற ஆறு திரைகளை ஒன்றாகவும் இணைத்தனர். 17ஒரு திரையின் இறுதியில் 50 துளைகளை அமைத்தனர். மறறொரு திரையில் இறுதியிலும் அவ்வாறே செய்தனர். 18பணியாட்கள் 50 வெண்கல வளையங்களை இரு திரைகளையும் சேர்த்து ஒரே கூடாரமாக இணைப்பதற்காகச் செய்தனர். 19பரிசுத்தக் கூடாரத்திற்கு அவர்கள் மேலும் இரண்டு மூடுதிரைகளை செய்தனர். ஒரு மூடுதிரை சிவப்புத் தோய்க்கப்பட்ட ஆட்டுக்கடாவின் தோலாலானது. மற்றொரு மூடுதிரை மெல்லிய தோலினாலானது.
20பிறகு அந்த வல்லுநர்கள் பரிசுத்த கூடாரத்தைத் தாங்குவதற்காக சீத்தீம் மரத்தினால் சட்டங்களை அமைத்தனர். 21ஒவ்வொரு சட்டமும் 10 முழ நீளமும் 1 1/2 முழ அகலமும் உடையதாய் இருந்தது. 22இரண்டு பக்கத்திலும் தூண்கள் குறுக்குத் துண்டுகளால் இணைக்கப்பட்டு ஒவ்வொரு சட்டமும் அமைக்கப்பட்டது. பரிசுத்தக் கூடாரத்தின் ஒவ்வொரு சட்டமும் அவ்வாறு அமைந்தது. 23பரிசுத்தக் கூட்டத்தின் தெற்குப் புறத்திற்கு 20 சட்டங்களைச் செய்தனர். 24பின் அந்தச் சட்டங்களுக்கு 40 வெள்ளி பீடங்களைச் செய்தனர். ஒவ்வொரு சட்டத்திற்கும் இரண்டு பீடங்கள் இருந்தன. 25அவர்கள் மறுபக்கமாகிய (வடபுறத்திற்கு) 20 சட்டங்களைச் செய்தார்கள். 26ஒவ்வொரு சட்டத்திற்கும் இரண்டு பீடங்களாக 20 சட்டங்களுக்கு 40 வெள்ளி பீடங்களைச் செய்தனர். 27பரிசுத்த கூடாரத்தின் பின் பகுதியாகிய மேற்கு புறத்திற்கு 6 சட்டங்கள் செய்தனர். 28மேலும் பரிசுத்த கூடாரத்தின் பின் மூலைகளுக்கென்று 2 சட்டங்கள் செய்தனர். 29இந்தச் சட்டங்கள் அடிப் புறத்தில் ஒன்றாக இணைக்கப்பட்டன. மேலே இந்த மூலை சட்டங்களை ஒரு வளையம் தாங்கிக்கொண்டிருந்தது. இரண்டு மூலைகளுக்கும் அவர்கள் அவ்வாறே செய்தனர். 30பரிசுத்தக் கூடாரத்தின் மேற்குப் புறத்தில் மொத்தம் எட்டுச் சட்டங்கள் இருந்தன. ஒவ்வொரு சட்டத்திற்கும் இரண்டு பீடங்கள் வீதம் 16 வெள்ளியாலாகிய பீடங்கள் அமைந்தன.
31பரிசுத்தக் கூடாரத்தின் முதல் பக்கத்திற்கு சீத்திம் மரத்தாலான ஐந்து தாழ்ப்பாள்களைப் பணியாட்கள் செய்தனர். 32மறுபக்கத்திற்கு ஐந்து தாழ்ப்பாள்களும், பரிசுத்தக் கூடாரத்தின் பின்புறத்திற்கு (மேற்கு) ஐந்து தாழ்ப்பாள்களும் அமைத்தனர். 33சட்டத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குச் செல்லும்படியாக மத்தியிலுள்ள தாழ்ப்பாளைச் செய்தனர். 34தாழ்ப்பாள்களைத் தாங்கிக்கொள்வதற்குப் பொன்னால் வளையங்களைச் செய்தனர். தாழ்ப்பாள்களில் பொன் முலாம் பூசினர்.
35மெல்லிய துகில், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்புநிற நூல்களையும் மகாபரிசுத்த கூடாரத்தின் நுழைவாயிலுக்கான திரையைச் செய்வதற்குப் பயன்படுத்தினர். திரையில் கேருபீன்களின் சித்திரங்களைத் தைத்தனர். 36சீத்திம் மரத்தால் நான்கு தூண்களைச் செய்து அவற்றிற்குப் பொன் முலாம் பூசினர். அவற்றிற்குப் பொன் கொக்கிகளைச் செய்தனர். அவற்றிற்கு நான்கு வெள்ளி பீடங்களைச் செய்து வைத்தனர். 37கூடாரத்தின் வாயிலை மூடுவதற்குத் திரைகள் அமைத்தனர். அவர்கள் இளநீலம், இரத்தாம்பரம், சிவப்பு நிற நூலையும், மெல்லிய துகிலையும் இத்திரையைச் செய்வதற்கு உபயோகப்படுத்தினர். அத்திரையில் சித்திரங்களை நெய்தனர். 38பின் அவர்கள் நுழைவாயிலின் திரைக்காக ஐந்து தூண்களையும் அதன் கொக்கிகளையும் அமைத்தனர். அவர்கள் தூண்களின் மேற் பகுதிகளையும் திரைத்தண்டுகளையும் பொன் தகட்டால் மூடினார்கள். அத்தூண்களுக்கு ஐந்து வெண்கல பீடங்களைச் செய்தனர்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for யாத்திராகமம் 36